Loading ....

12th Tamil - Revision Exam (2021-2022) - Model Question Paper - Public Exam

                                                                      



12th Tamil - Revision Exam (2021-2022) - Model Question Paper 


 அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினா விடைகள்


திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி




திருப்புதல் தேர்வு

மாதிரி வினாத்தாள்-1 (2021-2022)


நேரம்: 3:மணி   வகுப்பு-12     மதிப்பெண்:90


பொதுத்தமிழ்

                                                                          விடைகள்


பகுதி - 1


அனைத்து வினாக்களுக்கும் விடை தருக         14 x 1 = 14

    

1.இ) அடிஎதுகை, சீர்மோனை

2.அ) செய்யாமல் செய்த உதவி

3.ஆ) இராமன், சுக்ரீவன்

4.இ) காளையில் பு+த்து மல்லிகை மனம் வீசியது

5.இ) முரண் பண்பு

6.ஈ) பூமணி

7.ஆ) கணிதம்

8.இ) தொல்காப்பியம்

9.ஆ) சோழன் நலங்கிள்ளியை, கோவு+H;கிழார்

10.இ) மாநகரத் தொடர்வண்டி

11.அ) பொருட்குறிப்பு

12.இ) முன்னிலைப் பன்மை வினைமுற்று

13.ஆ) வினைத்தொகை

14.இ) 2, 4, 1, 3


பகுதி – 2


பிரிவு – 1


எவையேனும் மூன்றனுக்கு விடை தருக                             3 x 2 = 6

15.செந்நிறத்து வானம்போலத் தங்கள் கைகள் சிவந்திட உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வை வெள்ளம் அவர்களின் திரண்ட தோள்மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும். இந்த அழகினை வியந்து பாடச் செந்தமிழன் துணை வேண்டுமெனக் கவிஞர் சிற்பி கூறுகிறார்.


16.கலிவிழா - திருமயிலையில் நடைபெறும் எழுச்சி மிக்க விழா

    ஒலிவிழா - திருமயிலையில் நடைபெறும் ஆரவார விழா


17. ஓருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழைக் கெடுத்துச் சிறுமையும் வறுமையும் தருவது சூது ஆகும். 


18. இறைமகனுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களைக் கண்டு மனம் பொறுக்காத மக்கள். "இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே! வானம் இடிந்து விழவில்லையே! கடல்நீர் வற்றிப்போகவில்லையே! இந்த உலகம் இன்னும் அழியாமல் தாமதிப்பதும் ஏனோ" என வருந்திப் புலம்பினர்.


பிரிவு – 2


எவையேனும் இரண்டனுக்கு விடைதருக           2 x 2 = 4

19.புக்கில்:

புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கும். 

தன்மனை:

திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் தன்மனை என அழைக்கப்பட்டது.


20.பருவநிலை மாற்றங்களை அறிந்து எந்தப் பருவத்தில் எதைப் பயிர் செய்தால் விளைச்சல் கைகூடி வரும். உழைப்புக்குப் பலன் கிட்டும் என்பதைத் தெரிந்து பயிர் செய்ய வேண்டும். 

இல்லையென்றால் மழைக்காலத்தில் உப்பு விற்கும் கதையாகிடும். அதுபோல காலத்தோடு செய்ய வேண்டிய செயலைக் காலம் கடத்திச் செய்வதன் மூலம் அச்செயலுக்குக் கிடைக்க வேண்டிய பலன் முழுமையாகக் கிடைக்காமல் போகலாம். 

ஆகவே அந்தந்தக் காலத்தில் செய்ய வேண்டியவற்றைச் சரியாக நேர்த்தியாக செய்ய நேர மேலாண்மை மிக மிக அவசியம். 


21.நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள், கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்றவை அக்காலத்துக் கல்விமுறையில் மனைப் பயிற்சிக்கு உதவிய நூல்களாகும். 


பிரிவு – 3


 எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                   7 x 2 =14 

                           

22 . நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்த கவனம் அறிவைப் பெறுவதற்கும் அடிப்படைத் தேவையாகும். (பக்:70)


23.கலை – நுட்பம், ஆடை, கல்வி, கலைமான்

களை – நீக்கு, அழகு

கழை - மூங்கில்

கழை காட்டில் தீப்பிடித்ததால் களைசெடிகளுடன் சேர்ந்து கலைமான்களும் தீக்கிரையாகின. (பக்:44)


24.அ) ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது

    ஆ) வானம் பார்த்த பு+மியில் பயறு வகைகள் பயிரப்படுகின்றன. (பக்:102)

 

25.ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக

அ) பழித்தனர் - பழி+த்+த்+அன்+அர்

பழி – பகுதி

த் - சந்தி

த் - இறந்தகால இடைநிலை

அன் - சாரியை

அர் - பலர்பால் வினைமுற்றுவிகுதி (பக்:199)


ஆ) வந்து – வா(வ)+த்(ந்) +த் +உ

வா – பகுதி 'வ' எனக் குறுகியது விகாரம்

த் - சந்தி, 'த்', 'ந்' ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

உ – வினையெச்சவிகுதி   (பக்:9)


26.கலைச்சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொல் எழுதுக

    அ) Stapler - கம்பி தைப்புக் கருவி (பக்:218)

    ஆ) Jurisdiction -  அதிகார எல்லை (பக்:128)


27. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

அ) பிள்ளைக்கு (குழந்தைக்கு) உடம்பு சரியில்லை மூன்று நாட்களாகக்   சிரமப்படுகிறது. (பக்:127)

ஆ) வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு இழுத்துக் கொண்டு போனார். (பக்:127)


28.ஏதேனும் ஒன்றினுக்குப் புணர்ச்சி விதி தருக

அ) வெங்கதிர் - வெம்மை + கதிர்

'ஈறுபோதல்' ,  வெம்கதிர்

'முன்னின்ற மெய்திரிதல்' , வெங்கதிர் (பக்:9)


   ஆ) முன்னுடை – முன் + உடை

'தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்' , முன்ன் + உடை

'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' , முன்னுடை (பக்:199)


29. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க

தாமரை – பூ

தாமரை – தா + மரை  = தாவுகின்ற மான்

தாமரை மலர் நமது நாட்டின் தேசிய மலராகும்.

புலி வேட்டையாடும் போது வேகமாகத் தா(வும்) மரையின் (தாவுகின்ற மானின்) ஓட்டம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.


30.ஒரு விகற்பம்

ஒரு விகற்பம் என்றால் வெண்பாவின் எல்லா அடிகளும் ஓரே எதுகை பெற்று வருவது ஆகும்.

பல விகற்பம்

பல விகற்பம் என்றால் வெண்பாவின் அடிகளில் வேறுவேறு எதுகை பெற்று வருவது ஆகும்.








பகுதி – 3


பிரிவு-1


ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக                         2 x 4 = 8


எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக


31.இடம்:

இப்பாடல் வரி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.


பொருள்:

ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தின் இருளை அகற்றுவன இரண்டு ஒன்று சூரியன், மற்றொன்று தனக்கு நிகர் இல்லாத தமிழ்மொழி என்பதே இத்தொடரின் பொருளாகும். 

விளக்கம்:

எப்போதும் ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த உலகின் இருளை அகற்றும் கதிரவன் மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, சான்றோரால் தொழப்படுகின்ற ஒன்றாகும். தமிழோ, மலையில் தோன்றினாலும் மக்களின் அறியாமை இருளை அகற்றும் சிறப்புடையது.


32.நாட்டிய அரங்கின் அமைப்பு:

திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து  

   மாறுபடாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். 

பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர்.

தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர்.

அரங்கத்தின் நீளம் எட்டுக்கோல், அகலம் ஏழுகோல், உயரம் ஒருகோல்.

உத்திரப்பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கும் இடைவெளி நான்குகோல் அளவு

அரங்கத்தின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் இரு வாயில்கள்

தூண்களின் நிழலானது அவையிலும் நாடக அரங்கிலும், விழாதபடி நல்ல அழகான நிலை விளக்குகள் அமைந்திருந்தன.

ஒருமுகத்திரை, பொருமுகத்திரை, கரந்துவரல் திரை என மூன்றுவகையாக திரைகள் அமைத்தனர்

ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானம் அமைந்திருந்தது.

சிறந்த முத்துகளால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர்.

இவ்வாறு எங்கிருந்து பார்த்தாலும் நாட்டிய நிகழ்ச்சி காணத்தக்க வகையில் திட்டமிடப்பட வேண்டும் என்பதும், ஆட்ட அரங்கு, ஆட்டத்தைக் கண்டு சுவைப்பவர் அமரும் அவையைவிட உயரமாக இருக்க வேண்டும் என்பதும் தெளிவுபடக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


33.இளம் பெண்கள் அனைவரும் இணைந்து ஆரவாரத்தோடு கொண்டாடி மகிழும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை. மயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பு+ரில் கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குத் திசை தோறும் பு+சையிடும் பங்குனி உத்திர திருவிழா ஆரவாரத்தோடு நடைபெற்றது என திருஞான சம்பந்தர் கூறுகிறார்.


34.உவமை:

    யானை புகுந்து உண்ணத் தொடங்கும் நிலத்தில் விளைந்த நெல்கதிர் அதன் வாயுள் புகுவதை விட கால்களில் மிதிபட்டு அழிவது மிகுதியாகி கெட்டுப் போகும்.

பாடல் பொருள்:

    முறையறியா மன்னன் மக்களை வற்புறுத்தி வரியை வசூல் செய்தால் மக்கள் துன்பப்பட்டு வரியைக் கொடுப்பர். அரசன் தனது தேவைக்கு அதிகமாக வரி வசூல் செய்தால் நாட்டு மக்கள் அவனது ஆட்சியை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்

உவமையும் பொருளும் பொருத்தம்:

    முறையறியா மன்னன் மக்களை வற்புறுத்தி வரியை மக்களிடம் இருந்து பெறுவது யானை புகுந்து உண்ணத் தொடங்கும் நிலத்தில் விளைந்த நெல்கதிர், அதன் வாயினுள் புகுவதைவிடக் கால்களில் மிதிபட்டு அழிவது மிகுதியாகவே இருக்கும். எவ்வித நலமும் கிடைக்காது. யானை தான் உண்ணும் அளவை விட கால்களால் அழிப்பது மிகுதியாதல் போல், அரசன் தனக்குத் தேவையான அளவையும் பெறாமல், அழிவு அதிகமாகவே இருக்கும்.

    அரசன் முறையறிந்து வரி வசூலித்தால் நாட்டு மக்கள் விருப்பத்தோடு அளித்து மக்களும் மகிழ்ச்சியோடு வாழ நாட்டின் செல்வ வளம் பெருகும்.

    முறை அறியாது வரி வசூலிக்கும் மன்னனுக்கு யானையும், அதனால் அழியும் மக்களுக்கு மிதிபட்டு அழியும் கதிர்களும் உவமையாயின.


பிரிவு-2


எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக   2 x 4 = 8

35.ஒலிக்கோலம்:

இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்

ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப்பின்னல்) என்பர்

வன்மை உணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.

சான்று: கடந்தடு தானை…… (புறம்:110)

இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்

சான்று: படாஅம் ஈத்த…. (புறம்:145)

சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்பவரும் தன்மையும் உண்டு.

சான்று: புணரின் புணராது…..(நற்:16)

சொல்விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் இடம்பெறுவது உண்டு.

சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை….(புறம்:290)

இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க பண்புகளாகும்.


36.விரிந்த குடும்பம்:

தனிக்குடும்ப அமைப்பில் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழ்வது விரிந்த குடும்ப அமைப்பு முறையாகும். 

கூட்டுக்குடும்பம்:

இந்த விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே கூட்டுக் குடும்பமாக இன்றைய சமூகத்தில் மாற்றம் பெற்றுள்ளது. கூட்டுக் குடும்பம் என்பது பெற்றோர், அவர்களது மணமாகாத பிள்ளைகள், மணம் முடித்த பிள்ளைகள் அவர்களது துணைவர், அவர்களது பிள்ளைகள் இணைந்து வாழ்வதாகும். சில நேரங்களில் கூட்டுக்குடும்பங்களில் பெற்றோரின் உடன்பிறந்தவர்கள், பெற்றோர்களின் தாய், தந்தை, இரத்த உறவால் பிணைக்கப்பட்ட நேர்வழி, கிளைவழி உறவினர்கள் என அனைவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பமாகும்.


37.வேளாண் மேலாண்மை பற்றி நான் பரிந்துரைக்கும் கருத்துகள்:

சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல்

உரிய நேரத்தில் விதைத்தல்

நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல்

அறுவடைக்குப் பின் பாதுகாத்தல்

உரிய  விலை வரும்வரை இருப்பு வைத்தல்

என்று ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும், நிருவாக நெறியும் இணைந்தால் வேளாண்மை செழிக்கும்

கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும், நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதைக் கம்பர்.

"வையகம் முழுவதும் வறிஞன் ௐபும் ஓர்

செய் எனக் காத்து இனிதுஅரசு செய்கின்றான்" (பாலகாண்டம் - 179)

என்கிறார். வறியவன் ஒருவன் தன் சிறு வயலைப் பாதுகாப்பது போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்தான் என்று அவர் குறிப்பிடுகிறார். 

மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மையுடையதே

"இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல் களைக்கட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்" (அறநெறிச்சாரம்-16)

என்கிற நெறியைச் செய்பவர்களே சிறந்த மேலாளர்களாகவும் நிருவாகிகளாகவும் இருப்பார்கள். அவர்களில் பணிபுரிபவர்கள் பணியைப் பாரமாக்காமல் சாரமாக்குவார்கள். 


38. ஆசிரியர் முதலில் மாணாக்கர்களின் வலக்கை ஆள்காட்டி விரலைப் பிடித்துத் தட்டில் பரப்பி வைத்துள்ள அரிசி அல்லது தானியங்களில் எழுதிக்காட்டுவார். மணலில் எழுத்தின் வரிவடிவை எழுதுவார். மாணாக்கர் ஒலி வடிவை நன்றாகச் சொல்லத் தெரிந்த பின்புதான் வரிவடிவை ஓலையில் வரைந்து காட்டுவார். ஓலையை இடக்கையில் பிடித்து, வலக்கையால் எழுத்தாணியைக் கொண்டு எழுதிப் பழக்குவார். எழுத்தாணியைப் பிடித்து எழுதும்போது ஓலையைத்தான் நகர்த்துவார். எழுத்தாணி பிடித்த இடத்திலிருந்தே வரையும்.

   ஓலையில் வரிவரியாக எழுத்தின்மீது மற்றோர் எழுத்துப்படாமலும், ஒருவரியின் மீது மற்றோர் வரி இணையாமலும் போதிய இடம் விட்டு எழுதுவார்கள். கல்வெட்டுகளில் கல்தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டன. களிமண் பலகையிலும் எழுத்தாணி கொண்டே எழுதினர். எழுத்துகளின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்து. காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படு;த்திக் காகிதங்களில் எழுதும் முறையைக் கற்றுக் கொண்டனர். காகிதங்களில் எழுதும்போது கையை நகர்த்தி எழுதுவர்.


பிரிவு-3

  எவையேனும் மூன்றனுககு மட்டும் விடைதருக 3 x 4 = 12     

39.பழமொழி விளக்கம்:

    ஒரு செயலைச் செய்வதற்கான முயற்சியை நாம் தொடர்ந்து மேற்கொண்டோம் என்றால் முடிவில் நாம் எண்ணிய நோக்கம் நிச்சயமாக நிறைவேறும். 

வாழ்வியல் நிகழ்வு:

   கபடி விளையாட்டில் சிறந்து விளங்கும் என் நண்பன் வேலவன். மண்டலஅளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள அவனது பெற்றோர் சம்மதிக்கவில்லை. எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பதால் படிப்பில் அவன் கவனம் சிதறுகின்றது என்று அவன் பெற்றோர் நினைத்தனர். வேலவன் விளையாடச் செல்லவில்லை என்றால் தங்கள் அணி தோல்வியை அடைந்துவிடும் மேற்கொண்டு மாவட்ட அளவிலோ மாநில அளவிலோ விளையாட முடியாது என்பதை அறிந்த அவன் பள்ளி கபடி விளையாட்டு வீரர்கள் வருத்தம் அடைந்தனர். 

   அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலவன் வீட்டிற்குச் சென்று அவனது பெற்றோரிடம் கேட்பது என்று முடிவு செய்து அனைவரும் வேலவன் வீட்டிற்குச் சென்று அவனது பெற்றோரிடம் தொடர்ந்து கேட்டனர்.

  மாணவர்கள் கேட்டதால் வேலவனின் பெற்றோர் வேலவனை அழைத்து இனிமேல் ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவன் விளையாட அனுமதி அளித்தனர். எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது உண்மைதான்.


40.சொற்பொருள் பின்வருநிலையணி

அணி இலக்கணம்

   செய்யுளில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து தந்த பொருளையே திரும்பத் திரும்ப தந்தால் அது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

சான்று:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அவ்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சான்று விளக்கம்:

   எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.

அணிப்பொருத்தம்:

   இக்குறட்பாவில் பொருள் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ஓரே பொருளைத் தருவதால் இக்குறட்பாவில் சொற்பொருள் பின்வரும் நிலையணி இடம்பெற்றுள்ளது. 


(அல்லது)


இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி நிரல்நிறை அணியாகும்

அணி இலக்கணம்:

    ஒரு செய்யுளில் முதலில் ஒரு சொல்லையும் பொருளையும் வரிசையாக (நிரலாக) நிறுத்தி, அவ்வரிசை படியே பொருள் கொள்ளும் முறை நிரல் நிறையாகும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல் நிறை அணியாகும். 

சான்று:

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது'

பாடல் பொருள்:

இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும். 

அணிப்பொருத்தம்:

இக்குறட்பாவில் அன்பு, அறன் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே இந்தத் திருக்குறள் நிரல்நிறை அணியாகும்.


41.அ) புதிய மொழி புதிய வாழ்க்கை

     ஆ) மொழிகளின் அறிவு ஞானத்தின் திறவுகோல் / வழித்தடம்

     இ) என் மொழியின் எல்லை என் உலகத்தின் எல்லை

     ஈ) கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு


42.                       புதிய பூமி


முன்னுரை:

   நா.காமராசன் தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக் கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனகவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். 'புதுக்கவிதை ஆசான்' என்று அழைக்கப்பட்ட நா.காமராசன் அவர்கள் எழுதியுள்ள இப்பாடலின் நயங்களைக் காண்போம். 

மையக்கருத்து:

   இல்லாமை என்பது இல்லாமல் ஆகவேண்டும் நாடெங்கும் வளமை செழிக்க வேண்டும்

சொல்நயம்:

   சிறந்த சொற்களைக் கொண்டு கவிதையை நயம்படப் பாடியுள்ளார் கவிஞர் இப்பாடலில் அடைச்சொல்லைக் கவிஞர் பயன்படுத்தியுள்ளார்.

சான்று:

   அடைச்சொற்கள்: பூமிச்சருகாம், முத்து பூத்த கடல், புதிய தென்றல், விண்மீன் காசு, இரவெரிக்கும் பரிதி போன்ற சொற்கள் நயமாக அமைந்து பாடலின் பொருளைத் தெளிவாக்குகிறது. 

பொருள் நயம்:

   இப்பூமியில் இல்லாமை என்பது இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இரவலர்கள் இருக்கக் கூடாது. ஏழைகள் இருக்கக்கூடாது, பூமி வளமானதாக இருக்க வேண்டும், இயற்கைப் பேரிடர்கள் வரக்கூடாது. எல்லோரும் வளமாக வேண்டும் என்னும் பொருளை உணர்த்த பொருத்தமான சொற்களைக் கையாண்டு மிகச் சிறந்த முறையில் இக்கவிதையை இயற்றியுள்ளார். 

தொடைநயம்:

   பாடலில் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பது தொடையாகும். 

மோனை நயம்:

     சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும். இப்பாடலில் சீர்மோனையும் அடிமோனையும் பயின்று வந்துள்ளன. 

சான்று:

   பூமிச்சருகாம் - பாலையை - இவ்வரியில் சீர்மோனை பயின்று வந்துள்ளது

புயலைக் - புதிய

இரவில் - இரவலரோடு

இப்பாடலில் அடிமோனை பயின்று வந்துள்ளது. 

      பூமிச்சருகாம்….   இரவில்…….

      புயலை….       இரவெரிக்கும்…… 

   எதுகை நயம்:

   பாடலின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும். இப்பாடலில் சீர் எதுகை, அடி எதுகை பயின்று வந்துள்ளது. 

சீர் எதுகை

சான்று

   இரவில் - இரவலரோடு

அடிஎதுகை:

சான்று:

  இரவில் 

  இரவெரிக்கும்

இயைபு நயம்:

    ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளில் இறுதியில் உள்ள எழுத்தோ அல்லது இறுதிச் சொல்லோ, அல்லது ஓரே அடியில் உள்ள சீர்களின் இறுதி எழுத்துகள் ஒன்றி வந்தாலும் அஃது இயைபு எனப்படும்.

சான்று:

  கடல்களாக்குவேன்

  தென்றலாக்குவேன்

  பேசுவேன் 

  வீசுவேன்

முரண்நயம்:

   செய்யுளில் சொல் அல்லது பொருள் முரண்பட்டு நயம் பயக்கும் வகையில் அமைவது முரண் தொடையாகும் இப்பாடலில் இடம் பெற்றுள்ள முரண் தொடைச் சொல்

  புயல்   x தென்றல்

சந்த நயம்:

  இப்பாடலை ஏற்ற இசைக்கருவியுடன் இசைத்துப் பாடினால் பாடுவோர்க்கும் கேட்பவர்க்கும் இன்பம் பயக்கும் வகையில் மிகுந்த கவி நயத்துடனும், தாளநயத்துடனும், சந்த நயத்துடனும் கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார். 

இப்பாடல் சிந்துப்பா வகையைச் சார்ந்தது. 

அணிநயம்:

  இப்பாடலில் பாலையை முத்து பூத்த கடலாக்குவேன் என்றும், விண்மீனை காசாக்குவேன் என்றும் பாடியுள்ளார். பாலையை முத்துபூத்த கடலாகவும், விண்மீன்களைக் காசாகவும் உருவகப்படுத்தியுள்ளதால் இப்பாடலில் உருவகஅணி பயின்று வந்துள்ளது. 

சுவை நயம்:

   இப்பாடலில் இயற்கைப் பொருட்களை மாற்றம் செய்து இல்லாமையை அகற்றுவேன் என்று கவிஞர் கூறுவதால் இப்பாடலில் மருட்கைச் சுவை பயின்று வந்துள்ளது.

முடிவுரை:

     "காலம் கவிஞனைக் கொன்றது: ஆனால்

      அவன் கவிதை காலத்தை வென்றது"   

   என்ற கூற்றிற்கு ஏற்ப கவிஞர் நா.காமராசன் இக்கவிதையில் கவிதைக்குரிய நயங்கள் எல்லாம் அமைத்து கவிநயங்களால் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

மாணவர்களே!

மையக்கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை மட்டும் எழுதினால் போதும். உங்களுக்கு எளிதாகத் தோன்றும் மூன்று நயங்களை மட்டுமே எழுதுங்கள்







43. அ) நட்பு

நட்பு என்ற மூன்றெழுத்தில்

  அன்பு என்ற ஆசை கலந்து

உயிர் என்ற உன்னத மூச்சை

  உவப்பு என்ற தோணியில்

உறவை விஞ்சி நின்ற

  உன் நட்பு கிடைக்க

செய்த தவம் என்னவோ? – என்று

  இறைவனிடம் கேட்க

சென்ற பிறவியின் தொடர்பு

  என்றார், வியந்தேன் நட்பை எண்ணி! 


    ஆ) இயற்கை

பச்சைப்சேல் காட்சியில் நிலம் அழகு;

நீலநிற வண்ணக் கடலின் அலை அழகு;

இளஞ்சிவப்பு நிற ஒளிக்கற்றை நெருப்பு அழகு;

நிறமற்ற காற்றில் உயிர்வாழும் உயிர்காற்று அழகு;

உலகையை ஒரு குடைக்குள் அடக்கும் ஆகாயம் அழகு;

இத்துணையும் தந்த இயற்கை அன்னை அழகு;

இயற்கை அன்னை பெற்றெடுத்த வளங்கள் அழகு;

இயற்கை அன்னையே உன்னைப் பாதுகாப்பதே எமக்கழகு….!


 பகுதி – 4


  பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக                      

                                                                                                                     3 x 6 = 18

44. அ)  இராமன் அனைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பண்பின் அடையாளமாக விளங்குகின்றான். தந்தை, தாய் மீதான அன்பு, உடன்பிறப்புகள் மீது அன்பு ஆகியவற்றை எல்லைகள் அனைத்தையும் கடந்து இராமன் விரிவுபடுத்துகிறான். வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வேலிகள் அவன் அன்பிற்குத் தடையாக இருக்கவில்லை. 

மகன் என்ற உறவு நிலை: 

சீதையை இராவணன் சிறை எடுத்துச் சென்றபொது அதனைத்தடுத்து இராவணனுடன் போரிட்டு, காயமடைந்து பின் உயிர் துறந்தான் சடாயு.

கேள்விப்பட்ட இராமன் மிகுந்த வருத்தமடைந்தான்.

தன் தந்தை தசரதனின் நண்பனான சடாயுவைத் தன் தந்தையாகக் கருதி, தந்தைக்கு மகன் செய்யும் இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்தான்.

தன்னையே நினைத்துத் தவம் செய்து கொண்டிருந்த எளிய முதியவளான சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.

அவள் இராமனைப் பார்த்ததால் தான் மேற்கொண்ட தவம் பலித்தது என்று கூறி இனிய உணவினை விருந்தாகப் படைத்தாள். 

அவள் அன்பில் மனம் மகிழ்ந்த இராமன் தன் தாயாக அவளை நினைத்து. மகன் தாய்க்குச் செலுத்தும் அன்பைச் செலுத்தினான். 

 உடன்பிறப்பு என்ற உறவுநிலை:

தன்மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்த குகன். தன்னைப் பிரிய மனமில்லாமல் வருந்துவதை இராமன் அறிகின்றான்.

இராமன் குகனிடம் "முன்பு உடன் பிறந்தவர்கள் நான்குபேராக இருந்தோம். இப்போது உன்னையும் சேர்த்து ஐந்து பேராக உள்ளோம்" என்றான். 

இலங்கை சென்ற இராவனனுடன் கடும்போர்புரிந்து திரும்பிய சுக்ரீவனின் செயலைக் கண்டு வியந்த இராமன் சுக்ரீவனிடம் நீ வேறு நான் வேறல்ல என்று கூறுகின்றான்.

சீதையைக் கவர்ந்து வந்த இராவணனின் செயலைக் கண்டித்தான் வீடணன். இராவணன் அவனைக் கடிந்து கொண்டதால் இலங்கையை விட்டு வெளியேறிய வீடணன் இராமனிடம் அடைக்கலமானான். 

வீடணனுக்கு இலங்கையை ஆளும் உரிமையைக் கொடுத்ததுடன் அவனையும் தன் உடன்பிறப்பாக இராமன் ஏற்றுக் கொள்கின்றான். 

இவ்வாறாக இராமன் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய் மீது அன்பு கொண்ட சேயாய், உயிர்தரும் நண்பனாய், உரிமையை வழங்கும் உடன்பிறப்பாய் பிற உயிர்களுடன் உறவு கொண்டிருந்தான்.


(அல்லது)


ஆ) ஈடில்லா உதவி:

   ஒருவன் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையிலும் அவர் நமக்குச் சரியான நேரத்தில் ஏதேனும் உதவி செய்தால், அந்த உதவிக்குக் கைம்மாறாக இந்த நிலவுலகத்தையும், வானுலகத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது. 


உலகினும் பெரிய உதவி:

   ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும். 

பயன் எதிர்பாராத உதவி:

   ஒருவர் எந்தப் பயனையும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்காமல் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும். 

உதவியின் பயன் பனையளவு:

   ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அந்த உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவு உதவியையும் பனையளவாகக் கொண்டு போற்றுவர். 

அறத்தை அறிக:

   ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஆனால் ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்போழுதே மறந்துவிட வேண்டும்.

தப்பிக்க கூடுதல் வழி:

   ஒருவர் எந்த அறத்தை அழித்தாலும் அதிலிருந்து தப்பிப் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து தப்பிப்பிழைக்கும் வழியே கிடையாது. 



45. ஆ)  பண்டைக்காலத்தில் மன்றமென்றும் அம்பலமென்றும் அழைக்கப்படும் மரத்தடியில் உள்ள திண்ணையிலே கற்றல் கற்பித்தல் பணி இயற்கையோடு நடந்தது. 

கல்விப்பயிற்சிக்காக வரும் மாணாக்கர்களிடம் ஏட்டின் மீது மஞ்சள் பூசிப் பூசித்து மாணாக்கர்களிடம் வாசிக்கச் சொல்வர் இதனை அகூராப்பியாசம் (எழுத்து அறிவித்தல்) என்பர். 

ஆசிரியர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்ல வேண்டும்.

ஆசிரியர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்லும் 'முறை வைப்பு' முறையில் கற்பித்தல் நடைபெற்றது. 

'மையாடல் விழா' மூலம் மாணாக்கருக்கு எழுத்துகளை எழுதும் முறையை ஆசிரியர் கற்றுக் கொடுப்பார். 

ஆசிரியர் முதலில் தரையில் எழுத அதன்மேல் மாணாக்கர் எழுதுவர். இவ்வாறு எழுத்துகளைக் கற்பித்தனர். மாணாக்கரும் எழுத்துகளை வரிசையாகவும், நன்றாகவும் எழுதக் கற்றுக் கொண்டனர். 

பழைய காலத்தில் எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஓட்டாமல் வரிகோணாமல் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். 

புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.

தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியன மூலமாகவும், ஆத்திசூடி கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்கள் மூலமாகவும் மனனம் செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். 

கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூலம் கற்பித்தல் நடைபெற்றது. 

எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் வரும் முறையும் இருந்தது. 

சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையையும் கற்றுக் கொடுத்தனர்

மாணாக்கர்கள் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர்.

ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள்.

கற்றல் கற்பித்தலில் முக்கியமாக விளங்கிய வாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது.

அரசவையில் கூட வாதுபுரியும்  அளவிற்குக் கற்றல் முறைகள் இருந்தன.

பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.

       "வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

    கடனாக் கொளினே மடநனி இகக்கும்"   - (நன்னூல் - 41)

ஞாபக சக்தியை வளர்க்க தினமும் பூ , மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள். 

இவ்வாறு மாணவனின் எல்லா திறமைகளையும் வளர்க்கும் விதமாகக் கற்பித்தல் இருந்தது. மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.

 

(அல்லது)


ஆ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளில்

ஒலிக்கோலங்கள்

சொற்புலம் 

தொடரியல் போக்குகள்

     ஆகியவை மிக முக்கியமானவையாகும். 

ஓலிக்கோலங்கள்:

இசையோடும் இசைக்கருவியோடும்தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்.

ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப் பின்னல்) என்பர்.

வன்மை உணர்ச்சியை வெளிப்படுத்த பாடல்களில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம்பெறும். 

இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்.

சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்ப வரும் தன்மையும் பாடல்களில் இடம்பெறும். 

சொற்புலம்:

உணர்வும், பொருளும், கலையும், பண்பாடும், வரலாறும், அரசியலும் சொற்களில் பொதிந்து கிடக்கின்றன. 

ஒரு பொருள் குறித்து வரும் பல சொற்களும், பல பொருள் குறித்து வரும் ஒரு சொல்லும் சொல் வளத்திற்குச் சான்று. 

பல்வேறு துறைகள், சூழல்கள், புனைவுகளுக்கும் உரிய வகையில் உணர்வும் தெளிவும் கொண்டதாகச் செழிப்பானதொரு தளத்தைச் சொல் கொண்டிருக்கிறது. 

தனிச்சொல்லாகவும், தொகை மொழியாகவும் சொற்கள் இயங்குகின்றன. 

தொடரியல் போக்குகள்:

பாடலின் தளத்தை முழுமையடைய செய்வது தொடரியல் போக்காகும்.

சொல்பவனுடைய மொழித்திறனை, கேட்பவன் அல்லது வாசிப்பவன் முழுமையாகப் பெற வேண்டும்.

சொல்லப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள்

நேர் நடந்தும்

ஏறியிறங்கியும்

திரும்பியும் சுழன்றும் - இயங்கும்

    இவையே கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் ஆகும். 


46. அ) மொழிப்பற்று:

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, தான் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். 

நெல்லையப்பரிடம் அவர் கூறும்போது, 'நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்ளவேண்டும்' என்று கூறுகின்றார். 

புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும். 

தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி அளிக்கப் பெற்று வளர வேண்டும். 

தாய் மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். 

பிறநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக் கொள்ள முயலவேண்டும். 

புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.

 சமூகப்பற்று

சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். 

ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும்.

"ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள், அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை", என்கிறார். 

பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுககுச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். 

பெண்ணை வீட்டுக்குள்ளே அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார். 

சமூகம் வளர்ச்சி அடையத் தொழில் பெருக வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும் தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார்.

சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பு+மி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். 

நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும்

அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

(அல்லது)


   இந்தியாவின் முதுகெலும்பு கிராமமாகும். அழகியல் தன்மையோடு விளங்கும் கிராமங்கள் இன்று தங்கள் அழகியலை இழந்து கிராமத்திற்கே உரிய இலக்கணங்களை இழந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தமது வடிவழகையும் இழந்து வருகின்றன. 

வாழ்வோடு இணைந்த கிராமம்:

   அதிகாலையில் எழும்பி வீட்டு முற்றத்தைத் தூய்மை செய்து, கோலமிட்டுக் கடவுளைத் தொழுது குதுகலாமாகப் பொழுதினைத் தொடங்கும் வாழ்க்கை கிராம மக்களின் வாழ்வோடு இணைந்திருந்தது. ஏலேலோ பாடும் கிராமத் தென்றலில் தாலேலோ பாடி விவசாயம் செய்த காலம் மலையேற, கணினியில் கானல் நீராய் நம் கிராம மக்களின் வாழ்க்கையும் கரைந்தது. அந்தந்த கிராமத்தில் விளைந்ததை அங்கங்கே தின்று வாழ்ந்த காலத்தில் எந்த நோய்களும் தலை தூக்கியதில்லை. 

அழகை இழக்கும் கிராமங்கள்:

   இன்று பெருகி வரும் நகர்ப்புற நாகரிகத்தினால் கிராமங்கள் தங்கள் அழகை இழக்கின்றன. பாடித் திரிந்த பறவைகளின் ஒலிகள் இப்போது கேட்க முடியவில்லை. மனிதன் நகர்ப்புற நாகரிகத்தை நாடியதால் குளங்கள் குடியிருப்புகளாக மாறிவிட்டன. அகன்ற தெருக்களெல்லாம் தங்கள் இருப்பைச் சுருக்கிக் கொண்டன. கலாச்சார மாற்றங்களால் கூரை வேயப்பட்ட, ஓடுகளால் நிரம்பிய வீடுகள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தீப்பெட்டி போல மாற்றம் பெற்றுள்ளன. எல்லோரும் நீர் இறைக்கும் ஊர்க் கிணறு கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. 

முகவரி இழக்கும் கிராமங்கள்:

   கிராமங்களுக்கே உரித்தான நாட்டுப்புற விளையாட்டுகளை எல்லாம் இன்றைய அலைபேசிகளும், முகநூல்களும், புலனங்களும் முடக்கி விட்டன. பச்சைப்பசேலன வளர்ந்து நிற்கும் நெற்பயிரை இன்று காணமுடியவில்லை. உழுது உணவைத் தந்த வயல்கள் எல்லாம் இன்று குடியிருப்புகளுக்காக அளக்கப்பட்டு எல்லைக் கற்களால் பிரிக்கப்பட்டு வீடுகளாக மாற ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன.

நாகரிக மோகத்தால் அழியும் கிராமம்:

   கிராமத்திற்கே உரிய அன்பும், விருந்தோம்பல் பண்பும், வெள்ளந்தியான பழக்கமும் இன்று கொஞ்சம் கொஞ்சமாகத் தனது இயல்பை இழந்து வருகின்றது. கிராம மக்கள் நகர்ப்புற நாகரிகத்தின் மீது கொண்ட மோகத்தால் இயற்கையை இழந்து நகர்ப்புறம் தேடி வருவதும், ஊடகத்தாக்கமும், சமூக வலைத்தளங்களின் தாக்கமும் இயல்பான கிராம வாழ்க்கையை மாற்றி விடுகின்றன. ஒன்றுக்குள் ஒன்றாக உறவுகளாக இருக்கும் கிராம மக்கள் இன்று நாகரிக மோகத்தால் உறவுகளை மேம்படுத்தும் செயலில் இருந்தும் விலகி விடுகின்றனர். 

   இவ்வாறாக அமைதியான சூழலில் அன்பாக வாழ்ந்து வந்த கிராம மக்கள் தங்கள் இயல்பை மாற்ற விரும்புவதால், தாங்கள் பழகிய, ஓட்டி உறவாடிய கிராமத்தை விட்டு நகர்ப்புறம் செல்வதால் கிராமங்கள் தங்கள் அழகியலை இழப்பதுடன் கிராமங்களுக்கே உரிய இயற்கைத் தன்மையையும் இழந்து தங்களது முகவரியைத் தொலைத்து நகர்புறச் சாயலுடன் புத்துருவாக்கம் அடைகின்றன. 


பகுதி- 5


அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக   4  + 2 = 6

47.

அ) பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி 

      ஏதமில் கருணைப் பெம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற

      வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால்

      நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலர் கரும நோக்கி. 


ஆ) எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுன்டாம் உய்வில்லை

       செய்ந்நன்றி கொன்ற மகற்கு.




 Follow us on (click the below icons to follow)


Want our Latest Posts?

View Our Blogger(Click The Icon Below)

Tamilamuthu 2020 Official

Icons from Flaticon      Contact No : 9843448095  ©Tamilamuthu2020official.blogspot.com


Revision Exam (2021-2022) - Model Question Paper & 

ANSWER KEY  Pdf  


FREE  DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇







Photo by Mockup Graphics on Unsplash





You have to wait 30 seconds to get the download Button.

Download Timer

Post a Comment