12 /இயல் - 3 12 - 2 / 3 SLSM/25
தமிழர் குடும்ப முறை , விருந்தினர் இல்லம் , கம்பராமாயணம், உரிமைத் தாகம்
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடைக் குறிப்பு
இயல் - 3
நம்மை அளப்போம் - புத்தகம் பக்கம் எண் .67
பலவுள் தெரிக.
1. 'குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்
அ) தொல்காப்பியம் ஆ) திருக்குறள் இ) குறுந்தொகை ஈ) புறநானூறு
விடை : ஆ) திருக்குறள்
2. பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க
சொல் பொருள்
அ) செற்றார் - 1) மகிழ்ச்சி
ஆ) கிளை - 2) காடு
இ) உவகை - 3) பகைவர்
ஈ) கானம் - 4)உறவினர்
அ) 2 4 3 1 ஆ) 3 4 1 2 இ) 2 4 1 3 ஈ) 3 2 4 1
விடை : ஆ) 3 4 1 2
3. "இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது ______________________ (செப் 2021 , ஆகஸ்ட் 2022 )
அ) வக்கிரம் ஆ) அவமானம் இ) வஞ்சனை ஈ) இவை அனைத்தும்
விடை : ஈ) இவை அனைத்தும்
4. "தந்தனன் தாதை தன்னைத் தடக்கையான் எடுத்துச் சார்வான்" - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு
அ) உரிச்சொல் தொடர் ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை ஈ) இடைச்சொல் தொடர்
விடை : அ) உரிச்சொல் தொடர்
5. "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே"என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது
(ஆகஸ்ட் 2022, மார்ச் 2023, மார்ச் 2025)
அ) தனிக்குடும்ப முறை ` ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூக முறை ஈ) தந்தை வழிச் சமூகமுறை
விடை : ஈ) தந்தை வழிச் சமூகமுறை
குறுவினா
1. புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு எழுதுக . (பெ.ஆ.க-6. மார்ச்2020, ஆகஸ்ட் 2022 ,மார்ச் 2024)
புக்கில்:
தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கும்.
தன்மனை:
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம்.
2. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
“உன் பகைவர், எனக்கும் பகைவர், தீயவராக இருப்பினும் உன் நண்பர்கள் என் நண்பர்கள்;
உன் உறவினர், என் உறவினர்; என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர்; நீ என் இனிய உயிர் நண்பன்!” என்று இராமன் சுக்ரீவனிடம் கூறினான்.
3. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்? ( ஜூலை 2024 )
ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு இவையே எதிர்பாராத விருந்தாளிகளாக ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்தியிருக்கின்றார்.
4."துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது" என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்? (செப்.2020)
அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஆ. சிறு துரும்பும் பல்குத்த உதவும்
"நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்னும் பழமொழிக்குப் பொருந்தும்.
5. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
(செப் 2021, ஜூலை 2024)
தலைமைப் பொறுப்பு ஏற்றனர். குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர். குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்லங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.
சிறுவினா
1. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம்- விளக்கம் எழுதுக? (பெ.ஆ.க. 1,5, செப் 2021, மே 2022 , ஆகஸ்ட் 2022)
விரிந்த குடும்பம்:
தனிக்குடும்ப அமைப்பில் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழ்வது விரிந்த குடும்ப அமைப்பு முறையாகும்.
கூட்டுக் குடும்பம்:
விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே கூட்டுக் குடும்பமாக இன்றைய சமூகத்தில் மாற்றம் பெற்றுள்ளது. கூட்டுக் குடும்பம் என்பது பெற்றோர், அவர்களது மணமாகாத பிள்ளைகள், மணம் முடித்த பிள்ளைகள் அவர்களது துணைவர், அவர்களது பிள்ளைகள் இணைந்து வாழ்வதாகும். சில நேரங்களில் கூட்டுக்குடும்பங்களில் பெற்றோரின் உடன்பிறந்தவர்கள், பெற்றோர்களின் தாய், தந்தை, இரத்த உறவால் பிணைக்கப்பட்ட நேர்வழி, கிளைவழி உறவினர்கள் என அனைவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பமாகும்.
2. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச்சுட்டிக் காட்டுக.
(பெ.ஆ.க. 1 ,4 ,6 , ஜூலை 2024,மார்ச் 20 25)
குகனின் அளவற்ற அன்பால் இராமன் அவனைத் சகோதரனாக ஏற்றுக் கொண்டான் . இதன் மூலம் “நால்வராக இருந்த நாங்கள் உன்னுடன் ஐவர் ஆகிவிட்டோம்”என்றான் .
சுக்ரீவனைப் பார்த்து இராமன்," நீ வேறு; நான் வேறு அல்ல" என்று கூறி “ஐந்து பேரான நாங்கள் உன்னையும் சேர்த்து ஆறுபேர் ஆகிவிட்டோம்” என்றான்
வீடணன் இலங்கையை விட்டு வெளியேறி இராமனிடம் அடைக்கலம் வேண்டினான் அடைக்கலம் கொடுத்த இராமன் அவனையும் தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டு ,”அறுவரான நாங்கள் இப்போது எழுவர் ஆகிவிட்டோம்” என்றான்.
3. “வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து"இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக. ( செப் 2020 )
இடம்:
இப்பாடல் வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய 'விருந்தினர் இல்லம்' என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
பொருள்:
இவ்வுலகில் வாழ்கின்ற நாம், வாழ்வினில் வரும் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்றி செலுத்த வேண்டும்.
விளக்கம்:
மனித வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு, வக்கிரம், அவமானம், வஞ்சனை , துக்கம் இவையெல்லாம் நமக்குப் புதிய உலகையையும், புதிய வழிகாட்டுதல்களையும் தருவதால் 'வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும்' என்று கவிஞர் கூறுகிறார்.
4 . தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்குச் செய்யும் உதவிகள் யாவை? ( ஜீன் 2023, மார்ச் 2025 )
நான் செய்யும் உதவிகள்:
நான் சாப்பிடும் தட்டுகளையும், நான் நீர் அருந்தும் குவளைகளையும் சுகாதாரமான முறையில் நானே தூய்மை செய்வேன். எனது படுக்கை விரிப்புகளையும் போர்த்திக் கொள்ளும் போர்வையையும் நானே தினமும் பராமரிப்பேன்.என்னுடைய ஆடைகள் அனைத்தையும் நானே சலவை செய்து தூய்மையாக உடுத்துவேன். என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகளுக்குக் காலை, மாலை என இருவேளைகளிலும் தண்ணீர் ஊற்றுவேன்.
வீட்டைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் என் பெற்றோருடன் இணைந்து கொள்வேன். வீட்டிற்குத் தேவைப்படும் பொருட்களைக் கடைக்குச் சென்று வாங்கிவருவேன். தெருக்குழாய்க்குச் சென்று வீட்டிற்குத் தேவையான குடிநீரைக் கொண்டு வருவேன். வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க பெற்றோருக்கு உதவியாக இருப்பேன்.
5. மணந்தகம் விளக்குக.
திருமணம் புரிந்து கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே 'மணந்தகம் எனப்படுகிறது. முதல்குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.
இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி செவிலிக்குரியது என்று தொல்காப்பியம் கூறுகின்றது. இதன் மூலம் மணந்தகம் என்னும் குடும்ப அமைப்பு முதன்மை பெற்றிருந்ததை அறிய முடிகிறது.
நெடுவினா
1. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது எவ்வாறு? விளக்குக. ( செப் 2021, செப் 2022,ஜூன் 2023 )
குடும்பம்
குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது.குடும்ப அமைப்பு ஏற்படுவதற்குத் திருமணமே அடிப்படை. குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து செயல்படும்.
தாய்வழிக் குடும்பம்
சங்க காலத்தில் கண ( குழு) சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. தாய்வழிக்குடும்பங்களில் பெண்களே முதன்மையானவர்கள். குடும்பத்தின் சொத்தும், செல்வங்களும் பெண்களுக்கே சென்று சேர்ந்தன.
தந்தை வழிக்குடும்பம்
ஆண்மையச் சமூகமுறை வலுவாக வேரூன்றிய பின் தந்தை வழிக் குடும்பங்கள் தோன்றின. இதில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, பெண் தன் கணவனையே முழுவதும் சார்ந்திருந்த நிலை ஏற்பட்டது.
தனிக்குடும்பம்
தந்தை, தாய், குழந்தை மூவருமுள்ள குடும்பமே தனிக்குடும்பம் ஆகும். இது சமூகப்படி
மலர்ச்சியில் இறுதியாக ஏற்பட்ட ஒன்றாகும்.
விரிந்த குடும்பம்
தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களுடன் பெற்றோரின் தாயும், தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்ப அமைப்பு தோன்றியது. இதன் தொடர்ச்சியாகவே இன்றைய சமூக அமைப்பும் கூட்டுக்குடும்பம் , தனிக்குடும்பம் என்ற அலகுகளைக் கொண்டதாக விளங்குகிறது.
குடும்பமே பரந்த சமூகத்தைக் கட்டமைத்தல்
குடும்பம் என்ற சிறிய அலகிலிருந்தே பரந்த சமூகம் கட்டமைக்கப்படுகிறது. தனிமனித ஒழுக்கம், சமூக நெறிகளுக்குக் கட்டுப்படுதல், பிறரை நேசிக்கும் பண்பு, விட்டுக் கொடுத்தல், கூடி வாழ்தல் போன்ற பரந்த சமூகத்துக்குத் தேவையான அடிப்படைப் பண்புகள் குடும்ப நிலையிலேயே கற்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பமும், அதன் உறுப்பினர்களுக்கு இயல்பாகக் கற்பிக்கும் இப்பண்புகளே வலுவான பரந்த சமூகத்தைக் கட்டமைக்கப் பேருதவி புரிகின்றன.
2. பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன் பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக. (அ) இராமனிடம் வெளிப்படும் உடன்பிறப்பியப் பண்பினை கம்பராமாயணம் வழிநின்று விளக்குக. (பெ.ஆ.க-3, செப்.2020, மார்ச்.2024)
இராமன் அனைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பண்பின் அடையாளமாக விளங்குகின்றான். தந்தை, தாய் மீதான அன்பு, உடன்பிறப்புகள் மீது அன்பு ஆகிய எல்லைகள் அனைத்தையும் கடந்து இராமனின் பண்பு விரிவடைகிறது. வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வேலிகள் அவன் அன்பிற்குத் தடையாக இருக்கவில்லை.
மகன் என்ற உறவு நிலை :
சீதையை இராவணன் சிறை எடுத்துச் சென்றபோது அதனைத்தடுத்து இராவணனுடன் போரிட்டு. காயமடைந்து பின் உயிர் துறந்தான் சடாயு. கேள்விப்பட்ட இராமன் மிகுந்த வருத்தமடைந்தான். தன் தந்தை தசரதனின் நண்பனான சடாயுவைத் தன் தந்தையாகக் கருதி, தந்தைக்கு மகன் செய்யும் இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்தான்.
தன்னையே நினைத்துத் தவம் செய்து கொண்டிருந்த எளிய முதியவளான சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.அவளுக்கு இனிய உரைகளை வழங்கி அவளது நலத்தை விசாரித்து ,மகன் தாய்க்குச் செலுத்தும் அன்பைச் செலுத்தினான்.
உடன்பிறப்பு என்ற உறவுநிலை:
தன்மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்த குகன், தன்னைப் பிரிய மனமில்லாமல் வருந்துவதை இராமன் அறிகின்றான்.இராமன் குகனிடம், "முன்பு உடன் பிறந்தவர்கள் நான்குபேராக இருந்தோம் இப்போது உன்னையும் சேர்த்து ஐந்து பேராக உள்ளோம்'' என்றான்.
இலங்கை சென்று இராவணனுடன் கடும்போர்புரிந்து திரும்பிய சுக்ரீவனின் செயலைக் கண்டு வியந்த இராமன் சுக்ரீவனிடம் நீ வேறு நான் வேறல்ல; என்று கூறுகின்றான்.அத்துடன் சுக்ரீவனையும் தன் உடன்பிறப்பாக ஏற்றுக் கொள்கின்றான்.
சீதையைக் கவர்ந்து வந்த இராவணனின் செயலைக் கண்டித்தான் வீடணன் இராவணன் அவனைக் கடிந்து கொண்டதால் இலங்கையை விட்டு வெளியேறிய வீடணன் இராமனிடம் அடைக்கலமானான்.வீடணனுக்கு இலங்கையை ஆளும் உரிமையைக் கொடுத்ததுடன் அவனையும் தன் உடன்பிறப்பாக இராமன் ஏற்றுக் கொள்கின்றான்.
இவ்வாறாக இராமன் பணியாளனாய்; சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய்; தாய் மீது அன்பு கொண்ட சேயாய்; உயிர்தரும் நண்பனாய்; உரிமையை வழங்கும் உடன்பிறப்பாய் பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் கூற்றுப்படி பிற உயிர்களுடன் உறவு நிலை கொண்டிருந்தான்.
(அல்லது)
இராமன் - குகன் உறவுநிலை:
வேடுவர் தலைவனான குகன், இராமனைப் பிரிய மனமில்லாமல் வருந்துகிறான். குகளின் நிலையைக் கண்ட இராமன் "இதற்குமுன் என் உடன்பிறந்தோர் நால்வர்; இன்று உன்னோடு ஐவரானோம்" என்று குகனைத் தன் உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டான்.
இராமன் சடாயு உறவுநிலை:
இராவணன் சீதையைச் சிறையெடுத்த போது கழுகு வேந்தன் சடாயு தடுத்துச் சண்டையிட்டு இறந்து விடுகிறான். சடாயு பறவையினத்தைச் சார்ந்தவன் என எண்ணாமல், தன் தந்தையாகக் கருதி, முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்து தந்தை-மகன் உறவு நிலையைப் பேணினான்.
இராமன் -சவரி உறவுநிலை:
இராமன், தன்னையே நினைத்து தவமிருந்த சவரியைத் தாயாக ஏற்று, அவளின் உலகப்பற்று நீங்க உறுதுணை செய்தான் இங்கு தாய் - மகன் உறவுநிலையைப் பேணினான்.
இராமன் -சுக்ரீவன் உறவுநிலை:
சீதையைத் தேடி வரும் இராமன், கிட்கிந்தையில் சுக்ரீவனைச் சந்திக்கிறான். சுக்ரீவனிடம், உன் பகைவர், நண்பர், உறவினர் எனக்கும் அத்தகையவரே. நீ என் இனிய நண்பன் என்று கூறுகிறான். இங்கு வானரகுலத்தைச் சேர்ந்த சுக்ரீவனிடம் நட்பு என்னும் உறவுநிலையைப் பேணினான்.
இராமன் - வீடணன் உறவுநிலை:
இராவணனைப் பிரிந்து தன்னிடம் அடைக்கலம் வேண்டி நின்ற வீடணனை உடன்பிறந்தவனாக ஏற்றுக்கொண்டு இலங்கை அரசை அவனுக்கு உரிமையாக்கினான்.
3.உரிமைத் தாகம் கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
முன்னுரை :
நிலம் சடப் பொருள் அன்று. நிலத்தோடு பேசக்கூடிய மனிதர்கள், இன்றைக்கும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வருவாய் பெரிதாக வரவில்லை என்றாலும் நில உரிமை, நிலம் சார்ந்த வேளாண்மை ஆகியவற்றை ஒரு பண்பாடாகவே கொண்டுள்ள மனிதர்களைப் பார்க்கிறோம். நிலத்துடனான உறவு, குடும்ப உறவையும் வலுப்படுத்தும் தன்மையை உரிமைத்தாகம் சிறுகதை எடுத்துரைப்பதை இனிக் காண்போம்.
அண்ணன் தம்பி உறவு :
முத்தையன் அண்ணன். அவனின் தம்பி வெள்ளைச்சாமி. முத்தையனின் மனைவி மூக்கம்மாள். பொறுப்பானவள். வெள்ளைச்சாமியைத் தன் மகன்போல நினைத்து வளர்த்தவள். வெள்ளைச்சாமிக்கு அப்பா முகம்கூடத் தெரியாத வயதில் இறந்து விட்டார். அம்மா மட்டும் முத்தையனோடு வாழ்ந்து வந்தாள்.
திருமணம் ஆகும்வரை அண்ணன் அண்ணியிடம் பாசமாகத்தான் வளர்ந்தான். வெள்ளைச்சாமி திருமணமான பின்பு மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அண்ணனுடன் தகராறு, பங்கு பாகம் சொத்து சுகம் எல்லாம் பிரியினையாகியது. "நீயெல்லாம் எனக்கு அண்ணனாக்கும்" என்று வெள்ளைச்சாமி கேட்டது முத்தையனை வருத்தமடையச் செய்தது. தோளில் சுமந்து வளர்த்த தம்பி சொத்துக்காகத் தூக்கி எறிந்து பேசியது மூக்கையனை உறுத்தியது.
அண்ணியே அம்மா:
அம்மா இருந்தும், அம்மா நிலையில் இருந்து வளர்த்தெடுத்தவள் அண்ணி மூக்கம்மாதான் என்பது வெள்ளைச்சாமிக்கு நன்கு தெரியும். என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் “மதனி கஞ்சி வேணும்" என்று கேட்டவுடன் அலுத்துக் கொள்ளாமல் கஞ்சி கொடுப்பாள். எந்த நேரமும் மூக்கம்மாளின் வாயிலிருந்து இந்தாடா வெள்ள" என்பதுதான் வரும்.
பங்காளிச் சண்டை :
ஒரே வீட்டில் ஒற்றுமையாக இருந்த பாசக் குடும்பம், வெள்ளைச்சாமியின் திருமணத்திற்குப்பின் பிரிந்தது. மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அண்ணனிடம் தகராறு செய்து சொத்தைப் பிரித்துக் கொண்டு தனிக்குடும்பம் போனான்.
வெள்ளைச்சாமியின் கடன் தொல்லை :
இரண்டு வருடத்திற்கு முன்பு மேலூர் பங்காரு சாமியிடம் இருநூறு ரூபாய் கடன் வாங்கியிருந்தான் வெள்ளைச்சாமி. அதன்பேரில் ஆறு மாதத்திற்கு முன்பு மேலக்காட்டை வட்டிக்கு ஈடா நம்பிக்கைக் கிரையத்திற்கு எழுதிக் கொண்டார் பங்காருசாமி.
இப்பொழுது பணத்தைக் கட்டச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் பங்காருசாமி. இல்லையென்றால் காட்டை நான் உழுது விதை விதைப்பேன் என்றார். இந்தச் செய்தியை அறிந்ததால் வெள்ளைச்சாமிக்கும் அவன் மனைவிக்கும் கடுகடுப்பான உரையாடல் நடந்தது. இதைக் கேட்ட மூக்கம்மா முத்தையனிடம் எடுத்துச் சொன்னாள். முத்தையன் வருத்தப்பட்டான். மேலூர் பங்காரு சாமியைப் பார்ப்பதற்குமுன் தம்பியிடம் வலியச் சென்று பேசி ஆறுதல் சொன்னான்.
ஒரு தாய் மக்கள்:
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்பதற்கிணங்க, மூக்கம்மாள் தன் நகைகளைக் கழற்றிக் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்டு பங்காருசாமியிடம் வட்டியும் முதலையும் செலுத்திக் காட்டை மீட்கச் சென்றான். பங்காருசாமி இருநூறு ரூபாயை நானூறு எனச் சொல்லி வாய்த்தகராறு செய்தார். தன் தம்பிக்காகத் தான் வந்தேன். தெரிந்ததைப் பார்த்துக் கொள்ளலாம் எனக் கோபமாகப் புறப்பட்டுப் போனான் மூக்கையன்.
மறுநாள் அண்ணனும் தம்பியும் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்தனர். பங்காரு அங்கு வந்து சட்டம் பேசினார். அண்ணனும் தம்பியும் அடிக்கப் பாய்ந்தனர். பங்காருசாமி உயிர் பிழைத்தால் போதுமென்று மேலூரை நோக்கி ஓடிப்போனார்.
முடிவுரை:
இக்கதையின் ஆசிரியர் பூமணி, பங்காளிச் சண்டையைச் சுட்டிக்காட்டி, அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உரிமையையும் உறவையும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதைத் தன் ‘உரிமைத்தாகம்' கதையின்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.