12th Tamil - Study Material - Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - January 2022- Model Question Paper
12th Tamil - Public Exam 2021 - 2022
REVISION TEST - JANUARY 2022
Model Question Paper
அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள்
திருப்புதல் தேர்வு - ஜனவரி 2022
( இயல் - 1, 2, 3 )
மாதிரி வினாத்தாள்- 2
நேரம்: 3:மணி வகுப்பு-1 2 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
அறிவுரைகள் :
i) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரி பார்த்துக்கொள்ளவும் அச்சுப் பதிவில் குறை இருப்பின் அறைகண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
ii) நீலம் அல்லது கருப்பு மை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு :
i) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையிணையும் சேர்த்து எழுதுக.
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1. படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக. (பக் : எண் : 77)
அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
இ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
2.“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்” - இவ்வடிகளில் பயின்று
வந்துள்ள தொடை நயம் (பக் : எண் : 18) PTA : 1
அ)அடிமோனை ,அடி எதுகை
ஆ) சீர்மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை , சீர் மோனை
ஈ) சீர் எதுகை
3. பொருத்துக (பக் : எண் : 78)
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி - 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் - 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினால் செய்த நன்றி - 4. நன்மை கடலின் பெரிது
அ) 4 3 2 1
ஆ) 3 4 1 2
இ) 1 2 3 4
ஈ) 2 3 4 1
4.பிழையான தொடரைக் கண்டறிக (பக் : எண் : 17 ) PTA : 2, 6
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலைமீது ஏறி கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
5. பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க (பக் : எண் : 68)
அ) உரிமைத்தாகம் - 1. பாரசீக கவிஞர்
ஆ) அஞ்ஞாடி - 2. பூமணி
இ) ஜலாலுதீன் ரூமி - 3. பக்தவச்சல பாரதி
ஈ) தமிழர் குடும்ப முறை - 4.சாகித்திய அகாதெமி
6. கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய்
பயனிலை என்று வருவதே மரபு
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில்
பிறழ்ந்து வருகிறது (பக் : எண் : 18)
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டு கருத்தும் சரி
ஈ) கருத்து 1 சரி 2 தவறு
7.“உவா உறவந்து கூடும்
உடுபதி இரவி ஒத்தார்” யார் ?யார் ? (பக் : எண் : 68)
அ) சடாயு, இராமன்
ஆ) இராமன், குகன்
இ) இராமன், சுக்ரீவன்
ஈ) இராமன், சபரி
8. யார்? எது? ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய்
அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே (பக் : எண் : 41)
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை ,அஃறிணை
ஈ) விரவுத்திணை உயர்திணை
9. ”எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” -
என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது (பக் : எண் : 68)
அ) தனிக் குடும்ப முறை
ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூக முறை
ஈ) தந்தைவழிச் சமூக முறை
10. ‘அன்பும் அறமும்’ - என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ) எண்ணும்மை
11.இவற்றை வாயிலுக்குச் சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுதீன் ரூமி குறிப்பிடுவது யாது? (பக் : எண் : 68)
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
12.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற
இலக்கண நூல்(பக் : எண் : 18)
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) நன்னூல்
13. ‘ARCHIVE’ -என்பதன் கலைச்சொல்
அ) புனைவு
ஆ) அழகியல்
இ)காப்பகம்
ஈ) நூல்நிரல்
14. .“உவா உறவந்து கூடும்
உடுபதி இரவி ஒத்தார்” யார் ?யார் ? (பக் : எண் : 68)
அ) சடாயு, இராமன்
ஆ) இராமன், குகன்
இ) இராமன், சுக்ரீவன்
ஈ) இராமன், சபரி
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக 3 x 2 = 6
15. முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
16. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
17. கவிஞர் சிற்பி எழுதிய கவிதை நூல்களில் சிலவற்றை எழுதுக.
18. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்கம்தருக.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
19. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக
20. மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை ?
21. புக்கில், தன்மனை – சிறுகுறிப்பு எழுதுக.
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22. உவமைத்தொடர் களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக
அ) உள்ளங்கை நெல்லிக்கனி போல
ஆ) அச்சாணி இல்லாத தேர்போல
23.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
உழை , உளை, உலை
24. வல்லின மெய்கள் இட்டும் நீக்கியும் எழுதுக
மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்பதுன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
25.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக
அ) விம்முகின்ற ஆ) அமர்ந்தனன்
26.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக
அ) உய்வுண்டாம் ஆ) தனியாழி
27.கலைச் சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல் எழுதுக
அ) Bibliography ஆ) Metro Train
28.கீழ்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க
அ) விட்டான் < ஆ) படி <
29.பொருத்தமான வேற்றுமை உருபுகளை சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக
அ) முருகன் வேகம் சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.
ஆ) போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.
30.மொழியின் சொற்றொடர் அமைப்பை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுவதற்கும் உதவுவன எவை ?
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
31. சடாயுவைத் தந்தையாக ஏற்று ,இராமன் ஆற்றிய கடமைகளை எழுதுக.
32. “வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
33. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
34. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
38.தாய்வழிக் குடும்பம் குறித்துச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் செய்திகள் யாவை ?
35.சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக.
36.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் எழுதுக.
37. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்கு செய்யும் உதவிகள் யாவை?
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 = 12
40. “சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்” - குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
அல்லது
நிரல்நிறை அணியைச் சான்று தந்து விளக்குக.
41. கீழ்க்காணும் அழைப்பிதழைப் பத்தியாக மாற்றுக
பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்
நாள்: அக்டோபர் 2 நேரம் : காலை 10:00
இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை
நிகழ்ச்சி நிரல்
தமிழ் தாய் வாழ்த்து
வரவேற்புரை: திருமதி. அரசி, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்.
முன்னிலை : திரு. அமுதன், இயற்கை வேளாண் உழவர்.
தலைமையுரை :திரு. இமயவரம்பன், பேரிடர் மேலாண்மை இயக்குநர்.
கருத்தரங்க தலைப்புகள்
இயற்கை தீர்த்தங்களும் பருவகால மாற்றங்களும் : முனைவர் செங்குட்டுவன்
பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும்: திரு. முகிலன்
நீர் வழி பாதைகளைப் பாதுகாத்தல்: திருமதி. பாத்திமா
பேரிடர் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்: திரு. வின்சென்ட்
நன்றியுரை: பர்வீன், பசுமைப் படை மாணவர் தலைவர்
நாட்டுப்பண்
42.பா நயம் பாராட்டுக: மையக்கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை எழுதுக.
பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி
பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்கி
ஊற்றெடுத்த அன்புரையால் உலுங்க வைத்திவ்
உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?
கற்றுணர்ந்தே அதன் இனிமை காண்பாய் என்று
கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித்
தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட
தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்
- நாமக்கல்கவிஞர்
43. தமிழாக்கம் தருக
அ) A new language is a new life.
ஆ) The limits of my language are the limits of my world.
இ) Learning is a treasure that will follow its owner everywhere.
ஈ) If you want people to understand you, speak their language.
பகுதி – 4
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்
விடை தருக. 3 x 6 = 18
44.அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன் பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
(அல்லது)
ஆ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணை கொண்டு நிறுவுக.
45.அ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக
(அல்லது)
ஆ)குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறதுல - எவ்வாறு? விளக்குக.
46. அ) ’உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்.... கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
(அல்லது)
ஆ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
பகுதி- 5
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6
47.அ) ஓங்கலிடை - எனத் தொடங்கும் தண்டியலங்காரப் பாடலை எழுதுக.
ஆ) ‘பொருள்’ என முடியும் திருக்குறளை எழுதுக.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 9843448095
12 ஆம் வகுப்பு
பொது மாதிரி திருப்புதல் தேர்வு - ஜனவரி 2022.
TAMIL QUESTION PAPER Pdf
download 👇👇👇👇👇 - model question paper - 2
12th Tamil - Public Exam 2021 - 2022
REVISION TEST - JANUARY 2022
Model Question Paper
அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள்
திருப்புதல் தேர்வு - ஜனவரி 2022
( இயல் - 1, 2, 3 )
மாதிரி வினாத்தாள்- 2
நேரம்: 3:மணி வகுப்பு-1 2 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
விடைகள்
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1. இ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
2. இ) அடி எதுகை , சீர் மோனை
3. ஆ) 3 4 1 2
4. இ) காளையில் பூத்த மல்லிகை மனமனம் வீசியது.
5. இ) 2 4 1 3
6. ஆ) கருத்து 2 சரி 1 தவறு
7. ஆ) இராமன், குகன்
8. ஆ) உயர்திணை, அஃறிணை
9. ஈ) தந்தைவழிச் சமூக முறை
10. ஈ) எண்ணும்மை
11. ஈ) இவை அனைத்தும்
12. இ) தொல்காப்பியம்
13. இ) காப்பகம்
14. இ) தொல்காப்பியம்
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக 3 x 2 = 6
15. முயல்வாருள் எல்லாம் தலை:
அறத்தின் வழியாக இல்லறவாழ்க்கை வாழ்பவர்கள் முயற்சி செய்து புகழடைய விரும்பும் எல்லாரை விடவும் தலையானவர் என வள்ளுவர் கூறுகிறார்.
16. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து :
பொய்யான உலகப்பற்று அழிந்து போகக் கூடியதாகும். உலகத்தின் மீது பற்றுக் கொள்வது வீணாகும். என் மண்ணுலகப் பிறவி ஒழிந்தது. ஏனெனில் நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிப்பதாகும்.
17. கவிஞர் சிற்பி எழுதிய கவிதை நூல்கள் :
ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரியநிழல், ஓரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி.
18. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது :
மழைக்காலப் பகற்பொழுதில் சூரியனின் வெளிச்சம் இல்லாமல் நகரமானது மழைமேகத்தால் இருள் சூழ்ந்து காணப்படும்.
மழை பெய்து ஓய்ந்த பின்பு, மழைக்கான சுவடுகள் அழிந்த பின்பு சூரியன் திடீரென தன் முகத்தைக் காட்ட மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கின்றது.
இன்னும் உறிஞ்சப்படாமல் இருக்கும் ஒரு சில மழைத் துளிகளின் மீது விழுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கின்றது.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
19. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்து :
கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும். தொல்காப்பியமும் இதனையே கூறுகின்றது.
'நடைபெற்றியலும்', 'நடை நவின்றொழுகும்' என்னும் சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டுள்ளது.
ஒவ்வொரு பாவும் இவ்வாறே அமைய வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
20. மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை :
உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவையாகும்.
21. புக்கில், தன்மனை
புக்கில்:
புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கும்.
தன்மனை:
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் 'தன்மனை' என அழைக்கப்பட்டது.
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22. அ) உள்ளங்கை நெல்லிக்கனி போல- வெளிப்படையாக, தெளிவாக
தமிழ் ஆசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாக விளங்கியது.
ஆ) அச்சாணி இல்லாத தேர் போல - சரியான வழிகாட்டி இல்லாத
நாட்டை வழிநடத்தும் சரியான தலைவன் இல்லாததால்அச்சாணி இல்லாத தேர் போல நாட்டு மக்கள் சரிவர இயங்க முடியாமல் தவிக்கின்றனர்.
23.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
கலை - நுட்பம், ஆடை, கல்வி, கலைமான்
களை - நீக்கு, அழகு
கழை - மூங்கில்
களை காட்டில் தீ பிடித்ததால் களைச்செடிகளுடன் சேர்ந்து கலைமான்களும் தீக்கிரையாகின.
24. வல்லின மெய்கள் இட்டும் நீக்கியும் எழுதுக
மாணவர்கள் பெற்றோர்களைத் தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்து_ கொள்ள வேண்டும்.
25.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக
அ) விம்முகின்ற - விம்மு + கின்று + அ
விம்மு - பகுதி
கின்று - நிகழ்கால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
ஆ) அமர்ந்தனன் - அமர் + த் ( ந் ) + த் + அன் + அன்
அமர் - பகுதி
த் ( ந் ) - சந்தி , ‘ த்’ ,’ந்’ - ஆனது விகாரம்விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அன் - சாரியை
அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
26.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக
அ) உய்வுண்டாம் - உய்வு + உண்டாம்
விதி 1 : முற்றும் அற்று ஓரோ வழி < உய்வ் + உண்டாம்
விதி 2 : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே < உய்வுண்டாம்
ஆ) தனியாழி - தனி + ஆழி
விதி 1 : இ ஈ ஐ வழி யவ்வும் < தனி + ய் + ஆழி
விதி 2 : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே < தனியாழி
27.கலைச் சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல்
அ) Bibliography - நூல் நிரல்
ஆ) Metro Train - மாநகரத் தொடர்வண்டி
28.கீழ்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க
அ) விட்டான்
1. அண்ணன் பாம்பைப் பிடித்து விட்டான்ன்
2. அண்ணன் பாம்பைப் பிடித்து விட்டான்.
29.பொருத்தமான வேற்றுமை உருபுகளை சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக
அ) முருகன் வேகமாகச் சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.
ஆ) போட்டியில் வெற்றி பெற்றதால் கலைச்செல்விக்குப் பாராட்டுகள் குவிந்தன.
30. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன, திணை, பால், எண், இடம் ஆகியனவாகும்.
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
31. சடாயுவைத் தந்தையாக ஏற்று ,இராமன் ஆற்றிய கடமைகள் :
இராவணன் சீதையைச் சிறையெடுத்துச் சென்ற போது அதனைத் தடுத்துச் சண்டையிட்டுக் காயம்பட்டுத் தன் உயிரை இழந்தான்.
சடாயு. தனக்காக உயிரை இழந்ததை அறிந்து இராமன் தன் தந்தை தசரதனின் நண்பனான சடாயுவைத் தன் தந்தையாக எண்ணினான்.
தந்தைக்கு மகன் எவ்வாறெல்லாம் இறுதிச் சடங்கு மேற்கொள்வானோ அவ்வாறே, பார்ப்பவர்கள் வியக்கும்படியாகக் கரிய அகில் கட்டைகளையும் சந்தனக்கட்டைகளையும் கொண்டு வந்து ஒழுங்காகப் பரப்பி, அதன்மேல் தேவையான தருப்பைப் புற்களை அடுக்கி, பூக்களைத் தூவி, மணலினால் மேடையைத் திருத்தமாக அமைத்தான்.
நன்னீரையும் எடுத்து வந்தான்.
இறுதிச் சடங்கு செய்யக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகக் கருதிய சடாயுவைத் தன் பெரிய கைகளில் தூக்கி வந்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டான்.
32. “வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்:
இப்பாடல் வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இருந்து சில பாடல்களை என்.சத்தியமூர்த்தி என்பவர். ‘தாகங்கொண்டமீனொன்று’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கவிதைத்தொகுப்பில் உள்ளது. அத்தொகுப்பில் உள்ள ‘விருந்தினர் இல்லம்’ என்னும் பகுதியில் இவ்வரி இடம் பெற்றுள்ளது.
பொருள்:
இவ்வுலகில் வாழ்கின்ற நாம், தினமும் சந்திக்கின்ற எதிர்பாராத இன்பம், துன்பம், அவமானம். வக்கிரம், வஞ்சனை எதுவானாலும் அதற்காக நன்றி செலுத்த வேண்டும்.
விளக்கம்:
மனித வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் வருவதில்லை. ஒரே மாதிரியான செய்திகளையும் கொண்டு வருவதில்லை. அதுபோன்றே நம் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களான ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு, வக்கிரம், அவமானம், வஞ்சனை, துக்கம் என்பவை பல வாழ்வியல் வடிவங்களில் வரும். அவை நமக்குப் புதிய உவகையையும், புதிய வழிகாட்டுதல்களையும் தருவதால் ‘வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும்’ என்று கவிஞர் கூறுகிறார்.
33. சினத்தால் வரும் கேடு:
ஒருவனுக்குத் தீமையான விளைவுகள் அனைத்தும் சினத்தாலேயே ஏற்படும் என்பதால், ஒருவரிடமும் சினம் கொள்ளாமல் அதனை மறந்துவிட வேண்டுமென குறள் கூறுகின்றது.
சினம் என்னும் பகை நம்மிடமிருக்கும், நம் முகத்திற்கு அழகு தருகின்ற சிரிப்பையும், உள்ளத்தின் அருளுக்கு அழகு தருகின்ற மகிழ்ச்சியையும் நம்மிடமிருந்து அழிந்துவிடும்.
ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் அவன் சினத்தைக் காக்க வேண்டும். ஏனெனில், சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும்.
சினமானது தன்னை மட்டுமல்ல தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அதுமட்டுமல்லாமல் தனக்குப் பாதுகாப்பாக இருக்கின்ற தெப்பமான சுற்றத்தாரையும் சுட்டழித்துவிடும். எனவே சுற்றம் பேண சினத்தை விடவேண்டும் எனக்குறள் கூறுகின்றது.
34. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவம்
ஒருவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியும், அறச்செயல்கள் செய்தும் வாழுகின்ற நல்ல இல்லறவாழ்வைப் பெறுவான் என்றால், அவன் இல்லற வாழ்க்கையானது அன்பினால் உருவாகும் நல்ல பண்பையும், அறச்செயலினால் உருவாகின்ற நல்ல புகழாகிய பயனையும் அடைவான்.
அறத்தின் வழியாக இலலறவாழ்க்கை வாழ்பவர்கள் முயற்சி செய்து புகழடைய விரும்பும் எல்லோரை விடவும் தலையானவர்.
ஒருவன் இந்நில உலகத்தில் வாழவேண்டிய அறநெறிகளின்படி நின்று வாழ்ந்தான் என்றால், அவன் வானுலக தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவான் என்று முப்பால் கூறுகிறது.
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
36.தாய்வழிக் குடும்பம் குறித்துச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் செய்திகள் :
சங்ககாலத்தில் கண சமூகத்திற்கும் தாயே தலைமை ஏற்றிருந்தார்..
பதிற்றுப்பத்து கூறும் சேர நாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச்ச் சிறந்த சான்றாகும்..
மேலும், ‘செம்முது பெண்டின் காதலாஞ்சிறா அன்” ( புறம் : 276 ) “முளரிமருங்கின் முதியோள் சிறுவன்” ( புறம் : 278 ) என்னும் பாடல் வரிகள் மூலம் ‘இவளது மகன்’ என்றே குழந்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்..
இதன் மூலம் சங்க காலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் அறிந்துகொள்ளமுடியும்.
சங்ககாலத்தில் திருமணத்திற்குப்ப் பின் தன் இல்லத்தில் தொடர்ந்து வாழும் ‘தாயமுறை’ வழக்கத்தில் இருந்துள்ளது.
திருமணத்திற்குப்ப் பின் மனைவியின் இல்லத்திற்குச் சென்று கணவன் வாழ்வது நடைமுறையாக இருந்துள்ளது.
பெண் குழந்தையின் பேறு முதன்மையாக விரும்பப்பட்டது.
தாய்மொழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.
தாய்வழி குடும்பங்களில் பெண்களை குல தொடர்ச்சிக்கு உரியவராக இருந்தனர்.
37. ஒலிக்கோலம்:
இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்
ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப்பின்னல்) என்பர்
வண்மை உணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.
சான்று: கடந்தடு தானை…… (புறம்:110)
இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்
சான்று: படாஅம் ஈத்த…. (புறம்:145)
சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்பவரும் தன்மையும் உண்டு.
சான்று: புணரின் புணராது…..(நற்:16)
சொல்விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் இடம்பெறுவது உண்டு.
சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை….(புறம்:290)
இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க பண்புகளாகும்.
38.விரிந்த குடும்பம்:
தனிக்குடும்ப அமைப்பில் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழ்வது விரிந்த குடும்ப அமைப்பு முறையாகும்.
கூட்டுக்குடும்பம்:
இந்த விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே கூட்டுக் குடும்பமாக இன்றைய சமூகத்தில் மாற்றம் பெற்றுள்ளது. கூட்டுக் குடும்பம் என்பது பெற்றோர், அவர்களது மணமாகாத பிள்ளைகள், மணம் முடித்த பிள்ளைகள் அவர்களது துணைவர், அவர்களது பிள்ளைகள் இணைந்து வாழ்வதாகும். சில நேரங்களில் கூட்டுக்குடும்பங்களில் பெற்றோரின் உடன்பிறந்தவர்கள், பெற்றோர்களின் தாய், தந்தை, இரத்த உறவால் பிணைக்கப்பட்ட நேர்வழி, கிளைவழி உறவினர்கள் என அனைவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பமாகும்.
39. நான் செய்யும் உதவிகள்:
நான் சாப்பிடும் தட்டுகளையும், நான் நீர் அருந்தும் குவளைகளையும் சுகாதாரமான முறையில் நானே தூய்மை செய்வேன்.
எனது படுக்கை விரிப்புகளையும் போர்த்திக் கொள்ளும் போர்வையையும் நானே தினமும் பராமரிப்பேன்.
என்னுடைய ஆடைகள் அனைத்தையும் நானே சலவை செய்து தூய்மையாக உடுத்துவேன்.
என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகளுக்குக் காலை, மாலை என இருவேளைகளிலும் தண்ணீர் ஊற்றுவேன்.
வீட்டைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் என் பெற்றோருடன் இணைந்து கொள்வேன்.
வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பதில் எப்போதும் என் பெற்றோருக்குத் துணையாக இருப்பேன்.
வீட்டிற்குத் தேவைப்படும் பொருட்களைக் கடைக்குச் சென்று வாங்கி வருவதில் முனைப்புடன் செயல்படுவேன்.
தெருக்குழாய்க்குச் சென்று வீட்டிற்குத் தேவையான குடிநீரைக் கொண்டு வருவேன்.
வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க பெற்றோருக்கு உதவியாக இருப்பேன்.
இவ்வாறு நான் வீட்டிற்குத் தேவையான உதவிகளைச் செய்வதால் என் பெற்றோரின் குடும்பப் பணிச்சுமை குறையும் என்பதால் எப்போதும் என் குடும்பத்திற்கு உதவிகள் செய்வேன்.
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 = 12
40. “சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்” - குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வருகிறது.
அணியிலக்கணம்:
கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி அதற்கு ஏற்ப இணையானதொரு பொருளை உருவகம் செய்யாது விட்டு விடுவது ஏகதேச உருவக அணியாகும்.
சான்று விளக்கம்:
சினம் தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாது அவனைச் சேர்ந்த சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். தன்னைச் சேர்ந்த வரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம் நம்மை மட்டுமல்லாமல் நமக்குப் பாதுகாப்பாக இருக்க கூடிய இனம் என்னும் வெப்பத்தை அழித்துவிடும்.
அணிப் பொருத்தம்:
இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள வள்ளுவர் சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே, இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.
அல்லது
நிரல்நிறை அணியைச் சான்று தந்து விளக்குக.
அணி இலக்கணம்:
ஒரு செய்யுளில் முதலில் ஒரு சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள்கொள்ளும் முறை நிரல் நிறை ஆகும். அதாவது சிலசொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து அதனோடு
தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறை மாறாமல் சொல்வது நிரல் நிறை அணி ஆகும்.
சான்று :
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
விளக்கம்:
இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும்.
அணிப்பொருத்தம்:
இக்குறட்பாவில் அன்பு, அரண் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே, இந்தத் திருக்குறள் நிரல் நிறை அணி ஆகும்.
41. கீழ்க்காணும் அழைப்பிதழைப் பத்தியாக மாற்றுக
பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்
அக்டோபர் மாதம் 2 நாள் காலை 10 மணிக்குச் சென்னை கலைவாணர் அரங்கில் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற உள்ளது.இக்கருத்தரங்கிற்கு இயற்கை வேளாண் உழவர் திரு. அமுதன் அவர்கள் முன்னிலை வகிக்கிறார்.இக்கருத்தரங்கில் முனைவர் செங்குட்டுவன் அவர்கள் ‘இயற்கை சீற்றங்களும் பருவகால மாற்றங்களும்’ என்ற தலைப்பிலும், திரு. முகிலன் அவர்கள் ‘பேரிடர்களை எதிர்கொள்ளும் தீர்வுகளும்’ என்ற தலைப்பிலும், திருமதி. பாத்திமா அவர்கள் ‘நீர்வழிப் பாதைகளைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பிலும், திரு வின்சென்ட் அவர்கள் ‘பேரிடர் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்’ என்ற தலைப்பிலும் கருத்துக்களைத் தர உள்ளனர்.
கருத்தரங்கின் நிறைவாக, பேரிடர் மேலாண்மை இயக்குநர்,
திரு. இமயவரம்பன் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார்கள். நிகழ்ச்சிக்கு வருகின்றவர்களைச் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி. அரசி அவர்கள் வரவேற்க உள்ளார். பசுமைப்படை மாணவர் தலைவர் பர்வீன் அவர்கள் நன்றியுரை ஆற்றியுள்ளார். தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்துடன், கருத்தரங்க நிறைவில் நாட்டுப்பண்ணுடனும் நிகழ்ச்சி நிறைவடையும். அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
42.பா நயம் பாராட்டுக: மையக்கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை எழுதுக.
முன்னுரை:
இப்பாடலைப் பாடியவர் நாமக்கல் கவிஞர் ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் வழிநடைப் பாடலை எழுதிய கவிஞர் எழுதியுள்ள இப்பாடலில் காணப்படும் நயங்களைக் காண்போம்.
மையக்கருத்து :
தான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழியே சிறந்த மொழி என்றுரைக்கின்ற மகாகவி பாரதி நம்முடைய ஆசான்.
சொல்நயம் :
இப்பாடலில் அடைச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்,கவிஞர்,
சான்று:
i) அன்புரையால்
ii) உலுங்க வைத்திவ்வுலகம்
iii) தெற்றென
iv) ஆசான்
பொருள்நயம்:
தமிழின் பெருமையை உணர்ந்தவர் பாரதி. நாமோ தமிழைப் புறக்கணிக்கின்றோம். தமிழின் தனித்தன்மையை உணர்ந்த பாரதி தமிழ்மொழிபோலத் தரணியிலே சிறந்த
மொழி இல்லை என்கிறார். தமிழில் சிறந்த கவிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார். பாரதியின் சிறப்பையும், தமிழின் பெருமையையும் திறம்படக் கவிஞர் எடுத்துக் கூறுகின்றார்.
தொடைநயம்:
பாடலில் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பது தொடையாகும்.
மோனை நயம்:
பாடலின் சீர்களிலோ, அடிகளிலோ முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும். இப்பாடலில் சீர்மோனை பயின்று வந்துள்ளது .
சான்று :
பெற்றெடுத்த - பின்னால் - பிறமொழிக்கு- பிழையை
ஊற்றெடுத்தே- உலுங்க - உலகத்தில் - உண்டோ
கற்றுணந்தே - காண்பாய் - கம்பனொடு - காட்டி
தெற்றெனநம் - திறந்து - தெய்வக்கவி - திண்ணம்.
எதுகை நயம்:
பாடலின் சீர்தோறும் அல்லது அடிதோறும். முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து என்றிவருவது எதுகை எனப்படும்.
இப்பாடலில் சீர்எதுகை மற்றும் அடிஎதுகை பயின்று வந்துள்ளது.
சீர்எதுகை:
தெற்றெனநம் - திறந்து
அடிஎதுகை:
பெற்றெடுத்த
கற்றுணர்ந்த
தெற்றென
சந்தநயம்:
இப்பாடலை ஏற்ற இசைக்கருவியுடன் . இசைத்துப் பாடினால் பாடுவோருக்கும் கேட்பவருக்கும். மிகுந்த கவி இன்பத்தைத் தரும் சந்த நயங்களுடன் கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார். இப்பாடல் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்த வகையைச் சர்ந்தது. இப்பாடல் அகவலோசையில் அமைந்துள்ளது.
அணிநயம்:
1) இப்பாடலில் தமிழ்மொழியைத் தாயாக உருவகம்
செய்துள்ளதால் உருவக அணி இடம்பெற்றுள்ளது.
2) தமிழ் மொழி மற்றும் பாரதியார் பற்றி மிகவும் உயர்வாக
எடுத்துக் கூறுவதால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி
இடம் பெற்றுள்ளது.
சுவைநயம்:
தமிழ்மொழியின் பெருமையையும், பாரதியாரின் பெருமையையும் பற்றி இப்பாடல் உரைப்பதால் இப்பாடலில் பெருமிதச் சுவை அமைந்துள்ளது.
முடிவுரை:
“காலம் கவிஞனைக் கொன்றது; ஆனால் அவன் கவிதை காலத்தை வென்றது” என்ற கூற்றிற்கு ஏற்ப நாமக்கல் கவிஞர் இக்கவிதையில் கவிதைக்குரிய நயங்களை எல்லாம் அமைத்து கவிநயங்களால் தமிழன்னைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாணாக்கரே !
கேள்வியைக் கவனித்து எத்தனை நயங்கள் கேட்கப்பட்டிருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும் எழுதினால் போதுமானதாகும்.
43. தமிழாக்கம் தருக
அ) A new language is a new life.
புதிய மொழி புதிய வாழ்க்கை.
ஆ) The limits of my language are the limits of my world.
என் மொழியின் எல்லை என் உலகத்தில் எல்லை.
இ) Learning is a Trissur that will follow its owner everywhere.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஈ) If you want people to understand you, speak their language.
பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேசு
பகுதி – 4
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்
விடை தருக. 3 x 6 = 18
44.அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன் பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலை :
இராமன் அனைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பண்பின் அடையாளமாக விளங்குகின்றான். தந்தை, தாய் மீதான அன்பு, உடன்பிறப்புகள் மீது அன்பு ஆகியவற்றை எல்லைகள் அனைத்தையும் கடந்து இராமன் விரிவுபடுத்துகிறான். வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வேலிகள் அவன் அன்பிற்குத் தடையாக இருக்கவில்லை.
மகன் என்ற உறவு நிலை:
சீதையை இராவணன் சிறை எடுத்துச் சென்றபொது அதனைத்தடுத்து இராவணனுடன் போரிட்டு, காயமடைந்து பின் உயிர் துறந்தான் சடாயு.
இதனைக் கேள்விப்பட்ட இராமன் மிகுந்த வருத்தமடைந்தான்.
தன் தந்தை தசரதனின் நண்பனான சடாயுவைத் தன் தந்தையாகக் கருதி, தந்தைக்கு மகன் செய்யும் இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்தான்.
தன்னையே நினைத்துத் தவம் செய்து கொண்டிருந்த எளிய முதியவளான சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.
அவள் இராமனைப் பார்த்ததால் தான் மேற்கொண்ட தவம் பலித்தது என்று கூறி இனிய உணவினை விருந்தாகப் படைத்தாள்.
அவள் அன்பில் மனம் மகிழ்ந்த இராமன் தன் தாயாக அவளை நினைத்து. மகன் தாய்க்குச் செலுத்தும் அன்பைச் செலுத்தினான்.
உடன்பிறப்பு என்ற உறவுநிலை:
தன்மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்த குகன். தன்னைப் பிரிய மனமில்லாமல் வருந்துவதை இராமன் அறிகின்றான்.
இராமன் குகனிடம் "முன்பு உடன் பிறந்தவர்கள் நான்குபேராக இருந்தோம். இப்போது உன்னையும் சேர்த்து ஐந்து பேராக உள்ளோம்" என்றான்.
இலங்கை சென்ற இராவனனுடன் கடும்போர்புரிந்து திரும்பிய சுக்ரீவனின் செயலைக் கண்டு வியந்த இராமன் சுக்ரீவனிடம் நீ வேறு நான் வேறல்ல என்று கூறுகின்றான்.
சீதையைக் கவர்ந்து வந்த இராவணனின் செயலைக் கண்டித்தான் வீடணன். இராவணன் அவனைக் கடிந்து கொண்டதால் இலங்கையை விட்டு வெளியேறிய வீடணன் இராமனிடம் அடைக்கலமானான்.
வீடணனுக்கு இலங்கையை ஆளும் உரிமையைக் கொடுத்ததுடன் அவனையும் தன் உடன்பிறப்பாக இராமன் ஏற்றுக் கொள்கின்றான்.
இவ்வாறாக இராமன் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய் மீது அன்பு கொண்ட சேயாய், உயிர்தரும் நண்பனாய், உரிமையை வழங்கும் உடன்பிறப்பாய் பிற உயிர்களுடன் உறவு கொண்டிருந்தான்.
அல்லது
ஆ) செய்ந்நன்றியறிதலே அறம்
ஈடில்லா உதவி:
ஒருவன் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையிலும் அவர் நமக்குச் சரியான நேரத்தில் ஏதேனும் உதவி செய்தால், அந்த உதவிக்குக் கைம்மாறாக இந்த நிலவுலகத்தையும், வானுலகத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது.
உலகினும் பெரிய உதவி:
ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும்.
பயன் எதிர்பாராத உதவி:
ஒருவர் எந்தப் பயனையும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்காமல் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.
உதவியின் பயன் பனையளவு:
ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அந்த உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவு உதவியையும் பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
அறத்தை அறிக:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஆனால் ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்போழுதே மறந்துவிட வேண்டும்.
தப்பிக்க கூடுதல் வழி:
ஒருவர் எந்த அறத்தை அழித்தாலும் அதிலிருந்து தப்பிப் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து தப்பிப்பிழைக்கும் வழியே கிடையாது.
45.அ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் :
கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளில்
ஒலிக்கோலங்கள்
சொற்புலம்
தொடரியல் போக்குகள்
ஆகியவை மிக முக்கியமானவையாகும்.
ஓலிக்கோலங்கள்:
இசையோடும் இசைக்கருவியோடும்தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்.
ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப் பின்னல்) என்பர்.
வன்மை உணர்ச்சியை வெளிப்படுத்த பாடல்களில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம்பெறும்.
இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்.
சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்ப வரும்
தன்மையும் பாடல்களில் இடம்பெறும்.
சொற்புலம்:
உணர்வும், பொருளும், கலையும், பண்பாடும், வரலாறும், அரசியலும் சொற்களில் பொதிந்து கிடக்கின்றன.
ஒரு பொருள் குறித்து வரும் பல சொற்களும், பல பொருள் குறித்து வரும் ஒரு சொல்லும் சொல் வளத்திற்குச் சான்று.
பல்வேறு துறைகள், சூழல்கள், புனைவுகளுக்கும் உரிய வகையில் உணர்வும் தெளிவும் கொண்டதாகச் செழிப்பானதொரு தளத்தைச் சொல் கொண்டிருக்கிறது.
தனிச்சொல்லாகவும், தொகை மொழியாகவும் சொற்கள் இயங்குகின்றன.
தொடரியல் போக்குகள்:
பாடலின் தளத்தை முழுமையடைய செய்வது தொடரியல் போக்காகும்.
சொல்பவனுடைய மொழித்திறனை, கேட்பவன் அல்லது வாசிப்பவன் முழுமையாகப் பெற வேண்டும்.
சொல்லப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள்
i) நேர் நடந்தும்
ii) ஏறியிறங்கியும்
III) திரும்பியும் சுழன்றும் - இயங்கும்
இவையே கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் ஆகும்.
அல்லது
ஆ)குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது:
குடும்பம்:
தலைவன் தலைவி இணைந்து குழந்தைகளுடனோ, குழந்தைகள் இல்லாமலோ இணைந்து வாழ்ந்து வரும் அமைப்பே குடும்பமாகும்.
மனித சமூக அமைப்பை ஒப்பிடும்போது குடும்பம் என்பது மிகவும் சிறிய அமைப்பாகும்.
இந்தச் சிறிய அமைப்பில் இருந்துதான் மனித சமூகம் என்ற பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
இவ்வமைப்பிற்கு அதன் இயங்குநிலைக் கருத்தாக்கத்தின் மூலமே 'குடும்பம்' என்ற பெயர் வந்தது.
மனிதன் ஒரு சமூக உயிரி:
மனிதன் ஓர் உயிரியல் விலங்கு மட்டுமல்ல அவன் ஒரு சமுதாய விலங்காவான்.
மனிதர்கள் தங்கள் வாழ்வில் பெரும்பகுதியைக் குடும்பத்தில்தான் செலவிடுகின்றனர்.
குடும்பமே மக்களின் உயிரியல், உளவியல், வாழ்வியல் சார்ந்த அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்கிறது.
குடும்பத்தில் வாழ்வோர் உயிரியல் பிணைப்புகளை மட்டும் கொண்டவர்களாக இல்லாமல் சமுதாயப் பிணைப்புகளையும் கொண்டவர்களாக இருப்பதே மனித சமூகக் கட்டமைப்பிற்கான அடித்தளமாக இருக்கிறது.
குடும்பம் சமூகத்திற்கான களம்:
குடும்பம் தனிமனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது.
மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச் செயல்கள், கல்வி பெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.
சமூகத்தின் பண்பாட்டைக் குழந்தைப்பருவத்திலே குடும்பம் கற்றுக் கொடுக்கின்றது.
சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றபட வேண்டியப பழக்கவழகங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள் சமுதாய சமய வாழ்வில் ஆற்றவேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படுகின்றது.
பண்பாட்டு மயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரிக் குழுவாகக் செயல்படுகின்றனர்.
குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் அனைவருக்கும் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும கொண்ட ஒரு சிறந்த சமூதாயம் அமைய அடிப்படையாக விளங்குகின்றது.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்துதான் 'மனித சமூகம்' என்னும் பரந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பு ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டாமல் 'மனித சமூகம்' என்ற பரந்த அமைப்பு சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.
46. அ) ’உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்....
கதைச்சுருக்கம்:
பூமணி அவர்கள் இயற்றிய 'உரிமைத்தாகம்' என்னும் கதையில் வெள்ளைச்சாமி தன் அண்ணனுக்குத் தெரியாமல் தன் வேளாண் நிலத்தை, பங்காரு சாமியிடம் இருநூறு ரூபாய்க்கு அடகு வைக்கிறான். அதை அவனது அண்ணன் முத்தையனிடம் அவனது மனைவி மூக்கம்மா கூறுகிறாள். தம்பியிடம் மனவருத்தத்தில் பேசாமல் இருந்தாலும் பாசத்தினால் அவனது நிலத்தை மீட்க பங்காரு சாமியிடம் சென்று நிலத்தை மீட்க இருநூறு ரூபாயைக் கொடுக்கும் போது அவர் நானூறு ரூபாய் என்று பொய் சொல்கிறார். எனவே சகோதரர்கள் இருவரும் இணைந்து பங்காரு சாமியிடம் சண்டையிடுகின்றனர்…..
இரு சகோதரரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்……
கதை தொடர்கிறது…….
'என்னத்த சொல்ல உங்க தம்பி நிலத்த அடகு வச்சிருக்காராம்….. வீட்டில் ஒரே சண்டையா இருக்குது…. என்ற மூக்கம்மாவின் பேச்சிற்குக் கொஞ்சமும் காது கொடுக்காமல் முத்தையன் தன் வேலையிலே மும்முரமா இருந்தான். என்னது நான் சொல்லுறது காதுல விழுறதா! என்ற மனைவியின் பேச்சுக்கு இப்ப என்ன கொறஞ்சு போச்சு, நம்ம பேச்சக் கேட்காம போனவன்தானே, அவன் எப்பாடு பட்டா நமக்கென்ன, நமக்கு இருக்கிற க';டத்தில் இது வேறபா?
இந்த வெள்ளச்சாமி பையன் கொஞ்சமாவது பொறுப்போட நடக்கண்டாமா? அவன் என்ன பத்தியும் உன்ன பத்தியும் ஊருக்குள்ள என்னெல்லாமோ சொல்லிருக்கான்…. பட்டு அனுபவிச்சாத்தான் தெரியும்…. அவன் நிலத்த இழந்திட்டு நம்மகிட்ட திரும்ப வந்தாதான் நம்ம அருமை தெரியுமுன்னு சொன்ன, தன் கணவனைப் பார்த்து மூக்கம்மா பதில் எதுவும் பேசாமல் இருந்தாள்.
எதிர்வீட்டில் இருந்து வந்த சத்தத்தக் கேட்டு முத்தையன் துண்ட எடுத்துப் போட்டுகிட்டு வயலுக்குக் கிளம்பினான். பங்காருசாமி வெள்ளசாமிகிட்ட பேசியது அவன் காதுல கேட்டுட்டே இருந்தது. டே வெள்ளசாமி நீ கிரயம் எழுதிக்கொடுத்த நாள் முடிஞ்சாச்சி, என்ன பண்ணப் போற ஒண்ணு ரூவாவக் கொடு இல்ல நிலத்த எழுதிக் கொடு' என்ற வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன.
இரண்டு வாரம் கழிச்சு வெள்ளச்சாமியின் நிலத்த பங்காரு சாமி எழுதிவாங்கிட்டதையும், அதனால வெள்ளச்சாமியின் மனைவி கோபப்பட்டுட்டு அவ அப்பா வீட்டுக்குப் போய் விட்டதாகவும், வெள்ளச்சாமி இப்போது கூலிக்கு எங்கேயோ போவதாக மூக்கம்மா கூறிய வார்த்தைகளக் கேட்ட முத்தையாவின் உள்ளம் துடித்துடித்தது….. அப்படியே வீட்டின் மேற்கூரையை வெறித்துப் பார்த்தபடி முத்தையன் நின்று கொண்டிருந்தான்.
அல்லது
ஆ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று:
மொழிப்பற்று:
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார்.
நெல்லையப்பரிடம் அவர் கூறும்போது, 'நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்ளவேண்டும்' என்று கூறுகின்றார்.
புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி அளிக்கப் பெற்று வளர வேண்டும்.
தாய் மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும்.
பிறநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக் கொள்ள முயலவேண்டும்.
புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.
சமூகப்பற்று
சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும்.
ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும்.
"ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள், அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை", என்கிறார்.
பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார்.
பெண்ணை வீட்டுக்குள்ளே அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.
சமூகம் வளர்ச்சி அடையத் தொழில் பெருக வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும் தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார்.
சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பு+மி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும்.
நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும்
அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.
பகுதி- 5
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6
47.அ) ஓங்கலிடை - எனத் தொடங்கும் தண்டியலங்காரப் பாடலை எழுதுக.
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இல்லாத தமிழ்
ஆ) ‘பொருள்’ என முடியும் திருக்குறளை எழுதுக.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்,
முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனினிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 9843448095
12 ஆம் வகுப்பு
பொது மாதிரி திருப்புதல் தேர்வு - ஜனவரி 2022.
TAMIL QUESTION PAPER - ANSWER KEY Pdf
download 👇👇👇👇👇 - model question paper - 2 & ANSWER KEY 👇👇👇👇👇👇👇👇
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
11 ஆம் வகுப்பு
Unit Test - இயல் - 1 : Click Here
Unit Test - இயல் - 2 : Click Here
11 ஆம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)
முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
மாதிரி வினாத்தாள்-3 : Click Here
மாதிரி வினாத்தாள்-4 : Click Here
மாதிரி வினாத்தாள்-5 : Click Here
பாநயம் பாரட்டல்