12th Standard -Tamil -Study Material - SECOND REVISION EXAM - MARCH 2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY
தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில்12th standard- Second Revision exam -March 2022 இடம்பெற இருக்கின்ற தேர்விற்கான Model Question Paper with Answer key இங்குத் தொகுத்து Study Material ஆக தரப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளே நீங்கள் இந்த ஒரு தொகுப்பினை Study Material ஐ முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில் 12th standard- Second Revision exam -March 2022 இல் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு கேள்வித் தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப் புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது. இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில்12th standard- Second Revision exam -March 2022 நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த Study Material ஐ நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற இரண்டாம் திருப்புதல் தேர்வில் 12th standard- Second Revision exam -March 2022 நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்தக் கேள்விகளை நன்றாகப்ப் படித்து சிறப்பாக தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin
12th Tamil - Public Exam 2021 - 2022
2 nd REVISION TEST - MARCH 2022
Model Question Paper-1
அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள்
திருப்புதல் தேர்வு - மார்ச் 2022
( இயல் - 4 , 5 , 6 )
மாதிரி வினாத்தாள்- 1
நேரம்: 3:மணி வகுப்பு-1 2 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
அறிவுரைகள் :
i) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரி பார்த்துக்கொள்ளவும் அச்சுப் பதிவில் குறை இருப்பின் அறைகண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
ii) நீலம் அல்லது கருப்பு மை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு :
i) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையிணையும் சேர்த்து எழுதுக.
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1.’வளர் தலமோங்கு கந்தவேளே!’ - இலக்கணக்குறிப்பு
அ பண்புத்தொகை ஆ) உம்மைத்தொகை இ) வினைத்தொகை ஈ) முற்றெச்சம்
2.பொருத்தித்தேர்க
அ) ஆமந்திரிகை - 1. பட்டத்து யானை
ஆ) அரசு உவா - 2. மூங்கில்
இ) கழஞ்சு - 3. இடக்கை வாத்தியம்
ஈ) கழை - 4. எடை அளவு
அ) 3 1 4 2 ஆ) 4 2 1 3 இ) 1 2 3 4 ஈ) 4 3 2 1
3. எளியது , அரியது என்பன
அ) தீயினத்தின் துணை - நல்லினத்தின் துணை
ஆ) சொல்வது - சொல்லியபடி செய்வது
இ) சிறுமை பலசெய்து - பகைவர் தொடர்பு
ஈ) மெய்ப்பொருள் காண்பது - உருவுகண்டு எள்ளாததுது
4. வாதம் செய்தல் பற்றிக் கூறும் நூல்
அ) மதுரைக்காஞ்சி ஆ) சிந்தாமணி இ) தமிழ்விடு தூது ஈ) நன்னூல்
5. ‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்
அ) இலக்கியம் ஆ) கணிதம் இ) புவியியல் ஈ) வேளாண்மை
6.பொருந்தாததைத் தேர்க
அ) மா முன் நேர் - இயற்சீர் வெண்டளை
ஆ) விளம்முன் நேர் - இயற்சீர் வெண்டளை
இ) காய்முன் நேர் - வெண்சீர் வெண்டளை
ஈ) நாள் - ஓரசைச்சீர்
7. சுவடி யோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
அ) வசம்பு ஆ) மணத்தக்காளியிலைச்சாறு இ) கடுக்காய் ஈ) மாவிலைக்கரி
8. அல்லல் படுப்பதூஉம் இல் எவரோடு பழகினால் ?
அ) வாள்போல் பகைவர் ஆ) மெய்ப்பொருள் காண்பவர்
இ) எண்ணியாங்கு எய்துபவர் ஈ) தீயினத்தார்
9. எழுத்தாணிக்கு வழங்கும் வேறு பெயர்
அ) எழுதுகோல் ஆ) ஊசி இ) தூவல் ஈ) பேனாகத்தி
10. பொருத்தித் தேர்க
அ) மாச்சீர் - 1. கருவிளம் , கூவிளம்
ஆ) காய்ச்சீர் - 2. நாள், மலர்
இ) விளச்சீர் - 3. தேமாங்காய், புளிமாங்காய்
ஈ) ஓரசைச்சீர் - 4. தேமா , புளிமா
அ) 1 2 4 3 ஆ) 4 3 1 2 இ) 2 3 1 4 ஈ) 3 4 2 1
11. ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்’ - இத்தொடர் உணர்த்தும் பண்பு
அ) நேர்மறை பண்பு ஆ) எதிர்மறை பண்பு இ) முரண்பண்பு ஈ) இவை அனைத்தும்
12. நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர்
அ) வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்
ஆ) மனத்திட்பம் உடையவர் இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்
ஈ) சூதாடும் இடத்தில் காலம் கழிப்பவர்
13. ‘பூம்பாவாய்’ - இச்சொல்லில் பயின்று வரும் புணர்ச்சி விதி
அ) ஈறு போதல், இனமிகல் ஆ) தன்னொற்று இரட்டல்
இ) பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்
ஈ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
14. சுரதா நடத்திய கவிதை இதழ்
அ) இலக்கியம் ஆ) காவியம் இ) ஊர்வலம் ஈ) விண்மீன்
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக 3 x 2 = 6
15. வசனம், கவிதை வேறுபாடு தருக
16. கலிவிழா , ஒலிவிழா விளக்கம் தருக
17. ஒருமுக எழினி , பொருமுக எழினி குறிப்பு வரைக
18. “உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து” - இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
19. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை ?
20. “முறை வைப்பது” என்றால் என்ன ?
21. “ மையாடல் விழா” குறிப்புத் தருக
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக
அ) எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது..
ஆ) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
23. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
கோவில்
24. தமிழாக்கம் தருக
அ) Passport ஆ) Animation
25. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு மாற்றுக
அ) இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சுக்கோ.
ஆ) ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்
26. எவையேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக
அ) நினைக்கின்ற ஆ) தொழுதனர்
27. எவையேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக
அ) உள்ளொன்று ஆ) தலைக்கோல்
28. கீழ்க்காணும் தொடர்களில் பயின்றுவரும் சுவைகள் யாவை ?
அ) தென்னிந்தியாவிலேயே முதல் தொடர்வண்டி நிலையம் அமைந்த இடம் இராயபுரமே..
ஆ) என்னே ! யோகாசனத்தின் சிறப்புகள்!
29. பொருள் வேறுபாடு அறிந்து ஒரே தொடரில் அமைத்து எழுதுக
அ) புல் - புள் ஆ) கான் - காண்
30. ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன ?
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
31. இராமலிங்க அடிகள் கந்தவேல் இடம் எத்தகையோர் உறவு வேண்டும் எனக் கேட்கிறார்
32. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக
33. அறிவின் மேன்மை பற்றி திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை
34. கவிதையின் இயல்புகளாக உவமை கவிஞர் சுரதா கூறியுள்ளதை விளக்குக
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
35. நீங்கள் ஆசிரியர் ஆனால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர் ?
36. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
37. எழுத்தாணிகள் குறிப்பு வரைக
38. சுவடிகள் எவ்வாறெல்லாம் தயாரிக்கப்பட்டன?
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 = 12
39. “ அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்” இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக
அல்லது
எடுத்துக்காட்டு உவமை அணியை விளக்குக.
40. கீழ்க்காணும் பழமொழியை வாழ்வியல் நிகழ்வில் அமைத்து எழுதுக
ஊழி பெயரினும் தாம் பெயரார்
41. தமிழாக்கம் தருக
Periyar was not only a great social revolutionary; he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it. understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep - tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.
42. கீழ்க்காணும் பாடலைப் படித்து அதன் மையக் கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை விளக்குக
அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்
அவ்வாறே வான் கண்டேன், திசை கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரிக்க வண்ணந் தானோ ?
43. அண்மையில் நீங்கள் பார்த்த சமூகக் கருத்துள்ள திரைப்படம் ஒன்றின் திரை விமர்சனத்தைப் படத்தின் இயக்குநருக்குக் கடிதமாக எழுதுக.
பகுதி – 4
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்
விடை தருக. 3 x 6 = 18
44. அ) திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் நிறுவுக
அல்லது
ஆ) சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்தகோட்டப் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப்படுகின்றன ?
45. அ) பண்டைய காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
அல்லது
ஆ) பண்டைய பள்ளிகளில் மாணவர்கள் எவ்விதம் கல்விக் கற்றனர் என்பது குறித்து எழுதுக.
46. அ) "கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன"- இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.
அல்லது
ஆ) உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக.
பகுதி- 5
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6
47 அ) விண்வேறு….. எனத் தொடங்கும் 'இதில் வெற்றி பெற' என்ற பாடலை எழுதுக.
ஆ) "உடைத்து" என முடியும் திருக்குறள்
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 9843448095
12th Tamil - Public Exam 2021 - 2022
2 nd REVISION TEST - MARCH 2022
Model Question Paper-1
அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள்
திருப்புதல் தேர்வு - மார்ச் 2022
( இயல் - 4 , 5 , 6 )
மாதிரி வினாத்தாள்- 1
நேரம்: 3:மணி வகுப்பு-1 2 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
விடைகள்
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1.இ) வினைத்தொகை
2. அ) 3 1 4 2
3.ஆ) சொல்வது - சொல்லியபடி செய்வது
4. அ) மதுரைக்காஞ்சி
5. ஆ) கணிதம்
6. அ) மா முன் நேர்- இயற்சீர் வெண்டளை
7. இ) கடுக்காய்
8. ஈ) தீயினத்தார்
9. ஆ) ஊசி
10. ஆ) 4 3 1 2
11. இ) முரண் பண்பு
12. அ) வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்
13. இ) பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்
14. ஆ) காவியம்
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக 3 x 2 = 6
15. வசனம்:
சொற்களைச் சேர்க்கும்போது எதுகை, மோனை போன்றவற்றை அமைக்காமல், அடியளவும் இல்லாமல் எழுதுகின்ற இலக்கிய வடிவம் வசனம்.
கவிதை:
சொற்களைச் சேர்க்கும் போது யாப்பு முறைப்படி எதுகை , மோனை போன்ற தொடைகளைச் சேர்த்து குறளடி ,சிந்தடி,அளவடி ,நெடிலடி கழிநெடிலடி போன்ற அடியளவை அறிந்து வார்த்தைகளை அமைப்பதே கவிதை ஆகும்.
16. கலி விழா:
திருமயிலையில் நடைபெறும் எழுச்சிமிக்க விழா.
ஒலி விழா :
திருமலையில் நடைபெறும் ஆரவார விழா.
17. ஒருமுக எழினி:
மேடையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படுவது.
பொருமுக எழினி :
மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படுவது.
18. உவமை :
உருண்டு வரும் பெரிய தேரினைச் செலுத்துவது மிக சிறிய அச்சாணி.
பொருள்
உருவத்தில் சிறியவராயினும் மிகப்பெரிய செயலைச் செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்களாக இருப்பர். எனவே, ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழ்தல் கூடாது. இவ்வாறு அச்சாணி என்னும் உவமை, உருவில் சிறியவரின் வலிமையோடு பொருத்தப்பட்டுள்ளது.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
19. நிகண்டு, நன்னூல் ,காரிகை ,தண்டியலங்காரம், நீதிநூல்கள். கணிதத்தில் கீழ்வாயிலக்கம் ,மேல்வாயிலக்கம் , குழிமாற்று முதலிய பலவகை வாய்ப்பாடுகள் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்றவை அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் ஆகும்.
20. முறை வைப்பது:
உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்லுவான். இப்படி உபாத்தியார் ஒன்றைச் சொல்ல அதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை "முறை வைப்பது " என்று கூறுவார்கள்.
21. மையாடல் விழா:
சுவடியில் உள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு, மாவிலை, தர்ப்பை கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அந்தச் சுவடிகளில் தடவுவார்கள். அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும். இங்ஙனம் மை தடவிப் புத்தகத்தை வாசிக்க தொடங்குவதால் எழுத்துப்பயிற்சியை ‘மையாடல் விழா’ என்பர்.
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக
அ) எங்கள் ஊரில் நூலகக் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது..
ஆ) வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
23. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
கோவில்
கோவில் - இறைவன் உறையும் ஆலயம்..
கோவில் - கோ + வில் = அரசனது வில்
1) பண்டைய தமிழகத்தில் அரசர்கள் இறைவனை வழிபட பல இடங்களில் கோவில்களைக் கட்டினார்கள்.
2.) பண்டைய தமிழ் மன்னர்கள் வில் ஏந்திப் போரிட்டனர்.
24. தமிழாக்கம் தருக
அ) Passport - கடவுச்சீட்டு
ஆ) Animation - இயங்கு படம்
25. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு மாற்றுக
அ) இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.
ஆ) இரவிற்குச் சித்தப்பாவைக் காவலுக்குப் போகச் சொல்.
26. எவையேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக
அ) நினைக்கின்ற - நினை + க் + கின்று + அ
நினை - பகுதி
க் - சந்தி
கின்று - நிகழ்கால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
ஆ) தொழுதனர் - தொழு + த் + அன் + அர்
தொழு - பகுதி
த் - இறந்தகால இடைநிலை
அன் - சாரியை
அர் - படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி
27. எவையேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக
அ) உள்ளொன்று - உள் + ஒன்று
விதி : 1 : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் < உள்ள் + ஒன்று
விதி : 2 : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே < உள்ளொன்று
ஆ) தலைக்கோல் - தலை + கோல்
விதி : 1 : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் < தலைக்கோல்
28. கீழ்க்காணும் தொடர்களில் பயின்றுவரும் சுவைகள் யாவை ?
அ) பெருமிதச் சுவை
ஆ) வியப்புச் சுவை
29. பொருள் வேறுபாடு அறிந்து ஒரே தொடரில் அமைத்து எழுதுக
அ) புல் - புள்
புல் - புற்கள் ; புள் - -பறவை
புல் தரையில் நிறைய புட்கள் அமர்ந்திருந்தன.
ஆ) கான் - காண்
கான் - காடு ; காண் _ பார்
கானகத்தில் உலவும் விலங்குகளைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் .
30. ஒரு விகற்பம்:
வெண்பாவின் எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பெற்று வருவது.
பல விகற்பம் :
வெண்பாவின் அடிகளில் வேறுவேறு எதுகை பெற்று வருவது.
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
31. ஒரு நெறிப்பட்ட மனதுடன் நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் .உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர் தம் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும் எனக் கந்தவேளிடம் இடம் இராமலிங்க அடிகள் வேண்டுகிறார்.
32. நாட்டிய அரங்கின் அமைப்பு:
திறம்பட கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளில் இருந்து மாறுபடாத நல்ல நிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர்.
பொதிகை மலை போன்ற மலைகளில் நீண்டு வளர்ந்த மூங்கில்களில் ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவுள்ள கண்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர்.
தம் கை பெருவிரலில் இருபத்தி நான்கு அளவினைக் கொண்டதாக மூங்கிலை வெட்டினார். அரங்கத்தின் நீளம் எட்டு கோல் அகலம் ஏழுகோல் உயரம் ஒரு கோல் உத்திர பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கும் இடைவெளி 4 கோல் அளவு.
அரங்கத்தின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் இரு வாயில்கள்.
தூண்களின் நிழலானது அவையிலும் நாடக அரங்கில் விழாதபடி நல்ல அழகான நிலை விளக்குகளை அமைத்திருந்தனர்.
ஒரு முகத்திரை, பொரு முகத்திரை, கரந்துவரல் திரை என மூன்று வகையான திரைகள் அமைத்தனர்.
ஓவிய வேலைப்பாடு மிக்கதாக மேல் விதானம் அமைந்திருந்தது.
சிறந்து முத்துக்களால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர்.
இவ்வாறு எங்கிருந்து பார்த்தாலும் நாட்டிய நிகழ்ச்சி காணத்தக்க வகையில் கட்டப்பட வேண்டும், என்பதும் ஆட்ட அரங்கு, ஆட்டத்தைக் கண்டு சுவைப்போர் அமரும் அவையை விட உயரமாக இருக்கவேண்டும் என்பதும் தெளிவுபடக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
33. அறிவின் சிறப்பு:
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண்.
அறிவு, அழிவு நேராமல் காக்கும் கருவியாகும். அதுமட்டுமில்லாமல் பகைவராலும் அழிக்க முடியாத மனதினுள் அமைந்த பாதுகாப்பு அரணும் ஆகும்.
அறிவின் இலக்கணம்:
மனத்தை அது செல்லும் வழியில் செல்லவிடாமல் தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
எப்பொருளை யார்யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வதே அறிவாகும்.
அறிவின் மேன்மை:
பின்பு வரப்போகும் துன்பத்தை முன்பே அறிந்து காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் எதுவும் இல்லை.
34. கவிதையின் இயல்புகள் :
நன்றாகப் பழுத்த பழத்திலிருந்து சாறு வரும். வயலில் தண்ணீர் பாய்ந்தால் உழவுத் தொழிலைச் செய்ய ஏர் வரும்.
சீர்களில் எழுத்துகள் ஒன்றோடு ஒன்று இணைந்து வந்தால் அசைகள் வரும்.
அசைகள் முறையோடு அமைக்கப்பட்டிருந்தால் இரண்டு சீர்களுக்கு இடையே சரியான தளைவரும்.
தளைகள் முறையாக அமைக்க பெற்றால் அடிகள் வரும்.
அடிகளை வரிசையாக அடுக்கி இருந்தால் அந்தந்தப் பாவிற்குரிய தொடைகள் வரும்.. தொடைகளைப் பாவற்குரிய இலக்கண முறையோடு அமைத்திருந்தால் முறையான கவிதை உருவாகும்.
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
35. நான் ஆசிரியரானால்...
மாணாக்கர்களில் எல்லோரும் ஒரே கற்றல் அடைவு பெறும் மாணவர்கள் என்ற கருத்தியல் ரீதியான என் எண்ணத்தை முதலில் மாற்றுவேன்.
மாணாக்கர்களில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிவு திறன் மனப்பாங்கு பண்புகள் இருக்கப்போவதில்லை எனவே மாணவர்களை ஒப்பிட்டுக் கூற மாட்டேன்.
மாணவர்களை இனம் கண்டறிந்து அவர்களின் பின்னடைவுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை அறிந்து அவனை தேற்றிவிடுவேன்.
மாணாக்கர்கள் நல்ல நிலையை அடைய சிறந்த வழிகாட்டியாக இருப்பேன்.
மாணாக்கர்களிடம் தகாத வார்த்தைகள் மற்றும் தேவையற்ற வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
என் வகுப்பு மாணவர்களை மாணவர்களுக்குரிய கண்ணியத்துடன் நடத்துவேன்.
மாணாக்கர்களின் குடும்பச் சூழலை அறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் ஆசானாய் இருப்பேன்.
மாணாக்கர்களுக்கு முரண்பாடாகவோ, எதிர்த்து நின்று செயல்படவோ அவர்களை அடித்து துன்புறுத்தவோ அவர்கள் மனம் வேதனை அடையும் செயல்களில் ஈடுபடவோ ஒருபோதும் விரும்ப மாட்டேன்.
36. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் :
ஆசிரியர் முதலில் மாணாக்கர்களின் வலக்கை ஆள்காட்டி விரலைப் பிடித்துத் தட்டில் பரப்பி வைத்துள்ள அரிசி அல்லது தானியங்களில் எழுதிக் காட்டுவார்.
மணலில் எழுத்தின் வரிவடிவை எழுதுவார்.
மாணாக்கர் ஒலி வடிவை நன்றாகத் தெரிந்த பின்புதான் வரிவடிவை ஓலையில் வரைந்து காட்டுவார்.
ஓலையை இடக் கையில் பிடித்து வலக் கையால் எழுத்தாணி கொண்டு எழுத கற்றுக் கொடுப்பார் .
எழுத்தாணி பிடித்து எழுதும் போது ஓலையை நகர்த்துவார்.
எழுத்தாணி பிடித்த இடத்திலிருந்தே வரையும்.
ஓலையில் வரிவரியாக எழுத்தின் மீது மற்றொரு எழுத்து படாமலும் ஒருவரியின் மீது மற்றொருவரி இணையாமல் போதிய இடம்விட்டு எழுதுவார்கள்.
கல்வெட்டுகளில் கல் தச்சர்கள் சிற்றுளி கொண்டு எழுத்துக்களைப் பொறித்தனர்.
களிமண் பலகையில் எழுத்தாணி கொண்டு எழுதினர்.
எழுத்துக்களின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்தது.
காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்திக் காகிதங்களில் எழுதும் முறையைக் கற்றுக் கொண்டனர்.
காகிதங்களில் எழுதும்போது கையை நகர்த்தி எழுதுவர்.
37. எழுத்தாணிகள்:
ஓலையில் எழுதுவதற்குரிய எழுத்தாணியை ஊசி என்றும் கூறுவர்.
எழுத்தாணி, மடக்கெழுத்தாணி , வாரெழுத்தாணி , குண்டு எழுத்தாணி என பலவகை இருந்துள்ளது.
ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் உடைய எழுத்தாணிகள் இருந்துள்ளன.
ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கு எழுத்தாணியும் இருந்துள்ளன.
ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துகளாக 20 முதல் 30 வரி வரையிலும் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணியும் இருந்துள்ளது.
38. சுவடிகள் தயாரிக்கும் முறை :
இளம்பிள்ளைக்கு உபாத்தியார் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோர்த்துத் தருவார்.
ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு.
மற்ற பிள்ளைகள் தாங்களே செய்து கொள்வார்கள்.
பனையேடு, சீதாளப்பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.
மேலே சட்டமாகப் பனமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள் .
மரச்சட்டங்களையும் அமைப்பார்கள்.செப்புத் தகட்டாலும் சட்டம் செய்து கோர்ப்பார்கள் .
அந்த சட்டங்களின் மேல் வர்ண மையினால் பலவகையான சித்திரங்கள் எழுதுவதும் உண்டு.
இவ்வாறுதான் சுவடிகள் தயாரிக்கப்பட்டன.
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 = 12
39. இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி தொழில் உவமையணி ஆகும்.
அணி விளக்கம்:
செய்யுளில் உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் மற்றொரு வாக்கியமாகவும் வந்து போல என்னும் உவம உருபு வெளிப்படையாக வந்து, செய்யும் தொழிலோடு உவமை அமைவது தொழில் உவமையணி ஆகும்.
உவமை: அகலாது அணுகாது தீக்காய்வார்
உவமேயம்: வேந்தரைச் சேர்ந்து ஒழுகிபவர்
உவம உருபு: போல்க
குளிருக்காகத் தீக்காய்வார் தீயை விட்டு அகன்று செல்லாமலும் நெருங்கிவிடாமலும் இருப்பது போல் அரசர்களைச் சார்ந்திருப்பவர்கள் பக்குவமாக நடந்து கொள்ளுதல் வேண்டும்.
அல்லது
அணி இலக்கணம்
செய்யுளில் உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் மற்றொரு வாக்கியமாகவும் அமைந்து உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும்.
உவமை: துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர்
உவமேயம்: நஞ்சு உண்பார் கள்உண் பவர்
உவம உருபு: போல (மறைந்து வந்துள்ளது)
உறங்கியவர் இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர் அதுபோலவே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவார்.
இவ்வாறு இக்குறளில் உவமை, உவமேயம் வெளிப்படையாக வந்து உவம உருபு மறைந்து வந்துள்ளமையால் எடுத்துக்காட்டு உவமையணி இக்குறளுக்குப் பொருத்தமானது.
40. ஊழி பெயரினும் தாம்பெயரார்
பழமொழி விளக்கம் சான்றாண்மை என்னும் குணம் உடையவர்கள் உலகமே அழியும் ஊழி காலம் வந்தாலும் தம் நிலையிலிருந்து வேறுபடாமல் இருப்பர்
வாழ்வியல் நிகழ்வு
ஏன் மாமா வேதமாணிக்கம் மிகவும் அன்பானவர் உண்மையானவர் நேர்மையானவர் எங்கள் ஊரில் அவருக்கு என்று சிறப்பான பெயர்களும் உண்டு சூழ்நிலையிலும் தன் சான்றாண்மை என்னும் குணத்தில் இருந்து அவர் வேறுபட்டது இல்லை அவருடைய சொல்லுக்கு எங்கள் கிராமமே கட்டுப்படும் அந்த அளவிற்கு நல்ல குணம் உடையவர் எங்கள் கிராமத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்து தேர்தல் வந்தது எங்கள் பக்கத்து கிராமத்தைச் சார்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக செய்தி வந்தது எங்கள் கிராமத்தைச் சார்ந்த படித்த பண்புள்ள இளைஞன் வரும் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தான் ஆண்டு முழுவதும் மழை இல்லாததால் விவசாயம் நடைபெறவில்லை என் மாமாவின் மகள் திருமணம் எனும் ஒரு மாத காலத்தில் நடக்க இருந்தது இதனை அறிந்த பக்கத்து கிராமத்தைச் சார்ந்த போட்டியாளன் என் மாமாவிற்கு தூது அனுப்பி அவர் மகளின் திருமணத்திற்கு உரிய செலவு அத்தனையும் தானே ஏற்ப தோடு இன்னும் அதிகமாக பணம் தருவதாக வாக்குறுதி கொடுத்ததாகவும் தேர்தலில் தனக்கு சாதகமாக ஊர் மக்களை வாக்களிக்குமாறு கூறவேண்டும் என்றும் கூறி அனுப்பி இருந்தான் அவ்வாறு நடைபெறவில்லை எனில் அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என் மாமாவும் என்ன நடந்தாலும் பரவாயில்லை உண்மையான அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் என் உயிர் போவது பற்றி கவலை இல்லை என்றும் என் மகளின் திருமணம் மிக சிறப்பாக நடக்கும் என்றும் கூறினார் ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு அவர் வெளிப்படுத்தினார்.
41. தமிழாக்கம் தருக :
பெரியார் சிறந்த சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல அதற்கும் மேலான சிறப்புடையவர். அவர் ஒடுக்கப்பட்டோரின் சிறந்த தலைவர் எனக் கருதப்படுகிறார். அவர் சீர்திருத்தப் பணியில் அதிக கவனம் செலுத்தினார். அவருடைய சிந்தனைகளும் செயல்களும் மிகவும் ஆழமானதாகவும் பரந்த மனப்பான்மை உடைய தாகவும் காணப்பட்டன. எந்தவொரு செயல்பாட்டையும் ஆழ்ந்து சிந்தித்து அதனைப் புரிந்து கொண்டு அதன்படி அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணும் வரை உழைப்பார். பெரியார் இந்தச் சமூக காட்சியின் திரையில் வரும் வரை சமூக ஏற்றத்தாழ்வு நிறைந்த ஒரு சமுதாயமாகவே இருந்தது.
42. பாநயம் பாராட்டல்
அழகு நிலா
முன்னுரை :
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருங்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். பாரதியார் மீது அதிக அன்பு கொண்டவர். புரட்சி மிக்க கருத்துக்களையும், சமூக அவலங்களையும் தம் பாடல்களில் எடுத்துச் சொன்னவர். தமிழ் மீது அதிக பற்றுப் கொண்டவர். ‘தமிழுக்கும் அமுதென்று பெயர்’ என்று கூறியவர். பாரதிதாசன் அவர்கள் எழுதியுள்ள இப்பாடலின் நயங்களைக் காண்போம்.
திரண்ட கருத்து:
மாலை நேரம் எங்கும் இருள் பரவியிருக்கும். கண்களுக்குப் பொருள்கள் புலப்படுவதில்லை. ஆனால், அந்தக் காரிருளிலும் சிரிப்பின் ஒளி. அதுதான் வானத்தில் ஒளிமுத்தாகக் காட்சித் தரும் நிலா, குளிர்ச்சியான ஒளியைச் சிந்தாமல் சிதறாமல் தருவதோடு வட்டமான வெள்ளித்தட்டு ஒன்று வானத்தில் அழகாகக் காட்சியளிக்கிறது. இயற்கை அன்னையின் அற்புதப் படைப்பு தான் நிலா. அது வானத்தில் தோன்றி இனிய வாழ்வைச் சித்தரிக்கிறது.
மையக்கருத்து:
இப்பாடல் அழகு நிலாவின் அழகை எடுத்துக் கூறி அதன் பேராற்றலை இயம்புகிறது.
சொல் நயம்:
சிறந்த சொற்களைக் கொண்டு கவிதையை நயம்படப் பாடியுள்ளார் கவிஞர். இப்பாடலில் அடைச்சொல்லையும், நேரினை சொல்லையும் கவிஞர் பயன்படுத்தியுள்ளார்.
சான்று:
அடைச்சொற்கள் : அந்தியிருள் ,காரிருள், ஒளிமுத்தோ
நேரிணை சொல் : சிந்தாமல் சிதறாமல்
பொருள் நயம்:
இரவில் வானில் தோன்றும் நிலாவின் வெளிச்சம்; இருளிலும் ஒளி தரும் அழகு; குளிர்ச்சியான ஒளியை மட்டுமே தரும் நிலா; என்று நிலவின் பண்பை விளக்க அழகான சொற்களைக் கொண்டு தான் கூறவந்த பொருளான நிலாவைப்பற்றி மிகச் சிறந்த முறையில் இக்கவிதையைக் கவிஞர் இயற்றியுள்ளார்.
தொடை நயம்:
பாடலில் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பது தொடை ஆகும்
மோனை நயம்:
பாடலின் சீர்களிலும் அடிகளிலும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும். இப்பாடலில் சீர்மோனை பயின்று வந்துள்ளது.
சான்று:
அந்தியிருளால் அவ்வாறே
பிந்தியந்த பெருஞ்சிறப்பின்
சிந்தாமல் சிதறாமல் சேகரித்து
எதுகை நயம்:
பாடலின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து அளவு ஒத்து நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும். இப்பாடலில் அடி எதுகை பயின்று வந்துள்ளது.
சான்று :
அந்தியிருளாற்
பிந்தியந்த
சிந்தாமல்
இந்தாதாவென்
இயைபு நயம் :
ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதியில் உள்ள எழுத்தோ அல்லது இறுதிச் சொல்லோ , அல்லது ஒரே அடியில் உள்ள சீர்களின் இறுதி எழுத்துக்கள் ஒன்றிவந்தாலும் அஃது இயைபு எனப்படும்.
இப்பாடலில் சீர்இயைபு பயின்று வந்துள்ளது.
சான்று
திசைகள் கண்டேன் - வான் கண்டேன் - உலகு கண்டேன்
நிலவே நீதான் - காரிருள் நீதான்
சந்த நயம்:
“சந்தம் தமிழுக்குச் சொந்தம்” இப்பாடலை ஏற்ற இசைக்கருவிகளுடன் இசைத்துப் பாடினால் பாடுவோருக்கும் கேட்பவருக்கும் மிகுந்த கவி நயத்துடனும், தாளநயத்துடனும், சந்த நயத்துடனும் கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார்.
இப்பாடல் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் வகையைச் சார்ந்தது.
சுவை நயம் :
இப்பாடல் நிலவின் தன்மையையும், அது ஒளிதரும் அழகையும் பெருமிதத்துடன் கூறுவதால் இப்பாடலில் பயின்று வந்துள்ளது.
அணிநயம் :
இப்பாடலில் கவிஞர் நிலவை ஒளிமுத்து என்று உருவகப்படுத்தி கூறி உள்ள காரணத்தினால் இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.
முடிவுரை :
“ காலம் கவிஞனைக் கொன்றது ; ஆனால் அவன் கவிதை காலத்தை வென்றது” என்ற கூற்றிற்கு ஏற்ப கவிஞர் பாரதிதாசன் இக்கவிதையில் கவிதைக்குரிய நயங்கள் எல்லாம் அமைத்து கவிஞர்களால் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்
மாணாக்கரே ! கேள்வியை நன்கு கவனித்து எத்தனை நயங்கள் கேட்கப்பட்டு இருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும் எழுதினால் போதுமானதாகும்..
43. அண்மையில் நீங்கள் பார்த்த சமூகக் கருத்துள்ள திரைப்படம் ஒன்றின் திரை விமர்சனத்தைப் படத்தின் இயக்குநருக்குக் கடிதமாக எழுதுக.
வேலூர்
15 . 02 . 2022
அன்பும் பாசமும் மிகுந்த மக்கள் இயக்குநர் சிவா அண்ணன் அவர்களுக்கு,
வணக்கம்! அண்ணா உங்களது இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படமான ‘விசுவாசம்’ என்னை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாகும். கதாநாயகனாக நடித்து இருந்த நடிகர் அஜித் அவர்களின் நடிப்பைக் குறிப்பிடவேண்டும். கதாபாத்திரத்திற்குப் பொருந்தும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
அப்பா கதாபாத்திரத்திற்குச் சரியான தேர்வு நடிகர் அஜித். திரைப்படத்தில் இடம்பெற்ற வசனமும், ஒளிப்பதிவும், பின்னணி இசையும் அருமை. ‘கண்ணான கண்ணே....... கண்ணான கண்ணே தோள் மீது சாயவா’ என்ற பாடல் அனைவர் மனதையும் ஏங்கவைத்த பாடலாகும்.
குடும்பப் பாங்கான கதையைச் சொல்லிய விதமும், புரிதலற்ற குடும்ப வாழ்வில் ஏற்படும் குழப்பங்களும், பிள்ளைகள் அவருடைய ஆசைக்கு ஏற்ப வாழ வேண்டும் என்ற கருத்துக்களை திரையில் வெளிப்படுத்திய உங்களது இயக்கத்திற்கும் பாராட்டுகள். மனைவி, மகளைப் பிரிந்த அஜித் எப்படி மீண்டும் குடும்பத்துடன் இணைகிறார் என்பதை மிக எளிய காட்சி அமைப்புகளுடன் விளக்கியது அருமை.
அதிக அளவில் ஒப்பனை இல்லாமல் கதாபாத்திரங்கள் திரையில் வந்ததும் அருமை. அப்பா மகள் பாசப் போராட்டம் திரைக்கதைக்கு மிகுந்த வலு சேர்த்திருந்தது.
நல்ல ஒரு திரைப்படத்தைத் தமிழ்நாட்டிற்குத் தந்த உங்களது கலை திறமைக்குப் பாராட்டுகள். நன்றி
இப்படிக்கு
அன்பு மாணவன்
ந. அன்புமணி
பகுதி – 4
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்
விடை தருக. 3 x 6 = 18
44.
அ) திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் :
முன்னுரை:
தமிழரின் வாழ்வியல் நெறிகளைக் கருவு+லமாகக் கொண்டு விளங்கும் தமிழ் இலக்கியம் திருக்குறள் ஆகும். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளில் ஒன்பது இயல்களின் மூலம் வாழ்வியல் கருத்துகளைக் கூறும் அறிவுப் பெட்டகம் திருக்குறள் நம் பாடப்பகுதி விளக்கும் வாழ்வியல் கருத்துகளை இக்கட்டுரையில் காண்போம்.
அறிவுடைமை:
அறிவு, அழிவு நேராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.
மனத்தை அதுபோகும் வழியில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்வழியில் செலுத்துவதே அறிவாகும்.
எச்செய்தியை எவர் ஒருவர் கூறக்கேட்டாலும் அச்செய்தியின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிவதே அறிவாகும்.
உலகம் செல்லும் உயர்ந்த நெறியில் நாமும் செல்வதே அறிவாகும். பின்வரக்கூடிய துன்பத்தை முன்னரே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையார்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் எதுவும் இல்லை.
சிற்றினம் சேராமை:
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும். ஆனால் அவர் இப்படிப்பட்டவர் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணை உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பம் தரும் பகையும் இல்லை.
வினைத்திட்டம்:
வினைவலிமை என்று சொல்லப்படுவது ஒருவனின் மனவலிமையேயாகும் மற்றைய வலிமைகள் எல்லாம் வலிமைகள் ஆகா. ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனவலிமை உடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே செய்து முடிப்பார்.
கள் உண்ணாமை:
உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர்.
கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது. நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
சூதாடலின் தீமை:
ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதினைப் போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
முடிவுரை:
இவ்வாறு, தனிமனிதனின் வாழ்வுக்குத் தேவையான கருத்துகள் மட்டுமல்லாது அரசன் மற்றொரு அரசனிடம் தூது உரைத்தல், மன்னர்கள் எவ்வாறு அரசாட்சி செய்ய வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை தன்னகத்தே கொண்டு ஒப்புயர்வற்ற இலக்கியமாகத் திருக்குறள் விளங்குகிறது.
அல்லது
ஆ) சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்தகோட்டப் பகுதிகள் காட்சி படுத்தப்பட்ட விதம்;
மயிலாப்பூர்:
மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு, கோவில் திருவிழாக்கள். கோவில் ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று.
புகழைப் பறைசாற்றும் எழுச்சியே திருவிழாக்கள். அத்தகைய விழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை. மயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூர்.
இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை.
அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும்.
மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா விமரிசையாக நடைபெறுமென மிக அருமையாக மயிலாப்பூர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கந்தகோடடம்:
ஆன்மநேய ஒருமைப்பாட்டையும், சமய ஒருமைப்பாட்டையும், ஒளி வழிபாட்டையும் முன்வைத்துச் சீர்திருத்தச் சிந்தனையை உருவாக்கி, இவ்வுண்மை நெறியை வளர்த்தவர் வள்ளலார்.
வள்ளலாரின் சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது கந்தகோட்டம்.
இராமலிங்க அடிகள், சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டி தெய்வமணிமாலை என்னும் பாமாலையைப் பாடியுள்ளார்.
அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே! அம்மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே! ஒருநெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.
உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும். என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும்
ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியே. இத்தகைய சிறப்புகளை நீ எனக்கு அருள்வாயாக என இராமலிங்க அடிகள் கந்தகோட்டத்து இறைவனிடம் வேண்டுவது மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
45. அ) பண்டைய காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகள் :
பண்டைக்காலத்தில் மன்றமென்றும் அம்பலமென்றும் அழைக்கப்படும் மரத்தடியில் உள்ள திண்ணையிலே கற்றல் கற்பித்தல் பணி இயற்கையோடு நடந்தது.
கல்விப்பயிற்சிக்காக வரும் மாணாக்கர்களிடம் ஏட்டின் மீது மஞ்சள் பூசிப் பூசித்து மாணாக்கர்களிடம் வாசிக்கச் சொல்வர் இதனை அகூராப்பியாசம் (எழுத்து அறிவித்தல்) என்பர்.
ஆசிரியர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்ல வேண்டும்.
ஆசிரியர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்லும் 'முறை வைப்பு' முறையில் கற்பித்தல் நடைபெற்றது.
'மையாடல் விழா' மூலம் மாணாக்கருக்கு எழுத்துகளை எழுதும் முறையை ஆசிரியர் கற்றுக் கொடுப்பார்.
ஆசிரியர் முதலில் தரையில் எழுத அதன்மேல் மாணாக்கர் எழுதுவர். இவ்வாறு எழுத்துகளைக் கற்பித்தனர். மாணாக்கரும் எழுத்துகளை வரிசையாகவும், நன்றாகவும் எழுதக் கற்றுக் கொண்டனர்.
பழைய காலத்தில் எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஓட்டாமல் வரிகோணாமல் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர்.
புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.
தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியன மூலமாகவும், ஆத்திசூடி கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்கள் மூலமாகவும் மனனம் செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தனர்.
கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூலம் கற்பித்தல் நடைபெற்றது.
எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் வரும் முறையும் இருந்தது.
சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையையும் கற்றுக் கொடுத்தனர்
மாணாக்கர்கள் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர்.
ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள்.
கற்றல் கற்பித்தலில் முக்கியமாக விளங்கிய வாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது.
அரசவையில் கூட வாதுபுரியும் அளவிற்குக் கற்றல் முறைகள் இருந்தன.
பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.
"வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இகக்கும்" - (நன்னூல் - 41)
ஞாபக சக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள்.
இவ்வாறு மாணவனின் எல்லா திறமைகளையும் வளர்க்கும் விதமாகக் கற்பித்தல் இருந்தது. மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.
அல்லது
ஆ) பண்டைய பள்ளிகளில் மாணவர்கள் கல்விக் கற்ற விதம் :
அக்காலத்து கல்வி முறையில் அடிப்படையான நூல்கள் எல்லாம் மாணவர்களுக்கு மனனம் ஆகவே இருக்கும்.
தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியன பாடமாக இருக்கும்.
கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்ப்பாடுகள் பாடமாக இருக்கும்.
‘தலைகீழ்ப் பாடம்’ என்று சொல்வதே அக்காலக் கல்வி முறைகளில் காணலாம்.
சிறுவர்கள் படிக்கும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்பவை அகராதி வரிசையில் அமைந்தவை.
அவர்களுடைய ஞாபகத்தில் அவை பதிவதற்கு எளிதாக இருந்தது.
இப்படியே அந்தாதி முறையைக் கொண்டும் செய்யுள்களை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.
பள்ளிக்கூடப் பிள்ளைகள் தமக்குத் தெரிந்த பாடங்களை அடிக்கடி சிந்தித்து வருவார்கள்.
பலர் ஒருங்குகூடிக் கேள்விகள் கேட்டும் விடை கூறியும் கற்று வருவார்கள் இதனால் அவருடைய கல்வி எந்த வேளையிலும் தடையின்றி இருந்தது.
46. அ) "கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன"
இந்தியாவின் முதுகெலும்பு கிராமமாகும். அழகியல் தன்மையோடு விளங்கும் கிராமங்கள் இன்று தங்கள் அழகியலை இழந்து கிராமத்திற்கே உரிய இலக்கணங்களை இழந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தமது வடிவழகையும் இழந்து வருகின்றன.
வாழ்வோடு இணைந்த கிராமம்:
அதிகாலையில் எழும்பி வீட்டு முற்றத்தைத் தூய்மை செய்து, கோலமிட்டுக் கடவுளைத் தொழுது குதுகலாமாகப் பொழுதினைத் தொடங்கும் வாழ்க்கை கிராம மக்களின் வாழ்வோடு இணைந்திருந்தது. ஏலேலோ பாடும் கிராமத் தென்றலில் தாலேலோ பாடி விவசாயம் செய்த காலம் மலையேற, கணினியில் கானல் நீராய் நம் கிராம மக்களின் வாழ்க்கையும் கரைந்தது. அந்தந்த கிராமத்தில் விளைந்ததை அங்கங்கே தின்று வாழ்ந்த காலத்தில் எந்த நோய்களும் தலை தூக்கியதில்லை.
அழகை இழக்கும் கிராமங்கள்:
இன்று பெருகி வரும் நகர்ப்புற நாகரிகத்தினால் கிராமங்கள் தங்கள் அழகை இழக்கின்றன. பாடித் திரிந்த பறவைகளின் ஒலிகள் இப்போது கேட்க முடியவில்லை. மனிதன் நகர்ப்புற நாகரிகத்தை நாடியதால் குளங்கள் குடியிருப்புகளாக மாறிவிட்டன. அகன்ற தெருக்களெல்லாம் தங்கள் இருப்பைச் சுருக்கிக் கொண்டன. கலாச்சார மாற்றங்களால் கூரை வேயப்பட்ட, ஓடுகளால் நிரம்பிய வீடுகள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தீப்பெட்டி போல மாற்றம் பெற்றுள்ளன. எல்லோரும் நீர் இறைக்கும் ஊர்க் கிணறு கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது.
முகவரி இழக்கும் கிராமங்கள்:
கிராமங்களுக்கே உரித்தான நாட்டுப்புற விளையாட்டுகளை எல்லாம் இன்றைய அலைபேசிகளும், முகநூல்களும், புலனங்களும் முடக்கி விட்டன. பச்சைப்பசேலன வளர்ந்து நிற்கும் நெற்பயிரை இன்று காணமுடியவில்லை. உழுது உணவைத் தந்த வயல்கள் எல்லாம் இன்று குடியிருப்புகளுக்காக அளக்கப்பட்டு எல்லைக் கற்களால் பிரிக்கப்பட்டு வீடுகளாக மாற ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன.
நாகரிக மோகத்தால் அழியும் கிராமம்:
கிராமத்திற்கே உரிய அன்பும், விருந்தோம்பல் பண்பும், வெள்ளந்தியான பழக்கமும் இன்று கொஞ்சம் கொஞ்சமாகத் தனது இயல்பை இழந்து வருகின்றது. கிராம மக்கள் நகர்ப்புற நாகரிகத்தின் மீது கொண்ட மோகத்தால் இயற்கையை இழந்து நகர்ப்புறம் தேடி வருவதும், ஊடகத்தாக்கமும், சமூக வலைத்தளங்களின் தாக்கமும் இயல்பான கிராம வாழ்க்கையை மாற்றி விடுகின்றன. ஒன்றுக்குள் ஒன்றாக உறவுகளாக இருக்கும் கிராம மக்கள் இன்று நாகரிக மோகத்தால் உறவுகளை மேம்படுத்தும் செயலில் இருந்தும் விலகி விடுகின்றனர்.
இவ்வாறாக அமைதியான சூழலில் அன்பாக வாழ்ந்து வந்த கிராம மக்கள் தங்கள் இயல்பை மாற்ற விரும்புவதால், தாங்கள் பழகிய, ஓட்டி உறவாடிய கிராமத்தை விட்டு நகர்ப்புறம் செல்வதால் கிராமங்கள் தங்கள் அழகியலை இழப்பதுடன் கிராமங்களுக்கே உரிய இயற்கைத் தன்மையையும் இழந்து தங்களது முகவரியைத் தொலைத்து நகர்புறச் சாயலுடன் புத்துருவாக்கம் அடைகின்றன.
அல்லது
ஆ) உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக.
முன்னுரை:
கண்ணுக்குக் காட்சியையும், சிந்தைக்குக் கருத்தினையும் தருவன நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சி என்னும் கனியைக் கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன. பழந்தமிழ் மக்களின் கலை. அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன. அவ்வகையில் எங்கள் பகுதியில் தெருக்கூத்துக் கலைஞர் ஒருவர் இருப்பதாக அறிந்து, அவரைச் சந்தித்தேன். அச்சந்திப்பின் தொகுப்பே இக்கட்டுரையாக மலர்கிறது.
பொருளுரை:
நான் சந்தித்த தெருக்கூத்துக் கலைஞரின் பெயர் மயில்வாகனன். அவர் வாயிலாகத் தெருக்கூத்து, அது ஆடப்படும் முறை, அதனை மீட்டெடுக்கக் காரணமானவர் எனப் பல்வேறு தகவல்களை நான் அறிந்து கொண்டேன். அது குறித்த விவரிப்பைக் கீழே காண்போம்.
நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து. இப்பெயர் அது நிகழ்த்தப்பட்;ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. கூத்து இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன் தொடர்புடையது. திறந்தவெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர். திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.
தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. 'அருச்சுனன் தபசு' என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது. தெருக்கூத்து, பொழுதுபோக்குக் கூறுகளைப் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்துள்ளது.
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் 'கூத்துப்பட்டறை' ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு. இதனைக் கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முடிவுரை:
மேற்கண்ட கருத்துகளை எங்கள் பகுதிவாழ் தெருக்கூத்துக் கலைஞர் திரு.மயில்வாகனன் அவர்கள் வாயிலாக நான் அறிந்து கொண்டேன். மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும், வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக நிகழ்கலைகள் விளங்குவதை நான் உணர இச்சந்திப்பு காரணமாக அமைந்தது.
பகுதி- 5
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6
47 . அ) ‘ விண்வேறு ‘- எனத் தொடங்கும் ‘இதில் வெற்றி பெற’என்னும் பாடல்
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு ;
மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்
மணல்வேறு; பனித்துளியும் மழையும் வேறு;
புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு;
புகழ்வேறு; செல்வாக்கு வேறு; காணும்
கண்வேறு; கல்விகண் வேறு; கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு.
ஆ) "உடைத்து" என முடியும் திருக்குறள்
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.உடைத்து.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 9843448095
12th Standard
PDF DOWNLODE 👇👇👇👇👇👇👇👇
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
11 ஆம் வகுப்பு
Unit Test - இயல் - 1 : Click Here
Unit Test - இயல் - 2 : Click Here
11 ஆம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click Here
11 ஆம் வகுப்பு
இயல் - 5
சீறாப்புராணம்
1 Mark questions
சீறாப்புராணம்
1 Mark questions (75) Pdf : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 4
பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
one word Questions & Answers PDF : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)
முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
மாதிரி வினாத்தாள்-3 : Click Here
மாதிரி வினாத்தாள்-4 : Click Here
மாதிரி வினாத்தாள்-5 : Click Here
பாநயம் பாரட்டல்
12 ஆம் வகுப்பு
மொழிப்பயிற்சி
2 mark QUESTIONS
இயல் 1,2,3 : Click Here