12th Standard- +2Tamil - Tamil -Study Material - QUARTERLY EXAM QUESTION PAPER 2023 -SEPTEMBER 2023- ORIGINAL QUESTION PAPER - ANSWER KEY - 12 ஆம் வகுப்பு -தமிழ் - காலாண்டுத் தேர்வு வினாத்தாள் 2023 - செப்டம்பர் 2023-விடைக் குறிப்பு-
கன்னியாகுமரி மாவட்டப் பொதுத் தேர்வு
காலாண்டுத் தேர்வு - செப்டம்பர் 2023
நேரம்: 3:மணி வகுப்பு-1 2 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
விடைகள்
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1.இ) தொல்காப்பியம்
2. ஆ) உயர்திணை அஃறிணை
3. இ) மழை துளிகள்
4. ஈ) இவர்
5. ஈ) தந்தை வழிச் சமூக முறை
6. அ) 2014
7.ஆ) பாரதியார்
8. ஆ) 4 3 2 1
9. ஈ) அ, ஆ, இ , அனைத்தும்
10. ஆ ) அகநானூறு
11. ஆ) எழுத்துப் பயிற்சி
12.அ) கம்பராமாயணம்
13. இ) சொல்லிசை அளபெடை
14. ஈ) 103
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக 3 x 2 = 6
15. தமிழின் துணை வேண்டும்
செந்நிறத்து வானம் . வானம் போல கைகள் சிவந்திட உழைக்கும் தொழிலாளர்களின் உயர்வை வெள்ளம் திரண்டு அவர்களின் தோள் மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும் இந்த அழகினை வியந்து பாட செந்தமிழின் துணை வேண்டும் எனக் கவிஞர் சிற்பி கூறுகிறார்.
16. ஆளுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
மரத்தின் எல்லாவிதமான பயன்களையும் எடுத்துரைப்பேன். மரம் தரும் இதமான நிழல், மண்ணரிப்பைத் தடுக்கும் மரத்தின் மகத்தான செயல், விண் துளி மண்ணில் விழ அடிப்படையாக விளங்கும் மரத்தின் தன்னிகரற்ற செயல் பற்றி எடுத்துரைப்பேன். உயிர்வளிக்கு ஆதாரமாய் உயிர்வளி உற்பத்தியின் கொடை வள்ளலாய் இருக்கும் மரத்தின் ஒப்பற்ற செயல்களைப் பற்றிக் கூறுவேன்.
17. நிலையாமை குறித்து சபரி உரைக்கும் கருத்து
“ என் பொய்யான உலகப்பற்று அழிந்தது ; அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் அழிந்தது ;என் பிறவி ஒழிந்தது”. இதுவே நிலையாமை குறித்து சபரி உரைத்த கருத்தாகும்.
18. சுரதா - பெயர்க்காரணம்
கவிஞர் சுரதாவின் இயற்பெயர் ராஜகோபாலன் ஆகும். பாரதிதாசன் மீது மிகுந்த பற்று கொண்டதால் ‘சுப்புரத்தின தாசன்’ எனத் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.பின் அதனையும் சுருக்கி ‘சுரதா ‘என மாற்றிக் கொண்டார்.
19. கீழ்த்திசை சுவடிகள் நூலகம்
காலிங் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869ல் உருவாக்கப்பட்ட இந் நூலகம் அரிய ஓலை சுவடிகள் தாழ்ச்சுவடிகள் புத்தகங்கள் என பெரும் தொகுப்புகளை கொண்டுள்ளது.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
20. மையாடல் விழா
சுவடியில் உள்ள எழுத்துக்கள் தெளிவாகத் தெரிய வசம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச் சாறு அல்லது ஊமத்தை இலை சாறு ,மாவிலை கரி ,தர்பை கரி ஆகியவற்றைக் கலந்து செய்த மையினை சுவடியில் தடவுவர் . அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும். இங்ஙனம் மை தடவி புத்தகத்தை வாசிக்க தொடங்குவதால் எழுத்துப்பயிற்சியை மையாடல் விழா விழா சொல்வார்கள்.
21. ஆற்றங்கரைப் படிவு
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு வரும் காலங்களில் அடித்து வரப்படும் பொருட்கள்
ஆற்றின் ஓரங்களில் பதிந்து விடும். இது ஆற்றங்கரைப் படிவு எனப்படும்.
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22. பேச்சு வழக்கு எழுத்து வழக்காக மாற்றுக
பிள்ளைக்கு உடம்பு சரியில்லை மூன்று நாட்களாக சிரமப்படுகிறது.
23. பகுபத உறுப்பிலக்கணம்
அ) அமர்ந்தான் - அமர்+த்(ந்)+ த்+ஆன்
அமர் - பகுதி
த்(ந்) - த் சந்தி த்,சந்தி,த்,ந் ஆனது விகாரம்.
த் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
ஆ) விளங்கி - விளக்கு + இ
விளங்கு - பகுதி
இ - வினையெச்ச விகுதி
24.புணர்ச்சி விதி
அ) செந்தமிழே = செம்மை + தமிழே
ஈறுபோதல் - செம்+ தமிழே
முன் நின்ற மெய் திரிதல் - செந்தமிழே
ஆ) எத்திசை = எ+ திசை
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்மும் க ச த ப மிகும் - எத்திசை
காது கேளாதவர்களுக்கான மாற்று வினா
சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடர் அமைக்க
பலகை
எங்கள் வீட்டு கதவு பலகையால் செய்யப்பட்டது.
பல கைகள் ஒன்றிணைந்து வெற்றியை தமதாக்கின.
25. கலைச் சொல்லாக்கம்
அ) Take Off - வானூர்தி கிளம்புதல்
ஆ) Visa - நுழைவு இசைவு
26. மூன்றாவது சீர் அமைக்க
அ) கல்வி கரையில கற்பவர்
ஆ) உண்ணாது நோற்பார் பெரியர்
27. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர் அமைத்தல்
அனைவரையும் அன்புடன் அழைத்தவனுக்குத் துன்பம் தர யாருக்கு மனம் வரும்.
28. வல்லினமைகளை இட்டும் நீக்கியும் எழுதுக.
மாணவர்கள் பெற்றோர்களைத் தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்து_ கொள்ள வேண்டும்.
29. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
அலை ,அளை,அழை
அலையுள் இருந்த பாம்பைப் பிடிக்க, அலைந்து திரிந்து பாம்பாட்டியை அழைத்து வந்தான்.
30. உவமை தொடர்களை சொற்றொடர்களில் அமைக்க
அ) தாமரை இலை நீர் போல
உண்மையான துறவியர், உலக ஆசைகளில் மனத்தைப் பறி கொடுக்காமல் தாமரை இலை நீர் போல இருப்பர்.
ஆ) அச்சாணி இல்லாத தேர் போல
தலைவனை இழந்ததால் குடும்பம், அச்சாணி இல்லாத தேர் போலத் தடுமாறுகிறது.
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
31. தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயம்:
மாலை நேரச் சூரியன், மலை முகட்டின் மீது தலையைச் சாய்க்கின்றான்.
சூரியனின் செம்மஞ்சள் நிறம், வானம் முழுவதும் பூக்காடு போலப் பரவிப் படர்ந்துள்ளது.
இயற்கை ஓவியன் புனைந்த அழகிய செந்நிறத்துப் பூக்காடாக வானம் தோன்றுவதற்கு மாலை நேரத்துச் சூரியன் காரணமாக அமைந்துள்ளான் என்பதனை இத்தொடர் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தி வானத்தின் சிவந்த நிறமும், அன்றாடம் உழைத்து வாழும் உழைப்பாளிகளின் கை வண்ணமும் ஒன்றே என்பதை கவிஞர் சிற்பியின் இவ்வரிகள் நயமாகக் காட்சிப்படுத்துகின்றன.
32. வாடைக் காலத்தில் கோவலர்களின் நிலை
வாடைக் காலத்தில் பெய்த பெருமழையால் வெள்ளம் பெருகியது. தாழ்வான பகுதிகளில் வாழ்ந்த கோவலர் பெருகிய வெள்ளத்தை வெறுத்தனர். தம் நிறைகளை மேடான நிலங்களில் மேய விட்டனர்.
அவர்கள் சூடி இருந்த காந்தள் மலர் மாலைகள் கசங்கின. மலையையே நடுங்க செய்வது போன்ற குளிரில் பாதுகாப்பைத் தேடினர். ஆயர், பலர் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். எனினும், அவர்களின் பற்கள் வாடை குளிரால் நடுங்கின.
33. சாடயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமைகள்:
இராவணன் சீதையைச் சிறையெடுத்துச் சென்ற போது அதனைத் தடுத்து சண்டையிட்டுக் காயம்பட்டுத் தன் உயிரை இழந்தான் சடாயு. தனக்காகச் சடாயு தன்னுடைய உயிரை இழந்ததை அறிந்து இராமன் தன் தந்தை தசரதனின் நண்பனான சடாயுவைத் தன் தந்தையாக எண்ணினான்.
தந்தைக்கு மகன் எவ்வாறெல்லாம் இறுதிச் சடங்கு மேற்கொள்வானோ அவ்வாறே, பார்ப்பவர்கள் வியக்கும்படியாகக் கரிய அகில் கட்டைகளையும் சந்தனக்கட்டைகளையும் கொண்டு வந்து ஒழுங்காகப் பரப்பி, அதன்மேல் தேவையான தருப்பைப் புற்களை அடுக்கி,பூக்களைத் தூவி, மணலினால் மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச் சடங்கு செய்யக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகக் கருதிய சடாயுவைத் தன் பெரிய கைகளில் தூக்கி வந்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார்.
34. வாயிலேயே பாடல் புறநானூற்று திணைக்கு உரியது.
பாடு + ஆண் + திணை = பாடாண்திணை,பாடப்படும் ஆண்மகனின் ஒழுக்கம்.
ஒருவனின் புகழ், வலிமை, வள்ளன்மை, வீரம், வெற்றி முதலியவற்றைப் புகழ்ந்து பாடுவது.
தன்னை நாடிவரும் புலவர்கள் முதல் அனைவருக்கும் அவரவர் தேவையை அறிந்து வாரி வழங்கும் வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமான் தன்னை நாடி வருவோருக்கு இல்லை என்று சொல்லாதவன் என்பதைப் “பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!” என்ற வரிகள் மூலம் அறியலாம். இதன்மூலம் அதியமானின் கொடைத்தன்மைப் புலனாகிறது.
விரைந்து ஓடும் குதிரையைத் தன் படையில் கொண்டவன் அதியமான் என்பதை “கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி” என்ற வரிகள் மூலம் அறியலாம். இதன்மூலம் அதியமானின் படைச்சிறப்புப் புலனாகின்றது. இவ்வாறு அதியமானின் கொடைத் தன்மையும், படை தன்மையும் (வீரம்) புலனாவதால் இப்பாடல் பாடான் திணையைச் சார்ந்ததாகும். (இயல் - 4 - புறநானூறு, வினா பக் : 101 )
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
35. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பவை :
‘இந்திய சராசானிக் கட்டடக் கலை’ பாணியில் கட்டப்பட்ட மத்திய தொடர்வண்டி நிலையம், தென்னக தொடர்வண்டி தலைமையகம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், பொது அஞ்சல் அலுவலகம், உயர் நீதிமன்றம், சென்னைப் பல்கலைக்கழகம், ரிப்பன் கட்டடம் , விக்டோரியா அரங்கு, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று வழங்கப்படும் ‘மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ்’, எழும்பூர் மற்றும் கோட்டை அருங்காட்சியங்கள், கன்னிமாரா நூலகம், திரைப்படத் தொழில் சார்ந்த இடங்களும் திரையரங்குகளும் சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பவை ஆகும். (இயல் - 5 -மதராசப்பட்டினம் - வினா பக் : 125)
36.மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
ஆசிரியர் முதலில் மாணாக்கர்களின் வலக்கை ஆள்காட்டி விரலைப் பிடித்துத் தட்டில் பரப்பி வைத்துள்ள அரிசி அல்லது தானியங்களில் எழுதிக்காட்டுவார். மணலில் எழுத்தின் வரிவடிவை எழுதுவார். மாணாக்கர் ஒலி வடிவை நன்றாகச் சொல்லத் தெரிந்த பின்புதான் வரிவடிவை ஓலையில் வரைந்து காட்டுவார்.
ஓலையை இடக்கையில் பிடித்து, வலக்கையால் எழுத்தாணியைக் கொண்டு எழுதிப் பழக்குவார். எழுத்தாணியைப் பிடித்து எழுதும்போது ஓலையைத்தான் நகர்த்துவார். எழுத்தாணி பிடித்த இடத்திலிருந்தே வரையும்.ஓலையில் வரிவரியாக எழுத்தின்மீது மற்றோர் எழுத்துப்படாமலும், ஒருவரியின் மீது மற்றோர் வரி இணையாமலும் போதிய இடம் விட்டு எழுதுவார்கள்.
கல்வெட்டுகளில் கல்தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டன. களிமண் பலகையிலும் எழுத்தாணி கொண்டே எழுதினர். எழுத்துகளின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்து. காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்திக் காகிதங்களில் எழுதும் முறையைக் கற்றுக் கொண்டனர். காகிதங்களில் எழுதும்போது கையை நகர்த்தி எழுதுவர்.(இயல் -4பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் -சிறுவினா பக் : 101)
37.பேரிடர் மேலாண்மை ஆணையம்:
நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து, சூறாவளி, பனி புயல், வேதி விபத்துக்கள் முதலான பேரிடர்கள் நிகழும்போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற இந்த ஆணையம் உதவுகிறது. இதற்காக மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் பல்வேறு குழுக்கள் அமைத்துப் பேரிடர் காலங்களில் செயலாற்ற பேரிடர் மேலாண்மை ஆணையம் வழிவகை செய்துள்ளது. (இயல் - 2 -பெருமழைக்காலம் - சிறுவினா பக் : 43 )
38. சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம்
இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்
ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப்பின்னல்) என்பர்
வண்மை உணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.
சான்று: கடந்தடு தானை…… (புறம்:110)
இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்
சான்று: படாஅம் ஈத்த…. (புறம்:145)
சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்பவரும் தன்மையும் உண்டு.
சான்று: புணரின் புணராது…..(நற்:16)
சொல்விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் இடம்பெறுவது உண்டு.
சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை….(புறம்:290)
இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க பண்புகளாகும்.
(இயல் - 1 -தமிழ் நடை அழகியல் - சிறுவினா பக் : 19 )
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 = 12
39. அ) நிரல்நிறை அணி.
அணி இலக்கணம்:
ஒரு செய்யுளில் முதலில் ஒரு சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள்கொள்ளும் முறை நிரல் நிறை ஆகும். அதாவது சிலசொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து அதனோடு
தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறை மாறாமல் சொல்வது நிரல் நிறை அணி ஆகும்.
சான்று :
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
விளக்கம்:
இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும்.
அணிப்பொருத்தம்:
இக்குறட்பாவில் அன்பு, அரண் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே, இந்தத் திருக்குறள் நிரல் நிறை அணி ஆகும்.
(இயல் - 3 -திருக்குறள் - சிறுவினா பக் : 78 )
( அல்லது )
ஆ) “ சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்”
இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வருகிறது.
அணியிலக்கணம்:
கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி அதற்கு ஏற்ப இணையானதொரு பொருளை உருவகம் செய்யாது விட்டு விடுவது ஏகதேச உருவக அணியாகும்.
சான்று விளக்கம்:
சினம் தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாது அவனைச் சேர்ந்த சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். தன்னைச் சேர்ந்த வரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம் நம்மை மட்டுமல்லாமல் நமக்குப் பாதுகாப்பாக இருக்க கூடிய இனம் என்னும் வெப்பத்தை அழித்துவிடும்.
அணிப் பொருத்தம்:
இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள வள்ளுவர் சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே, இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது. (இயல் - 3 -திருக்குறள் - சிறுவினா பக் : 78 )
40. இலக்கிய நயம் பாராட்டுக.
‘தமிழே இனிமை'
முன்னுரை:
இப்பாடலைப் பாடியவர் நாமக்கல் கவிஞர் ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் வழிநடைப் பாடலை எழுதிய கவிஞர் எழுதியுள்ள இப்பாடலில் காணப்படும் நயங்களைக் காண்போம்.
மையக்கருத்து :
தான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழியே சிறந்த மொழி என்றுரைக்கின்ற மகாகவி பாரதி நம்முடைய ஆசான்.
சொல்நயம் :
இப்பாடலில் அடைச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்,கவிஞர்,
சான்று:
i) அன்புரையால்
ii) உலுங்க வைத்திவ்வுலகம்
iii) தெற்றென
iv) ஆசான்
பொருள்நயம்:
தமிழின் பெருமையை உணர்ந்தவர் பாரதி. நாமோ தமிழைப் புறக்கணிக்கின்றோம். தமிழின் தனித்தன்மையை உணர்ந்த பாரதி தமிழ்மொழிபோலத் தரணியிலே சிறந்த
மொழி இல்லை என்கிறார். தமிழில் சிறந்த கவிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார். பாரதியின் சிறப்பையும், தமிழின் பெருமையையும் திறம்படக் கவிஞர் எடுத்துக் கூறுகின்றார்.
தொடைநயம்:
பாடலில் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பது தொடையாகும்.
மோனை நயம்:
பாடலின் சீர்களிலோ, அடிகளிலோ முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும். இப்பாடலில் சீர்மோனை பயின்று வந்துள்ளது .
சான்று :
பெற்றெடுத்த - பின்னால் - பிறமொழிக்கு- பிழையை
ஊற்றெடுத்தே- உலுங்க - உலகத்தில் - உண்டோ
கற்றுணந்தே - காண்பாய் - கம்பனொடு - காட்டி
தெற்றெனநம் - திறந்து - தெய்வக்கவி - திண்ணம்.
எதுகை நயம்:
பாடலின் சீர்தோறும் அல்லது அடிதோறும். முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து என்றிவருவது எதுகை எனப்படும்.
இப்பாடலில் சீர்எதுகை மற்றும் அடிஎதுகை பயின்று வந்துள்ளது.
சீர்எதுகை:
தெற்றெனநம் - திறந்து
அடிஎதுகை:
பெற்றெடுத்த
கற்றுணர்ந்த
தெற்றென
சந்தநயம்:
இப்பாடலை ஏற்ற இசைக்கருவியுடன் . இசைத்துப் பாடினால் பாடுவோருக்கும் கேட்பவருக்கும். மிகுந்த கவி இன்பத்தைத் தரும் சந்த நயங்களுடன் கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார். இப்பாடல் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்த வகையைச் சர்ந்தது. இப்பாடல் அகவலோசையில் அமைந்துள்ளது.
அணிநயம்:
1) இப்பாடலில் தமிழ்மொழியைத் தாயாக உருவகம்
செய்துள்ளதால் உருவக அணி இடம்பெற்றுள்ளது.
2) தமிழ் மொழி மற்றும் பாரதியார் பற்றி மிகவும் உயர்வாக
எடுத்துக் கூறுவதால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி
இடம் பெற்றுள்ளது.
சுவைநயம்:
தமிழ்மொழியின் பெருமையையும், பாரதியாரின் பெருமையையும் பற்றி இப்பாடல் உரைப்பதால் இப்பாடலில் பெருமிதச் சுவை அமைந்துள்ளது.
முடிவுரை:
“காலம் கவிஞனைக் கொன்றது; ஆனால் அவன் கவிதை காலத்தை வென்றது” என்ற கூற்றிற்கு ஏற்ப நாமக்கல் கவிஞர் இக்கவிதையில் கவிதைக்குரிய நயங்களை எல்லாம் அமைத்து கவிநயங்களால் தமிழன்னைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
( மாணாக்கரே ! கேள்வியைக் கவனித்து எத்தனை நயங்கள் கேட்கப்பட்டிருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும் எழுதினால் போதுமானதாகும் )
. ( இயல் - 3 -மொழியை ஆள்வோம் - பக் : 70 )
41. வாழ்க்கை நிகழ்வு
அ) யானைக்கும் அடி சறுக்கும்
பழமொழி விளக்கம்
மிகப் பெரிய வலிமை உடையது என்று கருதப்படும் யானையும் சில சந்தர்ப்பங்களில் நிலை தடுமாறி தன் சக்திக்கு உட்பட்ட செயலில் கூட தோல்வியைச் சந்திக்கும்.
வாழ்க்கை நிகழ்வு
குமரன் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்டு அதிக அளவில் காளைகளைப் பிடித்து நிறைய பரிசு பொருட்களைக் கைப்பற்றுவான். தமிழ்நாடு முழுக்க நடைபெறும் புகழ்மிக்க ஜல்லிக்கட்டுகளான அலங்காநல்லூர், பாலமேடு ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவன். மாட்டின் கொம்புகளுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் உருமா பட்டையை அவிழ்ப்பதில் குமரனுக்கு நிகர் குமரனே. ஆனால், நேற்று அவரது கிராமத்தில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டில் ஒரு காளையை கூட அடக்க முடியவில்லை. ஆனைக்கும் அடிச்சறுக்கும் என்பது இந்த ஆண்டின் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் அரங்கேறியது. அதாவது ஒரு காளை கூட குமரனது கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஒரு பரிசு கூட கிடைக்காமல் ஊர் திரும்பினான்.
நீதி
மிகப் பெரிய பலசாலிகளும் ஒரு சில சந்தர்ப்பங்களில் பின்னுக்குத் தள்ளப்படுவர் என்பதை இப்பழமொழி நன்கு விளக்குகின்றது.
. ( இயல் - 4 -மொழியை ஆள்வோம் - பக் : 103 )
அல்லது
ஆ) "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"
பழமொழி விளக்கம்:உடன்வாழ்கின்றவர்களுடனும், சொந்தங்களுடனும் நாம்
எப்போதும் குறைகளை மட்டுமே கண்டுபிடித்து அதனை மட்டுமே சுட்டிக்காட்டி
நாம் நல்லவர்களாக இருப்பது போன்று நடந்து கொண்டோம் என்றால், நமக்கு என்று ஒரு சொந்தமும் இருக்காது.
வாழ்வியல் நிகழ்வு:
என் அம்மாவின் அண்ணன் கோபால் மிகவும் சுறுசுறுப்பானவர். குடும்பங்களில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு எல்லா காரியங்களையும் முன்னின்று நடத்துவார். அவரிடம் இருக்கும் ஓரே தீயகுணம் அவர் செய்வது மட்டுமே சரி என்றும் அடுத்தவர்கள் செய்வது எல்லாம் தவறானது என்றும் எண்ணுவதாகும்.
தன் சுற்றத்தார் எதைச் செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதும் குறை காண்பதுமே அவரது வழக்கம். சுற்றத்தாரிடம் இனிய சொற்களைப் பேசாமல் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருக்கும் இவரது இக்குணத்தால் சுற்றத்தார் அனைவரும் இவருடன் அதிகமாகப் பேசுவது கிடையாது. ஏனென்றால் பேசினால் கூட அதில் குறை கண்டுபிடிக்கும் மனநிலையுடன் அவர் காணப்பட்டார். ஆனால் சுற்றத்தாரின் அத்தனை விசேசங்களுக்கும் வந்து நின்று எல்லா காரியங்களையும் நடத்திக் கொடுப்பார்.
அவருடைய மகனின் திருமண விழாவிற்குச் சொந்தங்களுக்கு அழைப்புக் கொடுத்திருந்தார். திருமணத்திற்கு முன்தினம் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தன் சொந்தங்கள் எல்லோரும் வந்து நின்று சிறப்பாக நடத்தித் தருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் சுற்றத்தாரில் ஒருவர் கூட அந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. என்ன காரணம் என விசாரித்த போது அவர் வீட்டிற்குச் சென்று நாம் எதாவது செய்தால் குறையும், குற்றமும் கண்டுபிடித்துத் திட்டிக் கொண்டே இருப்பார் என்று நினைத்து ஒருவரும் செல்லவில்லை. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லாமல் தனியாக எல்லா வேலைகளையும் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார் கோபால்.
நீதி : சொந்தங்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துவது நல்லது. அதற்காக எப்போதும் குறை கூறிக் கொண்டிருந்தால் ஒரு சொந்தமும் நம்முடன் இருக்காது. (இயல் - 4- மொழியை ஆள்வோம் - வினா பக் : 103)
42. அ ) வெண்பா இலக்கணம்
ஈற்று அடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரவேண்டும். ஈரசைச் சீர்களான மாச்சீர், விளச்சீர் வரவேண்டும் . மூவசைச் சீர்களுள் காய்ச்சீர் மட்டுமே வரும். இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை மட்டுமே வர வேண்டும். இறுதி அடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாடுகள் ஒன்றால் முடிய வேண்டும் .செப்பலோசை பெற்று வர வேண்டும்.
(இயல் - 4-பா இயற்ற பழகலாம் - பக்கம் - 97 )
( அல்லது )
ஆ) வாகைத் திணை
திணை விளக்கம்
வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகை பூவை சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை ஆகும்.
சான்று
“வையகம் பனிப்ப வலனேர்பு .............. “எனத் தொடங்கும் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை பாடல். திணைப் பொருத்தம்
வாடைக் காலத்தில் மேகம் வலப்பக்கமாகச் சூழ்ந்து இந்நில உலகம் குளிரும்படி மழையாக பெய்தது. வாடைக்காற்றில் குளிர்ச்சியினால் ஆயர்கள் சேர்ந்து உடலுக்குச் சூடேற்ற கொள்ளி நெருப்பின் மேல் கைகளை நீட்டினார். அத்தகைய குளிர்ச்சியான நேரத்தில் மன்னனும் கூதிர் பாசறையில் அமர்ந்து தன் வெற்றியைக் கொண்டாடினான் என்பதால் இப்பாடல் வாகைத் திணையைச் சார்ந்ததாகும். (இயல் - 2- நெடுநல் வாடை - பக்கம் - 30 )
43. தமிழாக்கம்
பெரியார், பெருமைக்குரிய சமூகப் புரட்சியை உருவாக்கியவர் மட்டும் அல்லர் ; ஒருவகையில் அதற்கும் மேலான சீர்திருத்தவாதி, பின்தள்ளப்பட்ட மக்களின் உயர்வுக்கு நெறி காட்டிய வீரராக அறியப்படுகிறார் .இவ்வகையிலும் அவருக்கு இணை அவரே எனக் கூறுமாறு திகழ்கிறார். அவர் எந்தப் பிரச்சினையைத் தொட்டாலும் அதை முடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை; பிரச்சனையின் அடிமட்டத்துள் துருவி துழாவி அதன் விளைவுகள் குறித்து ஆராய்ந்து தெளிவுபெற்றபின், அதற்கு ஒரு நிரந்தர முடிவு கட்டுகிறவரை ஓய்ந்தது கிடையாது. சாதியத் தொடர்பான ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள் நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தது. பெரியார் தலையெடுத்து அதற்கு ஒரு தீர்வு கண்ட பிறகே, சமூகத்தின் நிரந்தர சாபக்கேடான சாதி களையப்பட்டது. (இயல் - 5- மொழியை ஆள்வோம் - பக்கம் - 126 )
43. காது கேளாதவர்களுக்கான மாற்று வினா
வினாக்களுக்கு விடை தருக
1. நாரசம் என்றால் என்ன ?
இரட்டைத் துளை உள்ள ஏடுகளில் ஒரு துளையில் செம்புக் கம்பி அல்லது மூங்கில் குச்சியைச் செருகி கட்டுவார்கள். அதற்கு நாராசம் என்று பெயர்.
2. கிளிமூக்கு என்பது யாது ?
சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தட்டையாகப் பனை ஓலையை ஈர்க்கோடு கிளிமூக்கு போலக் கத்தரித்து அமைப்பார்கள் அதற்கு கிளிமூக்கு என்று பெயர்.
3. எழுத்தாணியின் வேறு பெயர் யாது ?
எழுத்தாணியின் வேறு பெயர் ஊசி.
4. எழுத்தாணியின் வகைகள் யாவை ?
மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி என எழுத்தாணி மூன்று வகைப்படும்.
(இயல் - 4- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் - பக்கம் - 83 )
பகுதி – 4
அனைத்து வினாக்களுக்கும் விடைதருக 3 x 6 = 18
44. அ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள்
கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளில்
1. ஒலிக்கோலங்கள்
2. சொற்புலம்
3. தொடரியல் போக்குகள்
ஆகியவை மிக முக்கியமானவையாகும்.
ஒலிக்கோலம்:
இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்
ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப்பின்னல்) என்பர்
வன்மை உணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.
சான்று: கடந்தடு தானை…… (புறம்:110)
இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்
சான்று: படாஅம் ஈத்த…. (புறம்:145)
சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்பவரும் தன்மையும் உண்டு.
சான்று: புணரின் புணராது…..(நற்:16)
சொல்விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் இடம்பெறுவது உண்டு.
சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை….(புறம்:290)
இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க பண்புகளாகும்.
சொற்புலம்:
உணர்வும், பொருளும், கலையும், பண்பாடும், வரலாறும், அரசியலும் சொற்களில் பொதிந்து கிடக்கின்றன. ஒரு பொருள் குறித்து வரும் பல சொற்களும், பல பொருள் குறித்து வரும் ஒரு சொல்லும் சொல் வளத்திற்குச் சான்று.
பல்வேறு துறைகள், சூழல்கள், புனைவுகளுக்கும் உரிய வகையில் உணர்வும் தெளிவும் கொண்டதாகச் செழிப்பானதொரு தளத்தைச் சொல் கொண்டிருக்கிறது. தனிச்சொல்லாகவும், தொகை மொழியாகவும் சொற்கள் இயங்குகின்றன.
தொடரியல் போக்குகள்:
பாடலின் தளத்தை முழுமையடைய செய்வது தொடரியல் போக்காகும். சொல்பவனுடைய மொழித்திறனை, கேட்பவன் அல்லது வாசிப்பவன் முழுமையாகப் பெற வேண்டும்.
சொல்லப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள்
i) நேர் நடந்தும்
ii) ஏறியிறங்கியும்
III) திரும்பியும் சுழன்றும் - இயங்கும்
இவையே கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் ஆகும்.
( இயல் - 1 - தமிழ்மொழியின் நடைஅழகியல் ,வினா பக் : 19 )
( அல்லது )
ஆ) மழைக்கால வருணனை
புதுமழை
மேகமானது வாடைக் காலத்தில் தான் தங்கி இருந்த பெரிய மலையை வலப்பக்கமாகச் சுற்றிக்கொண்டு விண்ணில் எழுந்தது. இதனால் உலகம் குளிரும்படியான புதிய மழையைப் பொழிந்தது.
கோவலர்களின் வாழ்வு மாற்றம்
புதுமழையானது தொடர்ந்து வாடைக் காற்றுடன் பெய்ததால் கோவலர்கள் தாழ்வான பகுதியில் தாங்கள் மேய விட்டிருந்த எருமை, பசு, ஆடு ஆகிய ஆநிரைகளை மேடான நிலங்களுக்கு அழைத்துச் செல்ல இடம் தேடினர். இந்தச் செயலை அவர்கள் விரும்பவே இல்லை. தாங்கள் பழகிய நிலப்பகுதியை விட்டுப் புதுஇடத்தை அடைந்ததால் வருந்தினர்.
ஆநிறைகளை காப்பதற்காகவும் அவைகளை மேய விடுவதற்காகவும் பழகிய நிலப்பகுதியை விட்டுப் புலம்பெயர்ந்தனர்.
வாடைக்கால வாழ்வு
வாடைக் காற்றுடன் பெய்த பெருமழையால் ஆயர்கள் சூடியிருந்த காந்தள் மலர் மாலைகள் கசங்கின. மலையே வாடைக் காற்றால் குளிரில் நடுங்கியது. குளிர் மிகுந்ததாலும் நீர் துளிகள் மேலே படுவதாலும் குளிரில் வாடிய கோவலர்கள் பலர் ஒன்று சேர்ந்து கொள்ளி நெருப்புக் கொண்டு கைகளுக்குக் சூடேற்றி உடலைச் சூடாக்கினர்.
கோவலர்களின் பற்கள் குளிரால் நடுங்கினர். விலங்குகள் மேய்ச்சலை மறந்தன குரங்குகள் நடுங்கி கொண்டு வந்தன. பறவைகள் தங்கி இருந்த மரங்களில் இருந்து குளிரால் நிலத்தில் விழுந்தன. பசுக்களோ தம் கன்றுகளுக்குப் பாலூட்ட மறுத்தன. இவ்வகையில் நக்கீரர் தமது நெடுநல்வாடையில் மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
( இயல் - 2 - பெருமழைக்காலம் , நெடுவினா பக்கம் : 43 )
45. அ) ஒவ்வொரு நகரகத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு.
தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பு வடிவழகும் மிக்க நகரங்களில் முதன்மையானது மதுரை மாநகரமாகும். இந்த நகரின் சிறப்புப் பற்றி, கட்டுரையில் காண்போம்.
மதுரை நகரில் தொன்மை
வைகை நதியின் கரையில் அமைந்திருக்கும் நகரமாகிய மதுரை, கடைச்சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. தென்னிந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம், மதுரை மாநகருக்கு உண்டு. பிற்காலப் பாண்டியர், நாயக்கர், ஆங்கிலேயர் ஆண்ட காலத்துக்கு முன்னரே, சுமார் 2500 ஆண்டுகளுக்குமுன் இலங்கை மன்னன் விஜயன், தன் பட்டத்து அரிசியான மதுராபுரி இளவரசியை மணந்ததாக வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது.
நகரின் அமைப்பு
மதுரை நகரின் நடு நாயகமாக, மீனாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. நான்கு புறமும் ஆடி வீதிகள் உள்ளன. அதை அடுத்துத் சித்திரை, ஆவணி மூல வீதிகளும் உள்ளன. மாதங்களின் பெயர்களைக் கொண்ட வீதிகள் விரிவடைந்து செல்கின்றன. இந்நகர், பல்வேறு அடுக்குகளைக் கொண்ட நகரமாகும். நான்கு பக்கங்களும் ஆயுதக்கிடங்கும் , கோட்டை அகழியும் உள்ளன. மதுரை மாநகர், சிறப்பான நகர அமைப்போடு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சங்ககால மதுரை
தமிழ் இலக்கியங்களில் பொற்காலம், மதுரை சங்கங்களின் இருப்பிடமாகும். சிலப்பதிகாரம், மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களில் ,மதுரையின் சிறப்புகளைக் காணலாம். தமிழ்மொழி, பல்வேறு சிறப்புகளை மதுரை மாநகரால் பெற்றது.
பண்பாடும் பழக்கவழக்கங்களும்
மதுரை, பண்பாட்டுச் சிறப்பு வாய்ந்த நகரமாகும். நட்பு , விருந்து உபசரிப்பு என்னும் பாரம்பரிய சிறப்புகளைப் பெற்ற நகரமாகும். தென்னிந்திய உணவு வகைகளுக்கும் மல்லிகைப் பூவுக்கும் சிறப்பு வாய்ந்தது மதுரை. இங்கு விவசாயம் நெசவு போன்ற பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்நகர், ‘ தூங்கா நகரம்’ என்னும் சிறப்பினையும் உடையது. இங்குச் சமயம் தொடர்பான விழாக்கள், ஜல்லிக்கட்டு போன்றவை சிறப்பாக நடைபெறும். ( இயல் - 5 - மதராசப்பட்டினம் , நெடுவினா பக்கம் : 125 )
( அல்லது )
ஆ ) செய்ந்நன்றியறிதலே அறம்
ஈடில்லா உதவி:
ஒருவன் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையிலும் அவர் நமக்குச் சரியான நேரத்தில் ஏதேனும் உதவி செய்தால், அந்த உதவிக்குக் கைம்மாறாக இந்த நிலவுலகத்தையும், வானுலகத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது.
உலகினும் பெரிய உதவி:
ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும்.
பயன் எதிர்பாராத உதவி:
ஒருவர் எந்தப் பயனையும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்காமல் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.
உதவியின் பயன் பனையளவு:
ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அந்த உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவு உதவியையும் பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
அறத்தை அறிக:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஆனால் ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்போழுதே மறந்துவிட வேண்டும்.
தப்பிக்க கூடுதல் வழி:
ஒருவர் எந்த அறத்தை அழித்தாலும் அதிலிருந்து தப்பிப் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து தப்பிப்பிழைக்கும் வழியே கிடையாது.
( இயல் - 3 - வாழ்வியல் - திருக்குறள்,வினா பக் : 78 )
46. அ) சாலை விபத்தில்லா தமிழ்நாடு
சாலை விபத்துகளில் முதன்மை மாநிலம் :
உலகிலேயே அதிகச் சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவில் ஏற்படும் மொத்தச் சாலை விபத்துகளில் 15 விழுக்காடு விபத்துகள், தமிழ்நாட்டில் நடப்பது என்பது வேதனைக்குரியது.
சாலை விபத்துகளுக்கான காரணங்கள் :
விபத்துகள், எதிர்பாராமல் ஏற்படுகின்றன. எனினும், மனிதத் தவறுகளே மிகுதியான விபத்துகளுக்குக் காரணங்களாக அமைகின்றன. ஒவ்வொருவரும் தாங்கள் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளுதல், விதிகளைப் பின்பற்றுதலின் வாயிலாகமட்டுமே, சாலை விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
இருசக்கர ஊர்தி விபத்துகள் :
தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துகளில் 35 விழுக்காடு, இருசக்கர ஊர்திகளால் ஏற்படும் விபத்துகளாக உள்ளன. எனவே, இருசக்கர ஊர்தி ஓட்டுநர்கள், அதற்கான சாலை விதிமுறைகளைக் கட்டாயம் கவனத்தில் கொள்ளவேண்டும். பதினெட்டு வயது நிறைந்தவர், முறையான பயிற்சிமூலம் ஓட்டுநர் உரிமம் பெறுதல் அவசியம்.
பள்ளி மாணவர்கள், இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இருசக்கர வாகன ஒட்டிகள், தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். கைப்பேசியில் பேசிக்கொண்டே ஒட்டுவது கூடாது. காதணி கேட்பிகள் பொருத்திக்கொண்டு, ஊர்தியினை ஒட்டக்கூடாது.
விழிப்புணர்வு இல்லாததும் விபத்துகளுக்குக் காரணமாகும்
சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு இல்லாததும், விபத்துகள் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன.ஓட்டுநரின் கவனக் குறைவு, போதிய பயிற்சியின்மை, மிகுதியான ஆட்களையோ சரக்குகளையோ ஏற்றிச் செல்வது, தொடர்வண்டி இருப்புப் பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது, ஒட்டுநர்கள், இத்தகைய குறைகளைத் தவிப்பார்களேயானால், விபத்துகள் நிகழாமல் பாதுகாக்கலாம்.
பள்ளி மாணவர்களிடம் காணப்படும் குறைபாடு :
பள்ளி மாணவர்களிடையே சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலை விதிமுறை குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலையில், மாணவர்கள் சிலர் சாலைகளில் விளையாடுவது, சாலைப் போக்குவரத்து ஊர்திகளைக் கவனிக்காமல் திடீரென்று கடப்பது, நடைமேடையில் செல்லாமல் சாலையின் நடுவே நடந்து செல்வது, வேகமாகச் செல்லும் வாகனத்தின் பின்புறத்தைப் பிடித்துக்கொண்டு, மிதிவண்டியில் பயணிப்பது, ஓடும் பேருந்தில் ஏறுவது, இறங்குவது, பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலை எதிர்வரும் காலங்களில் முற்றிலும் மாறுமானால், விபத்தில்லாத் தமிழ்நாட்டைக் காணலாம்.
( இயல் - 4 - பாதுகாப்பாய் ஒரு பயணம் - நெடுவினா பக் : 101 )
ஆ) மருதனின் பண்பு நலம்
மூழ்கும் பயிரும் மருதனின் பதற்றமும் :
முற்றிய நாற்றை நட்டு அதிக உரம் போட்டு, எப்படியாவது 'சம்பா' அறுவடை செய்து விடலாம் என எண்ணியிருந்தனர் காவிரியின் கடைமடைக்காரர்கள். அதிக மழையின் காரணமாகப் பயிர்கள் எல்லாம் தண்ணீரில் மிதக்கும் நிலைக்கு வந்தன. வளவனாற்றின் வடகரையில் நின்று வடக்கே பார்த்த மருதனுக்குப் பதற்றம் ஏற்பட்டது. காரணம், பெய்த மழை போதாது என்று, வானிலை அறிக்கையாக வானொலி, பலத்த மழை பெய்யும் என்று அறிவித்தது.
வழி பிறந்தது; விழி மலர்ந்தது :
மறுபடியும் பெருமழையா? என ஆயிரம் சிந்தனைகளோடு கரைவழியே நடந்தான் மருதன். உபரித் தண்ணீர் வடிய வேண்டிய வடிகால் மதகை எட்டிப் பார்த்தான். ஊரைச் சுற்றி வளைந்து ஓடிவரும் மூன்று மைல் நீள வடிவாய்க்கால் முழுவதும் காட்டாமணக்குச் செடிகள் வளர்ந்து, வாய்க்காலை ஆக்கிரமிப்புச் செய்திருந்தன. இந்தப் பேய்ச்செடிகளைப் பிடுங்கி எறிந்தாலே, உபரி நீர் வடியத் தொடங்கிவிடும். வயல்களில் தேங்கியுள்ள நீரும் வடிந்தோடும், கிராமமும் தப்பித்துக் கொள்ளும் எனச் சிந்தித்து, வழி கிடைத்துவிட்டது என எண்ணி, மகிழ்ச்சி அடைந்தான்.
உதவி நாடலும் உதவா மக்களும் :
வடிவாய்க்கால் வளைவில் வலை போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான் மாரிமுத்து. அவனிடம் காட்டாமணக்குச் செடிகளை நீக்கிப் பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்றும், ஆளுக்கு ஒரு செடியைப் பிடுங்கும் வழியையும் சொன்னான் மருதன். மீன் பிடிப்பதிலே கண்ணாயிருந்தான் மாரிமுத்து. பொறுமையிழந்த மருதன், ஊரில் வசதி படைத்த கிழவரிடம் எடுத்துச் சொல்லி, வீட்டுக்கு ஒருவராக வந்து, செடிகளை அகற்ற வேண்டுகோள் வைக்க வேண்டும் என்றான். மகளின் ஊருக்கு அவரும் செல்வதாகக் கூறினார். அந்த ஊரின் முதல் பட்டதாரி பிரேம்குமார். அவனும், பல வேலைகள் இருக்கின்றன எனச் சொல்லித் தப்பித்தான். மருதன் சோர்ந்து வீடு சேர்ந்தான்.
தன் கையே தனக்குதவி :
மனமும் உடம்பும் சோர்ந்து வீடு திரும்பிய மருதனை, அவன் மனைவி அல்லி, பதட்டமாய்ப்
பார்த்தாள். குடிக்கச் சுடுகஞ்சி கொடுத்தாள். "எந்த நிலம் எப்படிப்போனா நமக்கென்ன...” என அக்கறையின்றிப் பேசினாள் அல்லி. அவசரமாய் உணவைச் சாப்பிட்டான்; ஊமையாய்ப் படுத்துவிட்டான். இரவு முழுவதும் அவனால் தூங்க முடியவில்லை. அதிகாலையில் எழுந்து சென்று, வடிவாய்க்காலில் குளிர்ந்த இடுப்பளவு தண்ணீரில் தன்னந்தனியே நின்றபடி, காட்டாமணக்குச் செடிகளை அறுத்து எறிந்து கொண்டிருந்தான்.
ஊரைக் கூட்டிய உழைப்பாளி மருதன் :
தனியே காட்டாமணக்குச் செடிகளை அகற்றிக் கொண்டிருந்த மருதனோடு, மனைவி அல்லியும் சேர்ந்துகொண்டாள். இருவரின் செயலைப் பார்த்த மாரிமுத்துவும், மீன் பிடிப்பதை விட்டுவிட்டுக் கை கொடுக்க முன்வந்தான். தன் மகள் ஊருக்குப் புறப்பட்டு வில்வண்டியில் போய்க் கொண்டிருந்த கிழவர் காளியப்பனின் பார்வை, வடிவாய்க்கால் பக்கம் திரும்பியது. வண்டியில் இருந்து இறங்கி, இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, வாய்க்காலில் இறங்கினார். செய்தி ஊருக்குப் பரவி, ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.
( இயல் - 2 - முதல் கல் - நெடுவினா பக் : 43 )
பகுதி – 5
47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடைதருக 4 + 2 = 6
அ) “ குகனோடும் ..... “ - எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்
குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு; பின் குன்று சூழ்வான்
மக னொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம் ;
புகல் அருங் கானம் தந்து,
புதல்வரால் பொழிந்தான் நுந்தை
( இயல் - 3 - கம்பராமாயணம் - மனப்பாடப் பாடல் பக் : 56
ஆ) ‘மிகும்’ ’ என முடியும் திருக்குறள்:
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்”
( இயல் - 3 - வாழ்வியல் - திருக்குறள் - ஊழ் , பக் : 75 )
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேனிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 📞9843448095
12 ஆம் வகுப்பு |தமிழ் | காலாண்டுத் தேர்வு வினாத்தாள் 2023 | செப்டம்பர் 2023 | QUESTION PAPER | DOWNLOAD FREE | CLICK HERE
12 ஆம் வகுப்பு |தமிழ் | காலாண்டுத் தேர்வு வினாத்தாள் 2023 | செப்டம்பர் 2023 | FULL ANSWER KEY | DOWNLOAD FREE | CLICK HERE
11th Standard| English| QUARTERLY EXAM QUESTION PAPER |SEPTEMBER 2023| ORIGINAL QUESTION PAPER | FREE DOWNLOAD | CLICK HERE
தமிழ் |11 ஆம் வகுப்பு|பாடக் குறிப்பேடு|இயல் 5| உரைநடை|செய்யுள்| ஆனந்தரங்கர் நாட்குறிப்பு| சீறாப்புராணம்|NOTES OF LESSON |CLICK HERE
தமிழ் |11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 4| துணைப்பாடம்|இனிக்கும் இலக்கணம் DOWNLOAD HERE
இயல் 4| பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்| |Power Point Presentation |PPT| DOWNLOAD HERE
முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 2 -👇👇👇👇👇DOWNLOAD HERE
12 ஆம் வகுப்பு | தமிழ் | இயல் 2 | செயல் திட்டம் | மாணவர் செயல்பாடு | வெள்ளப் பெருக்கின் தாக்கங்கள்| திரட்டு வைப்பேடு | STUDENTS ACTIVITITY | PROJECT | ALBUM | DOWNLOAD HERE
12th TAMIL | இயல் 2| பெருமழைக்காலம் | பிறகொருநாள் கோடை | நெடுநல் வாடை | பாடக்குறிப்பேடு | NOTES OF LESSON | DOWNLOAD HERE
இயல் 1,2,3 | இலக்கணம் |மொழிப்பயிற்சி | 2 மதிப்பெண் வினா விடைகள் | DOWNLOAD HERE
முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 1 -👇👇👇👇👇DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 1 | DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 2 | DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 3 | DOWNLOAD HERE
12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL