உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.
1.தாமரை இலை நீர்போல - பட்டும் படாமலும், ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல்
பெற்றோருக்கு நிதிச்சுமை அழுத்துவது தெரிந்தும், சில பிள்ளைகள் தாமரை இலை நீர்போலக் கண்டுக் கொள்ளாமல் இருப்பர்.
2. கிணற்றுத் தவளை போல - வெளி உலகம் தெரியாத நிலை
இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத் தவளை போல வாழ்கின்றனர்.
3. எலியும் பூனையும் போல - எதிரியாக
ரகுவும், ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.
எம்.ஏ.ஜெலஸ்டின்,
முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
4. அச்சாணி இல்லாத தேர்போல - சரியான வழிகாட்டி இல்லாத
நாட்டை வழிநடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர்போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர்.
5. உள்ளங்கை நெல்லிக்கனி போல் - வெளிப்படையாக, தெளிவாக
தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்களி போலத் தெளிவாய் விளங்கியது
6.பசுமரத்தாணி போல - எளிதாக
ஆசிரியர் கற்பித்த இலக்கணம் பசுமரத்தாணி போல் மனத்தில் பதிந்தது.
7. குன்றின் மேலிட்ட விளக்கு போல - வெளிப்படையாகத் தெரிதல்
அன்னை தெரசாவின் புகழ் குன்றின் மேலிட்ட விளக்கு போல ஒளி வீசுகிறது.
8. சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல - பெருமை
அமெரிக்க மண்ணில் விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல அமைந்தது.
9. கடலில் கரைத்த பெருங்காயம் போல - பயனற்றது.
முயற்சி இல்லாதவர்களுக்குச் சொல்கின்ற அறிவுரை கடலில் கரைத்த பெருங்காயம் போலப் பயனற்றது.
10. பூவுடன் சேர்ந்த நாரும் மணப்பது போல - நல்லவர்களுடன் சேர்ந்து நன்மை அடைதல்
என் மொழியாசிரியரிடம் பாடம் படித்த நான் பூவுடன் சேர்ந்த நாரும் மணப்பது போல மொழிப்புலமை பெற்றுப் புகழடைந்தேன்.
11. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல - ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்த பிள்ளைகள்
ராமுவும் அவன் நண்பர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல ஒற்றுமையுடன் பழகி வந்தார்கள்.
எம்.ஏ.ஜெலஸ்டின்,
முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
12. கரைக்காணாக் கப்பல் போல - தவிப்பு
கூட்டத்தில் தன் தாயைப் பிரிந்த குழந்தை, கரை காணாக் கப்பல் போலத் தவிதவித்தது.
13. காட்டுத்தீ போல - வேகமாகப் பரவுதல்
சில நேரங்களில் உண்மையை விட வதந்திகள் காட்டுத்தீ போலப் பரவுவதை நாம் உணர முடியும்.
14. அடியற்ற மரம் போல - பெரும் துன்பம்
கணவன் இறந்த செய்திக் கேட்ட கண்ணகி அடியற்ற மரம் போலச் சாய்ந்தாள்.
15. அனலில் இட்ட மெழுகு போல - துடிதுடித்தல்
பால் காய்ச்சும் போது தவறுதலாகக் கையில் ஊற்றிக் கொண்ட கவிதா, அனலில் இட்ட மெழுகு போல வலியால் துடித்தாள்.
16. இலைமறை காய் போல - மறைமுகமாக
திரைப்படத்தில் ஒரு சில மர்மங்களை இயக்குநர் இலைமறைகாய்போலக்
காட்டியிருந்தார்.
எம்.ஏ.ஜெலஸ்டின்,
முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
17. கண்ணினைக் காக்கும் இமை போல - அக்கறையாக,
தாய் தன் குழந்தையைக் கண்ணினைக் காக்கும் இமை போலப் பார்த்துக் கொண்டாள்.
18. கரை காணாக் கப்பல் போல - தவிப்பு
கூட்டத்தில் தன் தாயைப் பிரிந்த குழந்தை கரை காணாக் கப்பல் போலத் தவிதவித்தது.
19. கலங்கரை விளக்கம் போல - வழிகாட்டுதல்
ஆசிரியர் அறிவரசன் பாடம் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொடுப்பதால் மாணவர்களுக்குக் கலங்கரை விளக்கம் போலத் திகழ்ந்தார்.
20. கன்றினைக் கண்ட பசு போல - சேயைக் கண்டு தாய் அடையும்மகிழ்ச்சி
கூட்டத்தில் காணாமல் போன குழந்தையை மீண்டும் பார்த்தவுடன், நிர்மலா கன்றினைக் கண்ட பசு போல ஓடிச்சென்று தழுவினாள்.
21. நீர்மேல் எழுத்துப் போல - நிரந்தரமற்ற வார்த்தைகளைக் குறிப்பிடுதல்
குடிகாரனின் வாக்கு நீர்மேல் எழுத்துப் போலச் சொன்ன மாத்திரமே நீர்த்துப் போகும்.
22. கிணற்றுத் தவளை போல -வெளிஉலகம் தெரியாமல் இருப்பது
மல்லிகா படித்திருந்தாலும், கிணற்றுத்தவளை போல அறியாமையுடன் இருந்தாள்.
23. தூண்டிலில் மாட்டிய மீன் போல - துடிதுடிப்பு
கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்ட சிறுமி மீனா, தூண்டிலில் மாட்டிய மீன் போலத் துடித்தாள்.
24. அத்திப் பூத்தாற்போல் - அரிதாக
ராமு படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய பின், தொலைக்காட்சி பார்ப்பது அத்தி பூத்தாற்போல் ஆகிவிட்டது.
25.உடும்புப்பிடி போல் - கெட்டியாக
மாறன். தன் கொள்கைகளில் உடும்புப்பிடி போல இருந்தான்.
26. குடத்தில் இட்ட விளக்குப் போல - திறமையை வெளிக்காட்டாமல்
வாய்ப்புக். கிடைக்காததால் வள்ளியின் ஓவியத்திறமை குடத்தில் இட்ட விளக்கு போல இருந்தது.
27. இறகு ஒடிந்த பறவை போல - செயலற்றுப் போகுதல்
மனைவியை இழந்த குமரன் இறகு ஓடிந்த பறவை போல ஆனான்.
28.ஆனை வாயில் அகப்பட்ட கரும்பு போல - நசுங்கிப்போதல்
கரும்பு ஆலையின் இயந்திரத்திற்குள் விடப்பட்ட கரும்பு
ஆனை வாயில் அகப்பட்ட கரும்பு போலச் சக்கையானது.
29. கப்பல் கவிழ்ந்தாற் போல - சோகம்
பாரதி மதிப்பெண் குறைந்ததற்கு, ஏதோ கப்பல் கவிழ்ந்தாற் போல் சோகமாக இருந்தாள்.
30.கனியிருக்கக் காயை விரும்புவது போல - நல்லது இருக்க, கெட்டதை நோக்கி செல்வது.
பேசுவதற்குப் பல இனிய சொற்கள் இருக்கும் போது தீய சொற்களைப் பயன்படுத்துவது கனியிருக்கக் காயை விரும்புவது போல என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
31.கீரியும் பாம்பும் போல - சண்டை
கவியும் ரதியும் எப்போதும் கீரியும் பாம்பும் போல் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
எம்.ஏ.ஜெலஸ்டின்,
முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
32.குன்றின் மேலிட்ட விளக்குப் போல - அனைவரும் அறிதல்
கர்ணனின் கொடையுள்ளம் குன்றின் மேலிட்ட விளக்கு போல அனைவரது உள்ளத்திலும் பிரகாசித்தது.
33. சுடச்சுடரும் பொன் போல - அனுபவத்தால் தேர்ந்தவர் ஆதல்
சுடச்சுடரும் பொன் போல, வாழ்க்கையில் ஏற்படும். அனுபவங்கள் நம்மைச் செம்மைப் படுத்துகின்றன.
34. சூரியனைக் கண்ட பனி போல - துன்பம் விலகுதல்
சூரியனைக் கண்ட பனிபோலத் துன்பமெல்லாம் விலக வேண்டும் என்று மாதவி கடவுளை வேண்டினாள்.
35. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல - சொல்வதையே திருப்பித் திருப்பிச் சொல்லுதல்
சிறுபிள்ளைகள் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல அவர்கள் சொன்னதையே திருப்பிச் சொல்வார்கள்.
Follow us on (click the icon below to follow)
Want our latest news??
View our blog for latest news (click the icon below to visit our blog)
Tamilamuthu 2020
Photo by Mike Marrah on Unsplash உவமைத் தொடர் download free 👇