12th Standard- +2Tamil - Tamil -Study Material - HAFLF YEARLY EXAM QUESTION PAPER 2023 -DECEMBER 2023- ORIGINAL QUESTION PAPER - ANSWER KEY - 12 ஆம் வகுப்பு -தமிழ் - அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் 2023 - டிசம்பர் 2023-விடைக் குறிப்பு
கன்னியாகுமரி மாவட்டம்
அரையாண்டுத் தேர்வு - டிசம்பர் 2023
மாதிரி வினாத்தாள்- 1
நேரம்: 3:மணி வகுப்பு-1 2 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
விடைகள்
பகுதி- I
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1. இ ) காவிய தர்ஷம்
2. ஈ ) கன்னிமாரா நூலகம்
3. ஈ ) சொல்வது - சொல்லியபடி செய்வது
4. ஈ ) செப்பல்
5. ஆ ) மனைவியின்
6. இ ) மழைத்துளிகள்
7. இ ) ஆன்மீகம்
8. அ ) இராமன்
9. அ ) சுரதா
10. இ ) 9
11. இ ) 2 4 1 3
12. ஆ ) பாரதியார்
13. இ ) எட்டு
14. ஆ ) காண் ( கண் ) + ட் + ஆன்
பகுதி - II
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக 3 x 2 = 6
15. எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும் : ( PTA - 2 )
கலைத்தொழிலில் வல்ல புலவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும். ( இயல் - 4 - புறநானுறு - வினா பக் : 101 )
16. புதுகவிதை என்பது : ( PTA - 2 )
புதுக்கவிதை , புதிய வடிவம் கொண்ட கவிதை என்ற பொருள் மட்டும் கொண்டதல்ல. புதிய சிந்தனைகளையும் புதிய கருத்துகளையும் புதுமையாகச் சொல்வதையும் குறிப்பது புதுக்கவிதை ஆகும் ( இயல்- 6-கவிதைகள் , நுழையும்முன் பக்கம் : 136 )
17. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்: ( PTA - 2 )
குடிமக்கள் காப்பியம் , மூவேந்தர் காப்பியம் , புரட்சிக் காப்பியம், முத்தமிழ் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், புதுமைக்காப்பியம் , ஒற்றுமை காப்பியம், வரலாற்றுக் காப்பியம்.
( இயல் - 6 - சிலப்பதிகாரம் , நூல்வெளி பக் : 140 )
18. உப்பளம் : ( PTA -2 )
கடல்நீரைப் பாத்திகளில் தேக்கி வெயிலில் ஆவியாக்கி உப்புப் படிவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடத்தை உப்பளம் என்பர்.
(இயல் - 5 - அகநானூறு ,தெரிந்து தெளிவோம் , பக் : 117 )
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
19. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் : ( PTA - 6 )
‘காலின் மெக்கன்சி’ யின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869 இல் உருவாக்கப்பட்டது கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம். இந்நூலகத்தில் அரிய ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகள் உள்ளன.
( இயல் - 5 - மதராசப்பட்டினம் ,வினா பக் : 125 )
20. புக்கில்: ( PTA - 6 , MARCH - 2020 )
புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கும்.
தன்மனை:
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் 'தன்மனை' என அழைக்கப்பட்டது.
( இயல் - 3 -தமிழர் குடும்ப முறை, வினா பக் : 68 )
21. பருவத்தே பயிர்செய் - நேர மேலாண்மையோடு பொருத்து : ( PTA - 6 )
‘பருவத்தே பயிர்செய்’ என்பது காலத்தின் அருமையை உணர்ந்து பொறுப்புடன் நிருவாக நெறியை இணைத்தால் வேளாண்மை செழிக்கும் என்பதை உணர்த்தும் தொடராகும். அதாவது சரியான பயிரைத் தேர்ந்தெடுத்து உரிய காலத்தில் விதைத்தால் விதை முளைத்து நல்ல பலனைத் தரும்.
( இயல் - 7 - இலக்கியத்தில் மேலாண்மை , வினா பக் : 183 )
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக
அ ) ஈந்த - ஈ + த் ( ந் ) + த் + அ
ஈ - பகுதி
த் - சந்தி , ‘ த்’ , ‘ந்’ ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
( இயல் - 8 - சிறுபாணாற்றுப்படை , பக் : 204 )
ஆ ) தாங்கிய - தாங்கு + இ (ன்) + ய் + அ
தாங்கு - பகுதி
இ (ன் ) - இறந்தகால இடைநிலை
ய் - உடம்படுமெய் சந்தி
அ - பெயரெச்ச விகுதி
( இயல் - 8 - சிறுபாணாற்றுப்படை , பக் : 204 )
23. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக
அ) இனநிரை - இனம் + நிரை
விதி : மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும். - இனநிரை
( இயல் - 2 - நெடுநல்வாடை , பக் : 31 )
ஆ ) புதுப்பெயல் - புதுமை + பெயல்
விதி : ஈறுபோதல் - புது + பெயல்
விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் - புதுப்பெயல்
( இயல் - 2 - நெடுநல்வாடை , பக் : 31 )
24. பொருளுணர்ந்து ஒரே தொடரில் அமைத்து எழுத்துக.
அலை , அழை ( PTA - 6 )
பாம்பைப் பிடிக்க அலைந்து திரிந்தவன் பாம்பாட்டியை அழைத்து வந்தான் .
( இயல் - 2 - மொழிப்பயிற்சி , பக் : 44 )
25. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
அ ) வனவிலங்குக் காப்பகத்தில் சிங்கக் குருளையும் யானைக் கன்றையும் கண்டேன் . PTA - 4 , MARCH - 2020
( இயல் - 7 - மொழிப்பயிற்சி , பக் : 185 )
ஆ ) பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர் . PTA - 4 , MARCH - 2020 , MAY - 2022
( இயல் - 7 - மொழிப்பயிற்சி , பக் : 185 )
27 . தொடர்நிலை : ( PTA - 1 )
தொடர்நிலை என்பது காப்பியத்தைக் குறிக்கும் . தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையைக் குறிக்கும்.
( இயல் - 6 - காப்பிய இலக்கணம் , பக் : 150 )
28. எழுதும்போது ஏற்படும் பிழைகள்: ( PTA - 1 )
எழுதும்போது ஏற்படும் பிழைகளை எழுத்துப்பிழை, சொற்பொருட் பிழை , சொற்றொடர்ப்பிழை , பொதுவான பிழைகள் சில என வகைப்படுத்தலாம்.
( இயல் - 1 - தமிழாய் எழுதுவோம் , பக் : 15 )
29. ஏற்ற இடங்களில் நிறுத்தற்குறி இடுக
இளங்கோஅடிகள் சாத்தனாரிடம், “ முன் செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே ! அவர்களுடைய முந்தைய வினை யாது ? அதன் விளைவு என்ன ? நிகழ்ந்த காலம் யாது ? அதை நீங்கள் அறிந்தால் கூறுக ! “ எனக் கேட்டார்.
( இயல் - 7 - மொழிப் பயிற்சி , பக் : 185 )
30. அடைத்த
வேர்ச்சொல் - அடை
வினைமுற்று - அடைத்தான் / அடைத்தாள் / அடைத்தார்
வினையாலணையும் பெயர் - அடைத்தவன் / அடைத்தவள் / அடைத்தவர்
பகுதி –III
பிரிவு-1
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
31. “ பாண்டியனின் சங்கத்தில் கொலுவிருந்தாய் “ :
தமிழானது சங்ககாலத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாகப் பாண்டியர்கள் தாங்கள் ஆண்டப் பகுதியில் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தார்கள் . பாண்டிய மன்னர்கள் வளர்க்க தமிழ் வளர்ந்தது. சங்கம் வைத்துத் தமிழை வளர்த்ததால் தமிழ்மொழியில் பல இலக்கண, இலக்கிய நூல்கள் உருவாகின. பாண்டியனுடைய சங்கத்தில் தன்னிகரற்ற விழங்குகின்ற தமிழ்மொழி அரசாட்சி செய்கின்ற நிலையில் இருந்தது . இதனை உணர்த்தவே சிற்பி பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய் என்று கூறுகிறார்.
( இயல் - 1 - இளந்தமிழே ! , பக் : 2 )
32. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் வேண்டும் உறவு : ( AUG - 2022 , MARCH - 2023
"ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.
* உள்ளத்தில் ஒன்றை வைத்துப் புறத்தில் ஒன்றைப் பேசும் வஞ்சகர்தம் உறவு என்னைப் பற்றாது காக்க வேண்டும்" எனக் கந்தவேளிடம் இராமலிங்க அடிகள் வேண்டுகிறார்.
( இயல் - 5 - தெய்வமணிமாலை , பக் : 125 )
33. வாடைக்காலத்தில் கோவலர் நிலை : ( SEPTEMBER - 2020 )
* வாடைக் காலத்தில் பெய்த பெருமழையால் வெள்ளம் பெருகியது. தாழ்வான பகுதிகளில் வாழ்ந்த கோவலர், பெருகிய வெள்ளத்தை வெறுத்தனர். தம் நிரைகளை மேடான நிலங்களில் மேயவிட்டனர். அவர்கள் குடியிருந்த காந்தள்மலர் மாலைகள் கசங்கின. * மலையையே நடுங்கச் செய்வதுபோன்ற குளிரில் பாதுகாப்பைத் தேடினர். * ஆயர் பலர் சேர்ந்து, கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். எனினும், அவர்களின் பற்கள் வாடைக் குளிரில் நடுங்கின.
( இயல் - 2 - நெடுநல்வாடை ,வினா பக் : 42 )
34. பிரிவு கண்டு வருந்திய குகனுக்கு இராமன் கூறியது :
படகின் மூலம் கங்கையைக் கடந்த இராமன் காட்டிற்குச் சென்றால் துன்புறுவான் என்று வருந்தி நின்றான் குகன் . அவனது வருத்தத்தை உணர்ந்த இராமன், “துன்பம் என்ற ஒன்று இருந்தால்தான் இன்பம் என்பது புலப்படும். துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு என்பதை மறவாதே நாம் இப்போது பிரிகிறோம் என்று எண்ணி வருந்த வேண்டாம்.
இதுவரை நாங்கள் நான்குபேர்தான் உடன்பிறந்தவர்கள் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நான்கு பேரோடு நின்றுவிடவில்லை. இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவராய் ஆகின்றோம். நம் உறவு நீடிக்கும்” என்று கூறினான்.
( இயல் - 3 -கம்பராமாயணம் , பக் : 54 )
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
35. ஒலிக்கோலம் : ( PTA - 2 , SEPTEMBER 2021 )
இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்
ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப்பின்னல்) என்பர்
வன்மை உணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.
சான்று: கடந்தடு தானை…… (புறம்:110)
இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்
சான்று: படாஅம் ஈத்த…. (புறம்:145)
சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்பவரும் தன்மையும் உண்டு.
சான்று: புணரின் புணராது…..(நற்:16)
சொல்விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் இடம்பெறுவது உண்டு.
சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை….(புறம்:290)
இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க பண்புகளாகும்.
( இயல் - 1 -தமிழ்மொழியின் நடைஅழகியல் , வினா பக் : 19 )
36. நீங்கள் ஆசிரியரானால்: ( AUGUST - 2022 , MARCH - 2023 )
மாணாக்கர்களில் எல்லோரும் ஒரே கற்றல் அடைவைப் பெறும் மாணவர்கள்
என்ற கருத்தியல் ரீதியான என் எண்ணத்தை முதலில் மாற்றுவேன்.
மாணாக்கர்களில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிவு, திறன்கள், மனப்பாங்கு, பண்புகள் இருக்கப்போவதில்லை. மாணவர்களை ஒப்பிட்டுக் கூறமாட்டேன்.
மாணவர்களை இனம் கண்டறிந்து அம்மாணவனின் பின்னடைவிற்கான காரணங்களை ஆராய்ந்து அவனைத் தேற்றிவிடுவேன்.
மாணாக்கர்கள் நல்ல நிலையடைய சிறந்த வழிகாட்டியாக இருப்பேன்.
மாணாக்கர்களிடம் தகாத வார்த்தைகள் மற்றும் தேவையற்ற வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் . என் வகுப்பு மாணாக்கர்களை மாணவர்களுக்குரிய கண்ணியத்துடன் நடத்துவேன்.
மாணாக்கர்களின் குடும்பச் சூழல்களை அறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறும் ஆசானாய் இருப்பேன். மாணாக்கர்களுக்கு முரண்பாடாகவோ, எதிர்த்து நின்று செயல்படவோ, அவர்களை அடித்துத் துன்புறுத்தவோ, அவர்கள் மனம் வேதனை அடையும் செயல்களில் ஒரு போதும் ஈடுபட விரும்பமாட்டேன்.
( இயல் - 4 - பண்டைக் காலத்துப் பள்ளிக்கூடங்கள் , வினா பக் : 101 )
37. தாய்வழிக் குடும்பம் : ( MARCH - 2023 )
சங்க காலத்தில் கண சமூகத்திற்கும் தாயே தலைமையேற்று இருந்தாள். பதிற்றுப்பத்து கூறும் சேர நாட்டு ‘மருமக்கள் தாயமுறை’ இதற்குச் சிறந்த சான்றாகும். மேலும்,
“செம்முது பெண்டின் காதலாஞ்சிறா அன்”(புறம் : 276)
“ முளரிமருங்கின் முதியோள் சிறுவன்”( புறம் : 278)
என்னும் பாடல் வரிகள் மூலம் ‘இவளது மகன்’ என்றே குழந்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதன்மூலம் சங்க காலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தை அறிந்து கொள்ள முடியும்.
சங்ககாலத்தில் திருமணத்திற்குப் பின் தன் இல்லத்தில் தொடர்ந்து வாழும் ‘தாயமுறை’ வழக்கத்தில் இருந்துள்ளது. திருமணத்திற்குப் பின்பு மனைவியின் இல்லத்திற்குச் சென்று கணவன் வாழ்வது நடைமுறையாக இருந்தது. பெண் குழந்தையின் பேறு முதன்மையாக விரும்பப்பட்டது. தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்து வளங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன. தாய்வழி குடும்பங்களில் பெண்களே குல தொடர்ச்சிக்கு உரியவராக இருந்தனர்.
( இயல் - 3 - தமிழர் குடும்ப முறை , புத்தக உள் வினா- விடை பக் : 49 )
38. மயிலை சீனி வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் :
( PTA-1, MARCH -2020 , MARCH - 2023 )
மயிலை சீனி வேங்கடசாமி 16.12.1900-ஆம் ஆண்டு சென்னை - மயிலாப்பூரில் பிறந்தவர்.
இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையி தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி வேங்கடசாமி.
தந்தையார் சீனிவாசன் ஒரு சித்த மருத்துவர்; தமையனார் கோவிந்தராசன் ஒரு தமிழாசிரியர், இதுவே இவர் வரலாற்று ஆய்வாளராக மிக முக்கியக் காரணம்.
விபுலானந்த அடிகள், கா.சுப்பிரமணியர், திரு.வி.க. தெ.பொ.மீ. ச.த.சற்குணர் ஆகிய அறிஞர் பெருமக்களோடு தொடர்பு கொண்டிருந்தவர்.
கிறித்தவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும், தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், நந்திவர்மன், களப்பிரர் காலம் முதலான பல ஆய்வு நூல்களை எழுதியவர். தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் நூலுக்காகத் தமிழக அரசின் முதல் பரிசு, மற்றும் தமிழ்ப் பேரவைச் செம்மல், ஆராய்ச்சிப் பேரறிஞர் முதலான விருதுகளையும் பெற்றவர்.
குடியரசு ஊழியன், செந்தமிழ்ச்செல்வி, ஆரம்பாசிரியன், லக்ஷ்மி முதலான இதழ்களில் ஆய்வு கட்டுரைகள் எழுதியவர். தமது வாழ்வை முழுமையாகத் தமிழியல் ஆய்வுக்கு ஒதுக்கியவர்; நமது சுய அடையாளங்களை மீட்டுத் தந்தவர்.
( இயல் - 8 -நமது அடையாளங்களை மீட்டவர் , வினா பக் : 213 )
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 = 12
39. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி:
( PTA -2 )
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி தொழில் உவமையணி ஆகும்.
அணி விளக்கம்:
செய்யுளில் உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் மற்றொரு வாக்கியமாகவும் வந்து போல என்னும் உவம உருபு வெளிப்படையாக வந்து செய்யும் தொழிலோடு உவமை அமைவது தொழில் உவமையணி ஆகும்.
உவமை: அகலாது அணுகாது தீக்காய்வார்
உவமேயம்: வேந்தரைச் சேர்ந்து ஒழுகுபவர்
உவம உருபு: போல்க
குளிருக்காகத் தீக்காய்வார் தீயை விட்டு அகன்று செல்லாமலும் நெருங்கிவிடாமலும் இருப்பது போல் அரசர்களைச் சார்ந்திருப்பவர்கள் பக்குவமாக நடந்து கொள்ளுதல் வேண்டும்.
( இயல் - 6 -வாழ்வியல் - திருக்குறள் , வினா பக் : 162 )
( அல்லது )
ஏகதேச உருவகஅணி : ( PTA - 5 )
அணி இலக்கணம்:
கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, அதற்கேற்ப இணையானதொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணியாகும்.
சான்று :
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புனையைச் சுடும்
குறள்பாவின் விளக்கம் :
சினம் தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாமல் அவனைச் சேர்ந்த சுற்றத்தாரையும் சேர்த்து அழித்துவிடும். தன்னைச் சேர்ந்தவரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம். நம்மை மட்டுமல்லாமல் நமக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இனமென்னும் தெப்பத்தை அழித்து விடும்.
அணிப் பொருத்தம்:
இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள உருவகப்படுத்தாமல் வள்ளுவர் சினத்தை விட்டுள்ளார். எனவே. இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.
.(இயல் - 3 வாழ்வியல் - திருக்குறள் - வினா பக் : 78)
40. இலக்கிய நயம் பாராட்டுக.
குற்றால மலையின் வளம்
முன்னுரை
திரிகூடராசப்பக்கவிராயர் இளம் பருவத்திலேயே தமிழ்க்கல்வி பயின்று அதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். மடக்கு, திரிபு, சிலேடை முதலிய சொல்லணிகளும், உவமை முதலிய பொருளணிகளும் சிறப்பாகப் பாடுவதில் வல்லவர். திருக்குற்றால நாதராகிய திரிகூடராசப் பெருமான் மீது பதினான்கு நூல்கள் பாடியுள்ளார். அவர் பாடியுள்ள திருக்குற்றாலக்குறவஞ்சி என்ற நூலில் இடம்பெற்றுள்ள இப்பாடலில் அமைந்துள்ள நயங்களைக் காண்போம்.
மையக்கருத்து
குற்றால மலையின் வளத்தையும், குற்றால் அருவியின் சிறப்பையும் கவிஞர் எடுத்துரைக்கின்றார்.
சொல்நயம்:
சான்று:
அடைச்சொற்கள் : தேனருவி, செங்கதிரோன், கூனலிளம், வேணி அலங்காரர்
அகராதிச் சொற்கள்:
கானவர் - வேடர்
வான்கவிகள் - வானத்திலுள்ள தேவர்கள்
கவனசித்தர் - வான்வழியாகச் செல்லும் சித்தர்கள்
காயசித்தி - உடலை அழியாது நிலைபெறச் செய்தல்
இவை போன்ற சொற்கள் நயமாக அமைந்து பாடலின் பொருளைத் தெளிவாக்குகிறது.
பொருள் நயம்:
குற்றால மலையையும், அதில் விழுகின்ற அருவியின் சிறப்பையும் விளக்குவதற்காக, வானில் உள்ள தேவர்கள். சித்தர்கள் இங்கே இறங்கி வந்து தங்கள் உடல்அழியாமல் இருக்க மூலிகைகளை வளர்ப்பர். அருவியின் நீர் மேலெழும்பி சூரியனின் தேர்ச்சக்கரத்தையும், குதிரையின் கால்களையும் வழுக்கிவிழச் செய்யும் என்று கூற வந்து குற்றாலமலை மற்றும் குற்றால அருவியின் சிறப்பையும் உணர்த்த பொருத்தமான சொற்களைக் கையாண்டு மிகச் சிறந்த முறையில் இக்கவிதையை இயற்றியுள்ளார்.
தொடை நயம்:
பாடலில் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பது தொடையாகும்.
மோனை நயம்:
இப்பாடலில் சீர்மோனை பயின்று வந்துள்ளது.
சான்று:
வானரங்கள் வான்கவிகள்
கானவர்கள் கவனசித்தர் காயசித்தி
தேனருவி திரையெழும்பி தேர்க்காலும்
கூனலிளம் குற்றாலத்
எதுகை நயம்:
பாடலின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும். இப்பாடலில் சீர் எதுகை மற்றும் அடி எதுகை பயின்று வந்துள்ளது.
சீர் எதுகை
சான்று :
வானரங்கள் வான்கவிகள் தேனருவி வானின்
கானவர்கள் வானவரை
அடிஎதுகை
சான்று:
வானரங்கள் தேனருவி
கானவர்கள் கூனலிளம்
இயைபு நயம்
ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதியில் உள்ள எழுத்தோ அல்லது இறுதி சொல்லோ அல்லது ஒரே அடியில் உள்ள சீரின் இறுதி எழுத்தோ ஒன்றி வந்தாலும் அஃது இயைபு எனப்படும். இப்பாடலில் சீர்இயைபு பயின்று வந்துள்ளது.
சான்று
கொஞ்சும் - கெஞ்சும் வழுகும் - ஒழுகும்
விளைப்பார் - அழைப்பார்
சந்த நயம்:
இப்பாடலை ஏற்ற இசைக்கருவியுடன் இசைத்துப் பாடினால் பாடுவோர்க்கும் கேட்பவர்க்கும் மிகுந்த கவி நயத்துடனும், தாளநயத்துடனும் சந்த நயத்துடனும் இருக்கும் வகையில் கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார்.
ஒழுகும் என்பதற்கேற்ப இசைநோக்கி வழுக்கும் என்பது வழுகும் எனக் ககரம் குறைந்து சந்த நயத்திற்காக நின்றது.
இப்பாடல் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா வகையைச் சார்ந்தது.
கற்பனை நயம்
இப்பாடலில் அருவியானது வானின்வழி ஒழுகும் என்றும், அந்நீரில் சூரியனின் தேர்சக்கரமும், குதிரைக் காலும் வழுக்கி விழும் என்றும் கவிஞர் கூறியுள்ளது இவரது படைப்புக் கற்பனைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அணி நயம்:
இப்பாடலில் கவிஞர் குற்றால மலையின் இயல்புகளை உயர்த்திக் கூறியுள்ளதால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.
சுவை நயம்:
இப்பாடலில், தேனருவி திரைபெழும்பி வானின்வழி யொழுகும், தேர்க்காலும் வழுகும் என்பன மிக்க சுவையுடைய பகுதிகளாகும். குற்றால மலையின் சிறப்பை மிகவும் பெருமித்ததோடு கவிஞர் கூறுவதால் இப்பாடலில் பெருமிதச் சுவை பயின்று வந்துள்ளது.
முடிவுரை :
''காலம் கவிஞனைக் கொன்றது; ஆனால் அவன் கவிதை காலத்தை வென்றது"
என்ற கூற்றிற்கு ஏற்ப கவிஞர் திரிகூட ராசப்பக் கவிராயர் இக்கவிதையில் கவிதைக்குரிய நயங்கள் எல்லாம் அமைத்து கவிதயங்களால் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மாணாக்கரே!
கேள்வியைக் கவனித்து எத்தனை நயங்கள் கேட்கப்பட்டிருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும் எழுதினால் போதுமானதாகும்.
.( இயல் - 8 மொழிப்பயிற்சி - வினா பக் : 216 )
41. அ) "குன்றின் மேலிட்ட விளக்குப் போல “
பழமொழி விளக்கம்:
குன்றின் மேல் இருக்கும் விளக்கு எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும். அதன் ஒளி எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும்.
வாழ்வியல் நிகழ்வு:
என் அம்மாவின் அண்ணன் கோபால் மிகவும் சுறுசுறுப்பானவர். குடும்பங்களில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு எல்லா காரியங்களையும் முன்னின்று நடத்துவார். தன் சுற்றத்தார் வீட்டல் என்ன செய்ய வேண்டும் என்றாலும் ஓடோடி சென்று செய்வார்.
அவர் மேற்கொள்ளும் பணிகளை அனைவருமே பாராட்டுவார்கள். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வார். மகிழ்வான நிகழ்வு, துயரமான நிகழ்வு என்ற வேறுபாடு இல்லாமல் ஓடோடி சென்று உதவுகின்ற ஒரு நல்ல மனதை உடையவராக இருந்தார். அவர் தங்கள் வீட்டிற்கு வந்தால் நடைபெறும் நிகழ்வு சிறப்பாக அமையும் என்று என் உறவினர்கள் பிறரிடம் பேசுவதை நான் கேட்டிருக்கின்றேன். அவர் இருக்கும் இடத்தில் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து எல்லோருக்கும் பலன் கொடுக்கின்ற ஒரு மனிதராக வாழ்ந்தார்.
அவரது இந்தச் செயலை அனைத்து உறவினர்களும் மகிழ்வோடு ஏற்றுக் கொள்வார்கள் தங்களுடைய வீடுகளில் நடைபெறும் நிகழ்வுக்கு அவர் வர கால தாமதமானால் வருத்தம் அடைவார்கள். அனைத்து நிகழ்வுகளிலும் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை முறையாக அறிந்து செய்யும் அவர் அனைவருக்கும்
பயன்தருகின்ற ஒரு நபராக இருந்தார்.
நீதி : சொந்தங்களுக்கு உதவும் நல்ல குணம் இருந்தால் நமது வாழ்வும் குன்றிலிட்ட விளக்கு போல இருக்கும் .
அல்லது
ஆ) “யானைக்கும் அடிசறுக்கும்” ( PTA - 3 , 5 )
பழமொழி விளக்கம்:
மிகப்பெரிய பலசாலி எனக் கருதப்படும் யானை கூட சில சந்தர்ப்பங்களில் நிலைதடுமாறி தன் சக்திக்கு உட்பட்டதில் தோல்வியைச் சந்திக்கும்.
வாழ்வியல் நிகழ்வு:
எங்கள் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் முகுந்தன் மிகச் சிறந்த ஓட்டப்பந்தய வீரன் ஆவான் .எம் பள்ளி சார்பாக நடைபெற்ற ஓட்டப்பந்தயங்களில் திறமையாக ஓடியதால் மாவட்ட அளவிலான ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதால் மாநில அளவிலான 100 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றான்.
சிறந்த பயிற்சியினை மேற்கொண்ட முருகன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனை படைத்து முதலிடம் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தான். ஊர்த்திருவிழாவில் நடைபெறும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வந்திருந்த முகுத்தனைப் பார்த்து எல்லோரும் கண்டிப்பாக முதல் பரிசினை முகுந்தனே தட்டிச் செல்வான் எனப் பேசிக் கொண்டிருந்தனர்.
போட்டி ஆரம்பமாகும் நேரம் நெருங்கியது. மைதானத்தில் போட்டியாளர்கள் தயாராக நின்று கொண்டிருந்தனர். 100 மீ ஓட்டப்பந்தயப் போட்டி தொடங்கியது. எல்லோரும் முகுந்தனை எதிர்பார்த்த நிலையில் சுரேஷ் எல்லைக் கோட்டை முதலில் தொட்டு முதல் பரிசினைப் பெற்றான். முகுந்தன் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டான். யானைக்கும் அடி சறுக்கும்' என்ற பழமொழி உண்மையானது.
நீதி :
மிகப்பெரிய பலசாலிகளும் ஒரு சில சந்தர்ப்பங்களில் பின்னுக்குத் தள்ளப்படுவர் என்பதை இப்பழமொழி மூலம் அறியலாம் .
( இயல் - 4- மொழியை ஆள்வோம் - வினா பக் : 103 )
( பொருத்தமான வேறு வாழ்க்கை நிகழ்வு எழுதினால் மதிப்பெண் வழங்கவும் . )
42. வெண்பாவிற்கான இலக்கணம் : ( PTA - 2 )
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்.
ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்.
ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீ (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்.
ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளில் ஒன்றைக் கொண்டு முடியும்.
செப்பலோசை உடையது.
( இயல் - 4- பா இயற்ற பழகலாம் - புத்தக உள் வினா பக் : 97 )
( அல்லது )
பாடாண் திணையைச் சான்றுடன் விளக்குக.
( PTA - 4 , MARCH - 2020 , SEPTEMBER - 21 , MAY - 2022 )
திணை விளக்கம்:
பாடு + ஆண் + திணை பாடாண் திணை. பாடப்படும் ஆண்மகனின் புகழ், வலிமை, கொடை, அருள், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாம். ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண் திணையின் நோக்கமாகும்.
சான்று:
“ வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வந்தித்தம்... எனத் தொடங்கும்
ஒளவையார் பாடிய புறநானூற்றுப் பாடலின் 206 ஆவது பாடல்
திணைப் பொருத்தம்:
'பரிசிலர்க்கு அடையா வாயி லோயே' என்ற வரிகள் மூலம் தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை அடைக்காமல் பரிசிலர் உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திருக்கும் வாயிலை உடையவன். அதியமான் நெடுமான் அஞ்சி என்று ஒளவை கூறியதில் இருந்து அஞ்சியின் கொடைத் தன்மை விளங்கும். மேலும் 'கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி' என்ற வரிகள் மூலம் விரைந்து ஓடும் குதிரைகளைத் தன் படையில் கொண்டவன் என்பதில் இருந்து அஞ்சியின் படை வலிமையையும் அறிந்து கொள்வதால், இப்பாடல் பாடாண் திணையைச் சார்ந்ததாகும்.
( இயல் - 4- புறநானூறு - புத்தக உள் வினா பக் : 89 )
( அல்லது )
பாடாண் திணையைச் சான்றுடன் விளக்குக.
திணை விளக்கம்:
பாடு + ஆண் + திணை = பாடாண் திணை. பாடப்படும் ஆண்மகனின் புகழ், வலிமை, கொடை, அருள், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாம். ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண் திணையின் நோக்கமாகும்.
சான்று:
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்...... எனத் தொடங்கும் பிசிராந்தையார் பாடிய
புறநானூற்றுப் பாடலின் 184-ஆவது பாடல்
திணைப் பொருத்தம்:
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவனமாகக் கொடுத்தால் அது யானைக்குப் பல நாட்கள் உணவாகும். பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகும் நெல்லை விடக் காலால் மிதிப்பட்டு அழியும் நெல் அதிகமாகும். முறை தெரியாமல் வரி அதுபோல மன்னன் திரட்டினால் நாடு விரைவில் கெடும் என்று அரசன் மேற்கொண்டு வரும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவதால் இப்பாடல் பாடாண் திணையைச் சார்ந்ததாகும்.
( இயல் - 7 - புறநானூறு - புத்தக உள் வினா பக் : 172 )
( இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை எழுத வேண்டும் )
43. தமிழாக்கம் : ( PTA - 4 , SEPTEMBER - 2020 )
இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகரம் எனப் புகழ்பெற்ற தமிழ்நாடு, மதிப்பிட முடியாத நவமணிகளைப் போன்ற வியப்பூட்டும் கோவில்களாலும், கலையழகு மிளிரும் கட்டடங்களாலும் புகழ் பெற்றதாகும். அந்த மாநிலம் இத்தகைய முதன்மையைப் பெற்றுத் திகழ அடிப்படைக் காரணமாக இருப்பது, பண்டைய சோழ மன்னர்களின் ஆட்சியின் பழமையான தலைநகரமான தஞ்சாவூரில் தோன்றி வளர்ந்த வண்ண ஓவியக் கலையாகும்.
( இயல் - 6 - மொழப்பயிற்சி - பக் : 154 )
43 ) காதுகேளாதவர்களுக்கான மாற்று வினா :
வினாக்காள் :
1. நகரங்கள்
2. சென்னை
3. சமூகங்கள் நிகழ்கால வாழ்விற்கும் , எதிர்கால வளர்ச்சிக்கும் துணை நிற்கின்றன .
4. இந்தியாவின் முதன்மை நகரில் ஒன்றாகவும் தமிழகத்தின் தலைநகரம் திகழ்கின்ற சென்னையின் வரலாறும் வளர்ச்சியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சிறப்புகள் ஆகும்.
( இயல் - 5 - மதராசப்பட்டினம் - பக் : 106 )
பகுதி – IV
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்
விடை தருக. 3 x 6 = 18
44. திருக்குறள் ஓர் வாழ்வியல் இலக்கியம் : ( MARCH - 2023 )
மாந்தர் அகவாழ்வில் சுமூகமாக புறவாழ்லிலும் இன்பமுடனும் இசைவுடனும், நலமுடனும் வாழ தேவையான பணபுகளை விளக்குகிறது.
உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் சேர்த்து கொள்வதே அறிவு, அதன் அத்தொடர்பீன முதலில் மகிழ்தலும் பின்னர் குவிதலும் இல்லாததும் அறிவு ஆகும். உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கிறார்களோ அவ்வாறே உயர்த்தவர்களோடு தானும் வாழ்வது
தான் அறிவு. பெரியோர் சிற்றினத்தைக் கண்டு ஒதுங்குவார்கள் சிறியாரோ அதுவே தம் சுற்றமாகக் கருதி வாழ்வார்கள்.
நிலத்தின் தன்மையால் அதில் சேர்ந்த நீரின் தன்மையும் மாறுபடும் அவ்வாறே மாந்தருக்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மை படியே அறிவு அமையும்.
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது மனிதனின் மனத்தின்
திட்பமே மற்றவை எல்லாம் இருந்தும் மனதில் உறுதி இல்லாவிட்டால்
செயலின் உறுதி இருக்காது.
ஒரு செயலை இடையில் விடாது முடிப்பதற்கான செயல்உறுதி என்று ஒருவனின் மன உறுதியே ஆகும்.
நாம் மன்னனுடன் சேர்ந்து வாழும் போது அருகிலும் இல்லாமலும் தூர விலகாமலும் இருத்தல் வேண்டும்.
கள் உண்ணுவதால் ஏற்படும் தீமை, சூதாடுவதால் ஏற்படும் மனமாற்றம் போன் அறக்கருத்துக்களை எல்லாம் மனித வாழ்க்கைக்கு எடுத்துக் கூறுவதால் திருக்குறள் ஓர் வாழ்வியல் இலக்கியம் என்பது சாலப் பொருத்தமாகும்.
( இயல் - 6 - வாழ்வியல் - திருக்குறள் - வினா பக் : 162 )
( அல்லது )
கவிதை எழுத அறிய வேண்டுவன : ( PTA - 1 )
யாப்பிலக்கணத்துக்கு உட்பட்டு சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்து, எதுகை, மோனை, தொடை நயங்களுடன் பொருத்தமான அடியளவில் அமைப்பதே கவிதையாகும்.
கவிதை எழுதும் முறை
எழுத்துக்கள் இணைந்து அசை தோன்றும்.
அசைகள் இணைந்து சீராகும்.
இரண்டு சீரின் இடைவெளியில் தளைகள் அமையும்.
தளைகள் இணைந்து அடிகள் தோன்றும்.
அடிகளில் எதுகை மோனை, இயைபு போன்ற தொடைகள் இணைந்து வரும்.
தொடைகள் சிறப்பாக அமைந்திருந்தால் நல்ல கவிதை உருவாகும்.
கவிதையில் அறிய வேண்டுவன:
தேமா, புளிமா ஆகிய இரண்டு மாச்சீர்களும், தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் ஆகிய நான்கு காய்ச்சீர்களும் சரியான முறையில் அமைய வேண்டும்.
சீர்களில் பிழையிருந்தால் தளைகள் பொருந்தாது.
வெண்பாவின் இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு இந்நான்கில் ஒன்றைக் கொண்டு முடியும். சரியான முறையில் எளிய வடிவில் எழுதப்படும் கவிதைகளே பாமர மக்களுக்கு விளங்கும்.
இத்தகைய கவிதைகளே காலந்தோறும் புகழ்பெற்று விளங்கும்.
கவிதையில் இடம் பெற வேண்டுவன :
அறிவையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் தூண்டும் சிறந்த கேள்விகள் இடம் பெற வேண்டும்.வாழ்வில் தவறாது கடைப்பிடிக்க வேண்டிய அறக்கருத்துக்கள் இடம் பெற வேண்டும். மேற்கண்டவற்றை அறிந்து கவிதை எழுதினால் புலவர்க்குப் புகழும் பெருமையும் சேரும்.
( இயல் - 4 - இதில் வெற்றி பெற - வினா பக் : 101 )
45 . நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து' கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகள் :
( MARCH . - 2020 )
நெகிழியைத் தவிர்த்து நிலத்தை நிமிர்த்துவது தொடர்பாகச் சில விளக்கங்களை அறியச் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் உரையாடத் தொடங்கினேன்!
நான் : ஐயா, நெகிழிப்பொருள் பயன்பாடு, இன்றைய சூழலில் மக்களுக்கு இன்றியமையாதது ஆகிவிட்டது அன்றோ?
பசுமைதாசனார் : உண்மைதான்! அதே வேளையில் நெகிழிப் பொருள்களால் விளையும் கேடுகளையும் எண்ணிப் பார்க்க வேண்டுமல்லவா? அவை மட்கி அழிவதே இல்லை!
நான் : உணவு உண்ணும் தட்டிலிருந்து பருகும் நீர்வரை, நெகிழிச் சாதனங்களில்தானே எளிதாகக் கிடைக்கிறது. பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிய வசதியாக இருக்கிறது அல்லவா?
பசுமைதாசனார் : உண்மை! நீ தூக்கி எறியும் நெகிழித்தட்டு, குவளை, புட்டி, பை எல்லாம் என்ன வாகின்றன? பெருங் குப்பையாகச் சேருகின்றன அல்லவா? அதுவும் மட்கி, அழிக்கமுடியாத குப்பை அரக்கனாகிறதே!
நான் : உண்மைதான் ஐயா, மற்ற குப்பைகளைப்போல் இவை மட்குவது இல்லை!
எரிக்கவும் முடிவதில்லை. எரித்தால் புகையோடு 'குளோரோ புளோரோ' புகைப் பூதமும், மக்களை விழுங்க வருகிறது!
பசுமைதாசனார் : தாயாக இருந்து, நம்மைப் பாதுகாக்கும் மண்ணை, மட்காத நெகிழிப் பொருள்கள்கெடுத்து விடுகின்றனவே! அவற்றை எரித்தால் எழும் புகை காற்றில் பரவி,
உயிரினங்களுக்குக் கேடு விளைவிக்கின்றனவே! நீ அறிவாயா?
நான் : ஆம் ஐயா, உண்மைதான். நீங்கள் சொல்லவும் எனக்கு நினைவுக்கு வருகிறது. எங்கள் தெருவில் சாக்கடை அடைத்துக்கொண்டது. அந்த அடைப்பை எடுத்தபோது, அளவுக்கு அதிகமான நெகிழிப்பொருள்கள் இருந்தன.
பசுமைதாசனார் : அதுமட்டுமா. நெகிழிக்குப்பை, மழைத்தண்ணீரை மண்ணுக்குள் புகவிடுவதில்லை. ஆற்றுநீர் தன் போக்கில் பெருகாமல் தடுத்து, வெள்ளமாகக் கண்டகண்ட இடங்களில் எல்லாம் வழிந்தோட வைக்கிறது. வெள்ளம்
எங்குப் பெருகுகிறது என்பதை அறிய முடிவதில்லை! அது கடலைக்கூட விட்டுவைக்கவில்லை.
நான் : மீன்களின் இனப்பெருக்கத்தைத் தடை செய்துவிடுகிறது. ஆடு மாடு காட்டில் வாழும் உயிரினங்கள்கூட, நெகிழியால் பாதிக்கப்படுவதைத் தெரிந்துகொள். இதற்கெல்லாம் என்ன செய்யலாம் ஐயா? நெகிழிப் பொருள் பயன்பாட்டை ஒட்டுமொத்தமாக மக்கள் தவிர்க்க வேண்டும்.
பசுமைதாசனார் : கண்ட கண்ட இடங்களில் பரவிக் கிடக்கின்ற நெகிழிப் பொருள்களைத் திரட்டி, அழிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசாங்கம் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும். நெகிழி சார்ந்த எத்தனையோ பொருள்கள் உள்ளன. அவற்றைக் களைவதை, பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். இதற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். நான் சொல்வது சரிதானே ஐயா?
பசுமைதாசனார் : இதற்குத் தகுதியானவர்கள் பள்ளிப் பிள்ளைகள்தாம். இந்தவகையில் பள்ளிப் பிள்ளைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நெகிழியால் மூடப்பட்ட பொருள்கள் சாக்லெட்முதல் அனைத்தையும் வாங்குவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். பயன்பாடு குறைந்தால், அது தானே மறைந்து விடும். இந்த நெகிழி வந்ததால் சணல், துணியால் செய்யப்பட்ட பை முதலான பொருள்கள் உற்பத்தி குறைந்துபோனது! அவை மீண்டும் உருவெடுக்கும். தொழில்கள் பெருகும். தொல்லைகள் குறைந்து நன்மை விளையும்.
( இயல் - 2 - வினா பக் : 43 )
( அல்லது )
மயிலையார் ஓர் “ ஆராய்ச்சிப் பேரறிஞர்” : ( PTA - 2023 )
தமிழ்த்தேனீ :
இளமையிலே தமிழின் மீது தீராத பற்றுக் கொண்டவர்
கட்டுரையோ, நூலோ எழுதும் முன் தரவுகளைச் சேகரித்து ஐயமிருப்பின் ஆன்றோர்களிடம் கேட்டுத் தெரிந்து தெளிந்த பிறகு புத்தகம் வெளியிடுவார் .
அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடத்தன
நூலகம் அவருக்குத் தாய்வீடு போன்றிருந்தது
பல்துறை அறிஞர்:
ச. த. சற்குணர் உரையால் முதல் நூலான "கிறித்துவமும் தமிழும்' உருவானது.
கல்வெட்டு ஆய்வில் பயிற்சி அதிகம் பெற்றவர்
தமிழ் எழுத்தியலை நன்கு உணர்ந்தவர்.
பல மன்னர்கள் பற்றிய ஆய்வும், தரவும் இவரால் வெளியிடப்பட்டன.
கலையியல் சார்ந்த தமிழில் வெளியான பல நூல்களுக்கு இவரே வழிகாட்டி
கலை வளர்ச்சிக்குப் பல்துறை அறிவும், இளமையில் ஓவியம் கற்றதும் பெரும் பயனைக் கொடுத்தன.
பல்வகை ஆய்வறிஞர் :
தமிழக வரலாற்றைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தவர்.
துளு மொழியையும் தமிழையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தவர்.
இவரது சொல்லாய்வுக் கட்டுரைக்கு 'அஞ்சிறைத் தும்பி' என்ற தொகுப்பே சான்றாகும்.
ஆராய்ச்சிப் பேரறிஞர்
இவரின் ஆய்வுகள் அறிஞர்களுக்கு மட்டுமன்றி பொது மக்களுக்கும் அறிவை வழங்கியது. இவரது ஆய்வு அடிமரமாக இருந்து பல புதிய ஆய்வுகள் கிளைவிடக் காரணமாக இருந்தன. இவரது எழுத்தாளுமையால் இவரது புத்தகத்தின் எந்த ஒரு பகுதியையும் ஒதுக்க இயலாது.
பட்டங்களும் பாராட்டுகளும்:
1962-இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்ற விருது வழங்கியது.
தமிழக வரலாற்றுக் கழகத்திலும், தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர்.
அரிய ஆய்வு முடிவுகளை உலகிற்குத் தந்தமையால் அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணி விழா எடுத்து 'ஆராய்ச்சிப் போறிஞர்' என்ற பட்டத்தை வழங்கினர்.
( இயல் - 8 -நமது அடையாளங்களை மீட்டவர் - வினா பக் : 213 )
46 ) பாரதியின் கடிதம் வாயிலாக அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று:
( SEPTEMBER - 2021 , MAY - 2022 , MARCH - 2023 )
மொழிப்பற்று:
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார்.
நெல்லையப்பரிடம் அவர் கூறும்போது, 'நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்ளவேண்டும்' என்று கூறுகின்றார்.
புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி அளிக்கப் பெற்று வளர வேண்டும். தாய் மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். பிறநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக் கொள்ள முயலவேண்டும்.
புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.
சமூகப்பற்று:
சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும்.
ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள், அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை", என்கிறார்.
பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். பெண்ணை வீட்டுக்குள்ளே அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.
சமூகம் வளர்ச்சி அடையத் தொழில் பெருக வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும் தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார்.
சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பூமி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும்.
நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும்
அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.
( இயல் - 1 - தம்பி நெல்லையப்பருக்கு, வினா பக் : 19 )
( அல்லது )
'உரிமைத்தாகம்' கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்... ( SEPTEMBER - 2020 )
கதைச்சுருக்கம்
பூமணி அவர்கள் இயற்றிய 'உரிமைத்தாகம்' என்னும் கதையில் வெள்ளைச்சாமி தன் அண்ணனுக்குத் தெரியாமல் தன் வேளாண் நிலத்தை பங்காரு சாமியிடம் இருநூறு ரூபாய்க்கு அடகு வைக்கிறான். அதை அவனது அண்ணன் முத்தையனிடம் அவனது மனைவி முக்கம்மா கூறுகிறாள். தம்பியிடம் மனவருத்தத்தில் பேசாமல் இருந்தாலும் பாசத்தினால் அவனது நிலத்தை மீட்க பங்காரு சாமியிடம் சென்று நிலத்தை மீட்க இருநூறு ரூபாயைக் கொடுக்கும்போது அவர் நானூறு ரூபாய் என்று பொய் சொல்கிறார். எனவே, சகோதரர்கள் இருவரும் இணைந்து பங்காரு சாமியிடம் சண்டையிடுகின்றனர்.
இரு சகோதரரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் கதை தொடர்கிறது…..
என்னத்த சொல்ல உங்க தம்பி நிலத்த அடகு வச்சிருக்காராம்..வீட்டில் ஒரே சண்டையா இருக்குது. என்ற மூக்கம்மாவின் பேச்சிற்குக் கொஞ்சமும் காது கொடுக்காமல் முத்தையன் தன் வேலையிலே மும்முரமா இருந்தான் 'என்னது நான் சொல்லுறது காதுல விழுறதா' என்ற மனைவியின் பேச்சுக்கு, 'இப்ப என்ன கொறஞ்சு போச்சு, நம்ம பேச்சக் கேட்காம போனவன்தானே, அவன் எப்பாடு பட்டா நமக்கென்ன, நமக்கு இருக்கிற
கஷ்டத்தில் இது வேறயா'? அந்த பங்காரு சாமி வேற பொல்லாத மனுசன் கிரயம் வாங்கிட்டுத்தான் ரூபா கொடுத்திருப்பாள்.. நான் கேட்கப் போனா அவன் கோர்டு கேஸீன்னு நம்மளப் போட்டு அலைப்பான். இது நமக்குத் தேவையா?
இந்த வெள்ளச்சாமி பையன் கொஞ்சமாவது பொறுப்போட நடக்கண்டாமா? அவன் என்னப் பத்தியும் உன்னப் பத்தியும் ஊருக்குள்ள என்னெல்லாமோ சொல்லிருக்கான் பட்டு அனுபவிச்சாத்தான் தெரியும். அவன் நிலத்த இழந்திட்டு நம்மகிட்ட திரும்ப வந்தாதான் நம்ம அருமை தெரியுமுன்னு சொன்ன தன்
கணவனைப் பார்த்து மூக்கம்மா பதில் எதுவும் பேசாமல் இருந்தாள்.
எதிர்வீட்டில் இருந்து வந்த சத்தத்தக் கேட்டு முத்தையன் துண்ட எடுத்துப் போட்டுக்கிட்டு வயலுக்குக் கிளம்பினான். பங்காருசாமி வெள்ளசாமிகிட்ட பேசியது அவன் காதுல கேட்டுட்டே இருந்தது.. டே வெள்ளசாமி நீ கிரயம் எழுதிக்கொடுத்த நாள் முடிஞ்சாச்சி, என்ன பண்ணப் போற ஒண்ணு ரூவாவக் கொடு இல்ல நிலத்த எழுதிக் கொடு' என்ற வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன.
இரண்டு வாரம் கழிச்சு வெள்ளச்சாமியின் நிலத்த பங்காரு சாமி எழுதிவாங்கிட்டதையும், அதனால வெள்ளச்சாமியின் மனைவி கோபப்பட்டுட்டு அவ அப்பா வீட்டுக்குப் போய் விட்டதாகவும், வெள்ளச்சாமி இப்போது கூலிக்கு எங்கேயோ போவதாக மூக்கம்மா கூறிய வார்த்தைகளக் கேட்ட முத்தையாவின் உள்ளம் துடித்துடித்தது அப்படியே வீட்டின் மேற்கூரையை வெறித்துப் பார்த்தபடி முத்தையன் நின்று கொண்டிருந்தான்.
( இயல் - 3 - உரிமை தாகம் , வினா பக் : 69 )
பகுதி - V
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6
47.அ) “ வையகம் பனிப்ப “ - எனத் தொடங்கும் நெடுநல்வாடை பாடல்
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடுஇதழ்க் கண்ணிநீர் அலைக் கலவா
மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
( இயல் - 2 - நெடுல்நல்வாடை , பக் : 30 )
ஆ) ‘சினம் ’ என முடியும் திருக்குறள்: ( PTA - 2023 )
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
( இயல் - 3 - வாழ்வியல் - திருக்குறள் - வெகுளாமை , பக் : 75 )
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேனிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 📞9843448095
12 ஆம் வகுப்பு |தமிழ் | அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் 2023 | டிசம்பர் 2023 | கன்னியாகுமரி | QUESTION PAPER | DOWNLOAD FREE - CLICK HERE
11th Standard| English| QUARTERLY EXAM QUESTION PAPER |SEPTEMBER 2023| ORIGINAL QUESTION PAPER | FREE DOWNLOAD | CLICK HERE
தமிழ் |11 ஆம் வகுப்பு|பாடக் குறிப்பேடு|இயல் 5| உரைநடை|செய்யுள்| ஆனந்தரங்கர் நாட்குறிப்பு| சீறாப்புராணம்|NOTES OF LESSON |CLICK HERE
தமிழ் |11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 4| துணைப்பாடம்|இனிக்கும் இலக்கணம் DOWNLOAD HERE
இயல் 4| பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்| |Power Point Presentation |PPT| DOWNLOAD HERE
முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 2 -👇👇👇👇👇DOWNLOAD HERE
12 ஆம் வகுப்பு | தமிழ் | இயல் 2 | செயல் திட்டம் | மாணவர் செயல்பாடு | வெள்ளப் பெருக்கின் தாக்கங்கள்| திரட்டு வைப்பேடு | STUDENTS ACTIVITITY | PROJECT | ALBUM | DOWNLOAD HERE
12th TAMIL | இயல் 2| பெருமழைக்காலம் | பிறகொருநாள் கோடை | நெடுநல் வாடை | பாடக்குறிப்பேடு | NOTES OF LESSON | DOWNLOAD HERE
இயல் 1,2,3 | இலக்கணம் |மொழிப்பயிற்சி | 2 மதிப்பெண் வினா விடைகள் | DOWNLOAD HERE
முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 1 -👇👇👇👇👇DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 1 | DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 2 | DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 3 | DOWNLOAD HERE
12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL