12th Standard- +2Tamil - Tamil -Study Material - HAFLF YEARLY EXAM QUESTION PAPER 2023 -DECEMBER 2023- ORIGINAL QUESTION PAPER - ANSWER KEY - 12 ஆம் வகுப்பு -தமிழ் - அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் 2023 - டிசம்பர் 2023-விடைக் குறிப்பு
சென்னை மாவட்டம்
அரையாண்டுத் தேர்வு - டிசம்பர் 2023
நேரம்: 3:மணி வகுப்பு-1 2 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
விடைகள்
பகுதி- I
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1. ஈ ) க , ங இரண்டும் சரி
2. ஆ ) 3 4 1 2
3. ஆ ) தமிழ்விடு தூது
4. ஆ ) வினைப்படிமம்
5. ஆ ) புதுமைப்பித்தன்
6. இ ) தரும்புரி
7. ஈ ) 1 சரி 2 சரி
8. இ ) நாய்
9. ஆ ) தனக்கும் பயன்படாது, பிறருக்கும் பயன்படாது.
10. ஈ ) மாசி
11. இ ) சீனா
12. இ ) இசைக்கருவி
13. ஆ ) மயிலைநாதர்
14. ஈ ) தீயினத்தார்
பகுதி - II
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக 3 x 2 = 6
16. வசனம்: ( PTA - 6 , MARCH 2020 )
சொற்களைச் சேர்க்கும் போது எதுகை, போன்றவை அமையாமல் அடியளவை அறிந்திடாமல் அமைக்கின்ற இலக்கிய வடிவம் தான் வசனம் ஆகும்.
கவிதை :
சொற்களைச் சேர்க்கும் போது யாப்பு முறைப்படி எதுகை மோனை போன்ற தொடை நயங்களைச் சேர்த்து, குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி போன்ற அடியளவை அறிந்து வார்த்தைகளை அமைப்பதே கவிதையாகும்.
( இயல் - 4 - இதில் வெற்றி பெற - வினா பக் : 101 )
16. அறிவுடை வேந்தனின் நெறி:
அறிவுடை அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
( இயல்- 7 - புறநானூறு - வினா பக் . 183 )
17. நஞ்சுண்பவர்: ( PTA - 4 )
கள் உண்பவர்களை ‘நஞ்சுண்பவர்’ என வள்ளுவர் இடித்துரைக்கிறார்.
( இயல் - 6 - வாழ்வியல் - திருக்குறள் - வினா பக் : 162 )
18. அகநானூறு :
அகநானூறு மூன்று பிரிவுகளை உடையது. அவை,
1. களிற்றியானை நிரை
2. மணிமடை பவளம்
3. நித்தலக்கோவை
(இயல் - 5 - அகநானூறு ,புத்தக உள்வினா , நூல்வெளி , பக் : 117 )
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
19. நடை அழகியல் : ( SEPTEMBER - 2021 , AUGUST -2022 )
கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும்.
. 'நடைபெற்றியலும்', 'நடை நவின்றொழுகும்' என்றும் ‘ “ஆசிரிய நடைத்தே வஞ்சி ; ஏனை வெண்பா நடைத்தே கலி” என்றும் சொற்றொடர்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு பாவும் இவ்வாறே அமைய வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
( இயல் - 1 - தமிழ்மொழியின் நடைஅழகியல் ,வினா பக் : 18 )
20. பருவத்தே பயிர்செய் - நேர மேலாண்மையோடு பொருத்து : ( PTA - 6 )
‘பருவத்தே பயிர்செய்’ என்பது காலத்தின் அருமையை உணர்ந்து பொறுப்புடன் நிருவாக நெறியை இணைத்தால் வேளாண்மை செழிக்கும் என்பதை உணர்த்தும் தொடராகும். அதாவது சரியான பயிரைத் தேர்ந்தெடுத்து உரிய காலத்தில் விதைத்தால் விதை முளைத்து நல்ல பலனைத் தரும்.
( இயல் - 7 - இலக்கியத்தில் மேலாண்மை , வினா பக் : 183 )
21. முறை வைப்பது: ( PTA - 6 )
ஆசிரியர் நெடுங்கணக்கை சொல்லிக் கொடுக்க மாணவர்கள் அதனை பின்பற்றிச் சொல்வார்கள் . இப்படி ஆசிரியர் ஒன்றைச் சொல்ல அதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ‘முறைவைப்பது’ என்று கூறுவார்கள்.
சில நேரங்களில் ஆசரியருக்குப் பதிலாகச் ‘சட்டாம்பிள்ளை’ ( வகுப்புத் தலைவன் ) முறைவைப்பதும் உண்டு.
( இயல் - 4 - பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் ,புத்தக உள்வினா , பக் : 82 )
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22.தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள்
1. எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்க பழக வேண்டும். ஒலிப்பு வேறுபாடு
தெரிந்து ஒலிக்க வேண்டும்.
2. தமிழில் எழுத்துக்கள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள்
மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்.
3. எழுதும் போது தொடக்கத்தில் சில காலம் வாய்விட்டோ அல்லது மனதுக்குள்
உச்சரித்தபடி எழுதிப் பழகுவது நல்லது.
4. வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிவகுக்கும். எனவே நிதானமாக
எழுதுவது நல்லது.
5.குறில் ,நெடில் வேறுபாடுகளைப் புரிந்து எழுத வேண்டும்.
( இயல் - 1 - தமிழாய் எழுதுவோம் ,வினா , பக் : 17 )
23. கலைச்சொல்
அ ) RAILWAY - தொடர்வண்டி வழிக்குறி
( இயல் - 2 - படிப்போம் பயன்படுத்துவோம் , பக் : 46 )
ஆ ) ANIMATION - இயங்குபடம்
( இயல் - 6 - படிப்போம் பயன்படுத்துவோம் , பக் : 156 )
24. சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடரமைக்க.( MARCH - 2020 )
தானே
1. கண்ணன்தானே படித்தான்.
2. கண்ணன் தானே படித்தான்.
( இயல் - 3-பொருள் மயக்கம் - வினா பக் : 67 )
25. ஏதேனும் ஒன்றனுக்கு இலக்கணக் குறிப்புத் தருக.
அ ) அடையா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
( இயல் - 4-அகநானூறு - இலக்கணக் குறிப்பு, , வினா பக் : 90 )
ஆ ) காய்நெல் - வினைத்தொகை
( இயல் - 7 புறநானூறு -இலக்கணக் குறிப்பு, வினா பக் : 173 )
26. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அ ) தொழுதனர் - தொழு + த் + அன் + அர்
தொழு - புகுதி
த் - இறந்தகால இடைநிலை
அன் - சாரியை
அர் - படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி
( இயல் - 6 - சிலப்பதிகாரம் -பகுபத உறுப்பிலக்கணம் வினா பக் : 140)
ஆ ) பொலிந்தான் - பொலி + த் ( ந்) + த் + ஆன்
பொலி - பகுதி
த் - சந்தி , த் , ந் - ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
( இயல் - 3 - கம்பராமாயணம் -பகுபத உறுப்பிலக்கணம் வினா பக் : 56 )
27. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக
அ) எத்திசை - எ + திசை
விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் - எத்திசை
( இயல் - 4 - புறநானூறு - புணர்ச்சி - வினா - பக் : 90 )
ஆ ) உள்ளொன்று - உள் + ஒன்று
விதி : ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் ‘ - உள்ள் + ஒன்று
விதி : ‘ உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ - உள்ளொன்று
( இயல் - 5 - தெய்வமணிமாலை - புணர்ச்சி - வினா - பக் : 112 )
28. பேச்சு வழக்கு எழுத்து வழக்காக மாற்றுக.
அ) நிலத்தைக் கிளர வேண்டுமடா ! அப்பொழுதுதான் வயிறு நிரம்பும். ( PTA - 4 , 6 )
( இயல் - 5 - மொழிப்பயிற்சி , பக் : 127 )
ஆ) “நான் பேருந்தில் வருகிறேன்” என்று சொல்லி முடிக்கும் முன்பே மகிழுந்து புறப்பட்டது.
29. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
ஆட்டுப்பட்டியைச் சுற்றிலும் எலிகள் வளைகள் அமைத்திருந்தன.
30 . பொருள் வேறுபாடு அறிந்து தொடரமைக்க.
கான் - காண் ( MAY - 2022 )
கான் - காடு ; காண் - பார்
கானகத்தில் உலவும் விலங்குகளைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.
தின்மை - திண்மை ( MARCH - 2020 )
தின்மை - தீமை ; திண்மை - வலிமை
மெலியாருக்குத் தின்மை செய்வது திண்மை உடையோரின் செயலன்று.
( இயல் - 6 - மொழிப்பயிற்சி , பக் : 154 )
பகுதி –III
பிரிவு-1
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
31. வாடைக்காலத்தில் கோவலர் நிலை : ( SEPTEMBER - 2020 )
* வாடைக் காலத்தில் பெய்த பெருமழையால் வெள்ளம் பெருகியது. தாழ்வான பகுதிகளில் வாழ்ந்த கோவலர், பெருகிய வெள்ளத்தை வெறுத்தனர். தம் நிரைகளை மேடான நிலங்களில் மேயவிட்டனர். அவர்கள் குடியிருந்த காந்தள்மலர் மாலைகள் கசங்கின. * மலையையே நடுங்கச் செய்வதுபோன்ற குளிரில் பாதுகாப்பைத் தேடினர். * ஆயர் பலர் சேர்ந்து, கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். எனினும், அவர்களின் பற்கள் வாடைக் குளிரில் நடுங்கின.
( இயல் - 2 - நெடுநல்வாடை ,வினா பக் : 42 )
32. நெல்லின் நேரே வெண்கல் உப்பு' (PTA .-1 )
பண்டமாற்று வணிகம்:
பண்டைய காலங்களில் பண்டமாற்று வணிகமே சிறப்புற்றிருந்தது. பழந்தமிழர் தொழில் நிலத்தின் இயல்பைச் சார்ந்து அமைந்திருந்தது. பழந்தமிழர் தங்கள் வாழிடத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தித் தொழில் செய்தனர். அவ்வாறு தொழில் செய்து விளைவித்த பொருட்களைப் பிறநில மக்களிடம் பண்டமாற்று
முறையிலே வாணிகம் செய்தனர். தங்களது நிலத்தில் விளையாத பொருட்களைப் பெற தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களைப் பண்டமாற்று முறையில் பெற்றுக் கொள்வர்.
பண்டைய தமிழகம்
பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளைவித்த பிறகு உமணர்கள் அந்த உப்பைக் கொண்டு பிற நிலங்களில் விளைந்த பொருட்களைப் பண்டமாற்று முறையில் பெற்றுக் கொண்டனர்
பண்டமாற்று வணிகத்தில் விளைவிக்கப்படும் பொருள்களுக்கு விலையாகப் பணம் கொடுப்பதில்லை மாறாகத் தங்கள் நிலங்களில் விளையாத பொருட்களே பெற்றுக் கொள்ளப்பட்டன. இதனையே உமணர் மகள் உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக் கொள்ளவாரீரோ!" என்று கூறுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இதன் வழியாகப் பண்டையத் தமிழகத்தில் நடந்த வணிகம் பண்டமாற்று வணிகம் என்பதை அறியலாம்.
( இயல் - 5 - அகநானூறு ,வினா பக் : 125 )
33. நாட்டிய அரங்கின் அமைப்பு : ( PTA - 1 ,5 ; MARCH - 2020 ; MAY - 2022 ; AUGUST 2022 )
திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர். தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர்.
அரங்கத்தின் நீளம் எட்டுக்கோல்: அகலம் ஏழுகோல்; உயரம்ஒருகோல்.
உத்திரப்பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கும் இடைவெளி நான்குகோல் அளவு அரங்கத்தின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் இரு வாயில்கள்
தூண்களின் நிழலானது. அவையிலும் நாடக அரங்கிலும், விழாதபடி நல்ல அழகான நிலை விளக்குகள் அமைந்திருந்தன.
ஒருமுகத்திரை பொருமுகத்திரை, கரந்துவரல் திரை என மூன்றுவகையாக திரைகள் அமைத்தனர். ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானம் அமைந்திருந்தது.
சிறந்த முத்துகளால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர்.
இவ்வாறு எங்கிருந்து பார்த்தாலும் நாட்டிய நிகழ்ச்சி காணத்தக்க வகையில் திட்டமிடப்பட வேண்டும் என்பதும், ஆட்ட அரங்கு, ஆட்டத்தைக் கண்டு சுவைப்பவர் அமரும் அவையைவிட உயரமாக இருக்க வேண்டும் என்பதும் தெளிவுபடக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
( இயல் - 6 - சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் ,வினா பக் : 152 )
34. யானை புக்க புலம்போல - உவமையையும் பொரு ( PTA - 5 , SEPTEMBER - 2021 )
உவமை:
யானை புகுந்து உண்ணத் தொடங்கும் நிலத்தில் விளைந்த நெல்கதிர் அதன் வாயுள் புகுவதை விட கால்களில் மிதிபட்டு அழிவது மிகுதியாகி கெட்டு போகும்.
பாடல் பொருள்:
முறையறியா மன்னன் மக்களை வற்புறுத்தி வரியை வசூல் செய்தால் மக்கள் துன்பப்பட்டு வரியைக் கொடுப்பர். அரசன் தனது தேவைக்கு அதிகமாக வரி வசூல் செய்தால் நாட்டு மக்கள் அவளது ஆட்சியை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
உவமையும் பொருளும் பொருத்தம்;
முறையறியா மன்னன் மக்களை வற்புறுத்தி வரியை மக்களிடம் இருந்து பெறுவது யானை புகுந்து உண்ணத் தொடங்கும் நிலத்தில் விளைந்த நெல்கதிர், அதன் வாயினுள் புகுவதைவிடக் கால்களில் மிதிபட்டு அழிவது மிகுதியாகவே இருக்கும். எவ்வித நலமும் கிடைக்காது. யானை தான் உண்ணும் அளவை விட கால்களால் அழிப்பது மிகுதியாதல் போல், அரசன் தனக்குத் தேவையான அளவையும் பெறாமல், அழிவுஅதிகமாகவே இருக்கும்.
அரசன் முறையறிந்து வரி வசூலித்தால் நாட்டு மக்கள் விருப்பத்தோடு அளித்து மக்களும் மகிழ்ச்சியோடு வாழ நாட்டின் செல்வ வளம் பெருகும்.
முறை அறியாது வரி வசூலிக்கும் மன்னனுக்கு யானையும், அதனால் அழியும் மக்களுக்கு மிதிபட்டு அழியும் கதிர்களும் உவமையாயின.
( இயல் - 7 - புறநானூறு -,வினா பக் : 163 )
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
35. வேளாண் மேலாண்மை: ( PTA - 1, 2 ,4,6 SEPTEMBER - 21; MAY - 2022; AUGUST - 2022)
வேளாண் மேலாண்மை பற்றி நான் பரிந்துரைக்கும் கருத்துகள்:
1. சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல்
2. உரிய நேரத்தில் விதைத்தல்
3. நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல்.
4. அறுவடைக்குப் பின் பாதுகாத்தல்.
5. உரிய விலை வரும்வரை இருப்பு வைத்தல்
என்று ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும், நிருவாக நெறியும் இணைந்தால் வேளாண்மை செழிக்கும்.
( இயல் - 7 - இலக்கியத்தில் மேலாண்மை - ,வினா பக் : 183 )
36. திரைப்படத்தின் காட்சியின் ஆற்றல் : ( PTA - 6 ; SEPTEMBER- 2020)
திரைப்படத்தில் காட்சி சிறப்பாக அமைந்தால், வசனம் இரண்டாம் பட்சமாகிவிடும். திரைப்படத்தில் வசனம் இன்றி காட்சிகளை அடுத்தடுத்து வைத்துக் கதையை நகர்த்துவர், திரைப்படத்தில் நடிப்பவரை முப்பரிமாணத்தில் காட்டும் காட்சிகள் இடம்பெறும்.
ஒருவன் ஓடிவருவதாகக் காட்டிவிட்டு 'என்னாச்சி' என்று கேட்டால் போதும், இதுகாட்சி மொழியாகி விடும். ஒருவன் உணர்ச்சியைக் காட்ட முகத்தைக் காட்சியாகக் காட்டினால் போதும்.
கட்டுப்படுத்த முடியாத கோபத்தைக் காட்ட நடிகன் கத்த வேண்டியது இல்லை; கண்ணாடிக் குடுவையை இறுகப் பிடித்து உடைப்பதைக் காட்டினால் போதும் இப்படியாகக் கதை நகர்வுக்குத் திரைப்படக் காட்சி உதவுகிறது.
( இயல் - 6 - திரைமொழி - ,வினா பக் : 152 )
37. தமிழர் பரம்பரை - கருத்துப் படம்
( இயல் - 3 - தமிழர் குடும்ப முறை - புத்தக உள்,வினா பக் : 51 )
38. மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : (PTA - 6 )
வெள்ளப்பெருக்கை எதிர் கொள்ளும் விழிப்புணர்வுப் பரப்புரையைச் செய்தல் வேண்டும். நீர்நிலைகளை முறையாகப் பராமரித்தலுடன் நீர்வழிப்பாதைகளுக்கான தெளிவான வரைபடம் உருவாக்கப்பட்டு நீர்வழிப் பாதைகளை முறையாகப் பராமரித்தல் வேண்டும்.
இயற்கையாகவே பெருமழையைத் தாங்கக் கூடிய குளம், குட்டை, ஏரி, ஆறு, வடிகால் வாய்க்கால்கள் மற்றும் வெள்ளச்சமவெளிகளைச் சேதப்படுத்தாமல் இருப்பதே சிறப்பாகும். வெள்ளச்சமவெளிகளை முறையாகப் பராமரித்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறையும். மழைவெள்ளம் குறித்த போதிய விழிப்புணர்வைத் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாகப் பொதுமக்கள் அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.
( இயல் - 2 - பெருமழைக் காலம் - வினா பக் : 43 )
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 = 12
39. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை : ( SEPTEMBER - 2020 )
பழமொழி விளக்கம்:
உடன்வாழ்கின்றவர்களுடனும், சொந்தங்களுடனும் நாம் எப்போதும் குறைகளை மட்டுமே கண்டுபிடித்து அதனை மட்டுமே சுட்டிக்காட்டி நாம் நல்லவர்களாக இருப்பது போன்று நடந்து கொண்டோம் என்றால், நமக்கு என்று ஒரு சொந்தமும் இருக்காது.
வாழ்வியல் நிகழ்வு:
என் அம்மாவின் அண்ணன் கோபால் மிகவும் சுறுசுறுப்பானவர். குடும்பங்களில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு எல்லா காரியங்களையும் முன்னின்று நடத்துவார். அவரிடம் இருக்கும் ஓரே தீயகுணம் அவர் செய்வது மட்டுமே சரி என்றும் அடுத்தவர்கள் செய்வது எல்லாம் தவறானது என்றும் எண்ணுவதாகும்.
தன் சுற்றத்தார் எதைச் செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதும் குறை காண்பதுமே அவரது வழக்கம். சுற்றத்தாரிடம் இனிய சொற்களைப் பேசாமல் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருக்கும் இவரது இக்குணத்தால் சுற்றத்தார் அனைவரும் இவருடன் அதிகமாகப் பேசுவது கிடையாது ஏனென்றால் பேசினால் கூட அதில் குறை கண்டுபிடிக்கும் மனநிலையுடன் அவர் காணப்பட்டார். ஆனால் சுற்றத்தாரின் அத்தனை விசேசங்களுக்கும் வந்து நின்று எவ்லா காரியங்களையும் நடத்திக் கொடுப்பார்.
அவருடைய மகளின் திருமண விழாவிற்குச் சொந்தங்களுக்கு அழைப்புக் கொடுத்திருந்தார். திருமணத்திற்கு முன்தினம் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தன் சொந்தங்கள் எல்லோரும் வந்து நின்று சிறப்பாக நடத்தித் தருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால், ஒருவர் சுற்றத்தாரில் கூட அந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. என்ன காரணம் என விசாரித்த போது அவர் வீட்டிற்குச் சென்று நாம் எதாவது செய்தால் குறையும், குற்றமும் கண்டுபிடித்துத் திட்டிக் கொண்டே இருப்பார் என்று நினைத்து ஒருவரும் செல்லவில்லை. குற்றம் பார்த்ததால் சுற்றம் இல்லாமல் தனியாக எல்லா வேலைகளையும் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார் கோபால்.
நீதி :
சொந்தங்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துவது நல்லது. அதற்காக எப்போதும் குறைகூறிக் கொண்டிருந்தால் ஒரு சொந்தமும் இருக்காது.
( இயல் - 4- மொழியை ஆள்வோம் - வினா பக் : 103 )
( அல்லது )
ஊழி பெயரினும் தாம் பெயரார் : ( MARCH - 2020 ; MAY - 2022 )
பழமொழி விளக்கம்:
சான்றாண்மை என்னும் குணம் உடையவர்கள் உலகமே அழியும் ஊழிக்காலம் வந்தாலும் தம் நிலையில் இருந்து வேறுபடாமல் இருப்பர்.
வாழ்வியல் நிகழ்வு:
என் மாமா வேதமாணிக்கம் மிகவும் அன்பானவர்; உண்மையானவர்; நேர்மையானவர்; எங்கள் ஊரில் அவருக்கு என்று சிறப்பான பெயர்களும் உண்டு எச்சூழ்நிலையிலும் தன் சான்றாண்மை என்னும் குணத்தில் இருந்து அவர் வேறுபட்டதில்லை அவருடைய சொல்லுக்கு எங்கள் கிராமமே கட்டுப்படும் அந்த அளவிற்கு நல்ல குணம் உடையவர்.
எங்கள் கிராமத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்திற்கான தேர்தல் வந்தது. எங்கள் பக்கத்துக் கிராமத்தைச் சார்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகச் செய்தி வந்தது. எங்கள் கிராமத்தைச் சார்ந்த படித்த பண்புள்ள இளைஞன் ஒருவனும் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தான். ஆண்டு முழுவதும் மழையில்லாததால் விவசாயம் நடைபெறவில்லை. பக்கத்துக் கிராமத்தைச் சார்ந்த போட்டியாளன் என் மாமாவின் மகள் திருமணம் இன்னும் ஒரு மாதக் காலத்தில் நடக்க இருந்தது. இதனை அறிந்து மாமாவிற்குத் தூது அனுப்பி, அவர் மகளின் திருமணத்திற்கு உரிய செலவு அத்தனையும் பார்ப்பதோடு இன்னும் அதிகமாகப் பணம் தருவதாக வாக்குறுதி கொடுப்பதாகவும் தேர்தலில் தனக்குச் சாதகமாக ஊர் மக்களை வாக்களிக்குமாறு கூற வேண்டும் என்றும் கூறி ஆள் அனுப்பியிருந்தான் .
அவ்வாறு நடைபெறவில்லையெனில் அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தான். என் மாமாவோ என்ன நடந்தாலும் பரவாயில்லை உண்மையானவர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும், என் உயிர் போவது பற்றிக் கவலையில்லை என்றும், என் மகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடக்கும் என்றும் கூறினார். ஊழிபெயரினும் தாம் பெயராமல் தமது சான்றாண்மைப் பண்பை அவர் வெளிப்படுத்தினார்.
நீதி :
சுயநலத்திற்காகத் தான் கொண்ட கொள்கையில் இருந்து ஒருநாளும் நிலைதடுமாற மாட்டார்கள் சான்றாண்மை என்னும் குணம் படைத்தவர்கள்.
( இயல் - 4- மொழியை ஆள்வோம் - வினா பக் : 103 )
( பொருத்தமான வேறு வாழ்க்கை நிகழ்வு எழுதினால் மதிப்பெண் வழங்கவும் . )
40. தமிழறிஞர்கள் : ( SEPTEMBER - 2021 )
1.மறைமலை அடிகள்
2. தமிழ் ஒளி
3. புதுமைப் பித்தன்
4. கோதை
( இயல் - 1 - மொழியோடு விளையாடு - வினா பக் : 21 )
41. செவியறிவுறூஉ துறை: ( SEPTEMBER - 2020 ; MAY - 2022)
செவியறிவுறூஉ துறை விளக்கம் :
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் நேரத்தில் அறிவுறுத்தல், செவியறிவுறூஉ துறையாகும்.
சான்று:
“ காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்.......” எனத் தொடங்கும் பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப்பாடலின் 184-ஆவது பாடல்.
சான்று பொருத்தம்:
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் உண கவளமாகக் கொடுத்தால் அது யானைக்கப் பல நாட்களுக்கு உணவாகும். பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகும் நெல்லைவிடக் காலால் மிதிப்பட்டு அழியும் நெல் அதிகமாகும்.
அதுபோல மன்னன் முறை தெரிந்து வரி திரட்டினான் என்றால் நாடு வளமடையும் என்பதை உணர்த்த, "அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, கோடியாத்து நாடு பெரிது நந்தும்" என்று உரைத்தலால் இப்பாடல் செவியறிவுறூஉ துறையைச் சார்ந்ததாயிற்று.
( இயல் - 7 -புறநானூறு - வினா பக் : 183 )
( அல்லது )
வாகைத் திணை : . ( PTA - 3 )
திணை விளக்கம்:
வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை ஆகும்.
சான்று:
“ வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇ............ “ எனத் தொடங்கும் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடைப் பாடல்
திணைப் பொருத்தம்:
வாடைக் காலத்தில் மேகம் வலப்பக்கமாகச் சூழ்ந்து இந்தில உலகம் குளிரும்படி மழையாகப் பெய்தது. வாடைக் காற்றின் குளிர்ச்சியினால் ஆயர்கள் சேர்ந்து உடலுக்குச் சூடேற்ற கொள்ளி நெருப்பின் மேல் கைகளை நீட்டினர் அத்தகைய குளிர்ச்சியான நேரத்தில் மன்னனும் கூதிர்பாசறையில் அமர்ந்து தன் வெற்றியைக் கொண்டாடினான் என்பதால் இப்பாடல் வாகைத் திணையைச் சார்ந்ததாகும்.
( இயல் - 2 -நெடுநல்வாடை - புத்தக உள் வினா பக் : 30 )
42.: இலக்கிய நயம பாராட்டுக :
புதிய பூமி
முன்னுரை:
நா . காமராசன் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக் கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனக் கவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். புதுக்கவிதையின் ஆசான்' என்று அழைக்கப்பட்ட
நா. காமராசன் அவர்கள் எழுதியுள்ள இப்பாடலின் நயங்களைக் காண்போம்.
மையக்கருத்து:
இல்லாமை என்பது இல்லாமல் ஆகவேண்டும். நாடெங்கும் வளமை செழிக்க வேண்டும்.
சொல்நயம்:
அடைச்சொற்கள் : பூமிச்சருகாம், முத்து பூத்த கடல், புதிய தென்றல், விண்மீன் காசு, இரவெரிக்கும் பரிதி போன்ற சொற்கள் நயமாக அமைந்து பாடலின் பொருளைத் தெளிவாக்குகிறது.
பொருள் நயம்:
இப்பூமியில் இல்லாமை என்பது இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இரவலர்கள் இருக்கக் கூடாது. ஏழைகள் இருக்கக்கூடாது. பூமி வளமானதாக இருக்க வேண்டும். இயற்கைப் பேரிடர்கள் வரக்கூடாது எல்லோரும் வளமாக வேண்டும் என்னும் பொருளை உணர்த்த பொருத்தமான சொற்களைக் கையாண்டு மிகச் சிறந்த முறையில் இக்கவிதையை இயற்றியுள்ளார்.
தொடை நயம்:
பாடலில் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பது தொடையாகும்.
மோனை நயம்:
சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும் இப்பாடலில் சீர்மோனையும் அடிமோனையும் பயின்று வந்துள்ளன. -தொல்காப்பியம்
சான்று:
இப்பாடலில் சீர்மோனை பயின்று வந்துள்ளது.
பூமிச்சருகாம் - பாலையை
புயலைக் - புதிய
இரவில் - இரவலரோடு
இப்பாடலில் அடிமோனை பயின்று வந்துள்ளது.
பூமிச்சருகாம்
புயலை
இரவெரிக்கும்
இரவில்
எதுகை நயம்:
பாடலின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும். இப்பாடலில் சீர் எதுகை அடி எதுகை பயின்று வந்துள்ளது.
சீர் எதுகை:
சான்று:
இரவில் - இரவலரோடு
அடி எதுகை:
சான்று:
இரவில்
இரவெரிக்கும்
இயைபு நயம்:
ஒரு செய்யுளில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிகளின் இறுதியில் உள்ள எழுத்தோ அல்லது இறுதிச் சொல்லோ, அல்லது ஒரே அடியில் உள்ள சீர்களின் இறுதி எழுத்துகள் ஒன்றி வந்தாலும் அஃது இயைபு எனப்படும்.
இப்பாடலில் அடிஇயைபு பயின்று வந்துள்ளது.
கடல்களாக்குவேன்
தென்றலாக்குவேன்
பேசுவேன்
வீசுவேன்
முரண் நயம்:
செய்யுளில் சொல் அல்லது பொருள் முரண்பட்டு நயம் பயக்கும் வகையில் அமைவது முரண் தொடையாகும். இப்பாடலில் இடம் பெற்றுள்ள முரண் தொடைச் சொல்
புயல் X தென்றல்
சந்த நயம்:
"சந்தம் தமிழுக்குச் சொந்தம்" இப்பாடலை ஏற்ற இசைக்கருவியுடன் இசைத்துப் பாடினால் பாடுவோர்க்கும் கேட்பவர்க்கும் இன்பம் பயக்கும் வகையில் மிகுந்த கவி நயத்துடனும், தாளநயத்துடனும், சந்த நயத்துடனும் கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார். இப்பாடல் சிந்துப்பா வகையைச் சார்ந்தது.
அணி நயம்:
இப்பாடலில் பாலையை முத்து பூத்த கடலாக்குவேன் என்றும், விண்மீனை காசாக்குவேன் என்றும் பாடியுள்ளார். பாலையை முத்து பூத்த கடலாகவும், விண்மீன்களைக் காசாகவும் உருவகப்படுத்தியுள்ளதால் இப்பாடலில் உருவகஅணி பயின்று வந்துள்ளது.
சுவை நயம்:
இப்பாடலில் இயற்கைப் பொருட்களை மாற்றம் செய்து இல்லாமையை அகற்றுவேன் என்று கவிஞர் கூறுவதால் இப்பாடலில் மருட்கைச் சுவை பயின்று வந்துள்ளது.
முடிவுரை:
''காலம் கவிஞனைக் கொன்றது; ஆனால் அவன் கவிதை காலத்தை வென்றது"
என்ற கூற்றிற்கு ஏற்ப கவிஞர் நா.காமராசன் இக்கவிதையில் கவிதைக்குரிய நயங்கள் எல்லாம் அமைத்து கவிநயங்களால் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மாணாக்கரே!
கேள்வியைக் கவனித்து எத்தனை நயங்கள் கேட்கப்பட்டிருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும் எழுதினால் போதுமானது.
( இயல் - 7 - மொழியை ஆள்வோம் - வினா பக் : 185 )
43 . அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி:
( PTA -2 )
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி தொழில் உவமையணி ஆகும்.
அணி விளக்கம்:
செய்யுளில் உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் மற்றொரு வாக்கியமாகவும் வந்து போல என்னும் உவம உருபு வெளிப்படையாக வந்து செய்யும் தொழிலோடு உவமை அமைவது தொழில் உவமையணி ஆகும்.
உவமை: அகலாது அணுகாது தீக்காய்வார்
உவமேயம்: வேந்தரைச் சேர்ந்து ஒழுகுபவர்
உவம உருபு: போல்க
குளிருக்காகத் தீக்காய்வார் தீயை விட்டு அகன்று செல்லாமலும் நெருங்கிவிடாமலும் இருப்பது போல் அரசர்களைச் சார்ந்திருப்பவர்கள் பக்குவமாக நடந்து கொள்ளுதல் வேண்டும்.
( இயல் - 6 -வாழ்வியல் - திருக்குறள் , வினா பக் : 162 )
( அல்லது )
சொற்பொருள் பின்வரும் நிலையணி : ( PTA - 4 ; SEPTEMBER - 2020 ; SEPTEMBER 2021 )
அணி விளக்கம்:
ஒரு செய்யுளில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து, தந்த பொருளையே திரும்பத் திரும்பத் தந்தால் அது சொற்பொருள் பின்வருநிலையணி என்று அழைக்கப்படும்
சான்று :
“ எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு “
சான்று விளக்கம்:
எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
அணிப்பொருத்தம்: இக்குறட்பாவில் “பொருள்” என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து செய்தி என்னும் ஒரே பொருளைத் தருவதால் இக்குறட்பாவில் சொற்பொருள் பின்வரும் நிலையணி இடம் பெற்றுள்ளது.
( இயல் - 6 -வாழ்வியல் - திருக்குறள் , உள்வினா பக் : 157 )
பகுதி – IV
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்
விடை தருக. 3 x 6 = 18
44. கவிஞர் சிற்பி தமிழின் சீரிளமையை வியந்து கூறும் விதம் : ( SEPTEMBER - 2021 ; MAY - 2022 )
தமிழே ஏற்ற துணை!
மாலையில் மறையும் கதிரவனின் ஒளியால் வானம் சிவந்தது போல, உழைக்கும் தொழிலாளர்களின் கைகள் சிவந்து, தோள்களில் வியர்வை முத்துமுத்தாய் தோன்றுகிறது. இதனை வியந்துபாட தமிழே ஏற்ற துணையாகும். உள்ளத்து உணர்வுகளைப் பாட தமிழே துணை!
உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளைக் கவிதையாக உருவாக்குவதற்கு முத்தமிழே துணை புரிகிறது.
வள்ளல்களை ஈன்று தந்த தாய்!
பாண்டியர் அமைத்த தமிழ்ச்சங்கத்தில் வீற்றிருந்த தமிழ், மொழியைப் போற்றி வளர்க்கும் பாரி போன்ற வள்ளல்களைத் தந்தாள்.
மீண்டுமந்த பழமை நலம்!
மொழியைப் போற்றும் புலவர்களும், வள்ளல்களும் கூடி தமிழை வளர்க்கும் பழமை நலம் மீண்டும் வரத் தமிழ்க்குயிலே கூவிடுக.
சிங்கம் போலச் சீறி !
கூண்டை உடைத்துக் கொண்டு சீறிப்பாயும் சிங்கம் போலத் தமிழுக்கு ஏற்பட்ட தடைகளையெல்லாம் தகர்க்க பொதியமலையில் தோன்றிய தென்தமிழே சீறி வா! என்கிறார் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
( இயல் - 1 - இளந்தமிழே - வினா பக் : 19 )
( அல்லது )
அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும்:
(PTA - 6 ; SEPTEMBER - 2020 ; SEPTEMBER - 2021 ; MAY - 2022)
மனித வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையாய் அமைவது அறிவு. இதனை நன்குணர்ந்த வள்ளுவர் அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் அறிவின் சிறப்பினை விரிவாக எடுத்துரைக்கிறார்.
அறிவின் சிறப்பு:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி மட்டுமன்றி, பகைவரால் அழிக்க முடியாத மனத்தினுள் அமைந்த பாதுகாப்பு அரணும் ஆகும்.
அறிவின் இலக்கணம்:
வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும் அறிவு பலவகையாகக் காணப்படுகிறது என்பதை, மனத்தினை அது செல்லுகின்ற வழியிலெல்லாம் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
எச்செய்தியை எவர் ஒருவர் கூறக் கேட்டாலும் அச்செய்தியின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிவது அறிவாகும்.
உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வது அறிவாகும் என்னும் குறள்களின் மூலம் வள்ளுவர் விளக்குகிறார்.
அறிவின் மேன்மை:
நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கேற்ப வாழ்வது மட்டும் அறிவாகாது என்பதை மக்களுக்கு உணர்த்திட
"எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்"
பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் எதுவும் இல்லை என்னும் குறள் வழியாக விளக்குகிறார் வள்ளுவர்.
இவ்வாறு வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையாய் அமைவது அறிவு என்பதை வள்ளுவரின் குறள்வழியாக அறிந்தோம்.
( இயல் - 6 -வாழ்வியல் - திருக்குறள் - வினா பக் : 162 )
45.:"ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு" : ( SEPTEMBER - 2020 )
முன்னுரை:
காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில் திருச்சியும் ஒன்றாகும். இந்நகரம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
பெயர்க்காரணம்:
திருச்சிராப்பள்ளி என்ற பெயர் 'திரிஷிராபுரம்' என்ற வடமொழிச் சொல்லில் இருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. மூன்று சிரங்களைக் கொண்ட 'திரிசிரன்' சிவபெருமானை வழிபட்டு பலனடைந்ததாக இந்து சமயப் புராணங்கள் கூறும், 'சிறுத்த-பள்ளி' என்ற சொல்லில் இருந்து உருவாகியிருக்கும் என்று சி.பி. பிரவுன் எனும்
தெலுங்கு அறிஞர் கூறுகிறார். 16-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு -சிலா- பள்ளி (புனித பாறை ஊர்) எனக் குறிப்பிட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இது 'தென்னாட்டுக்கலை நகரம்' எனவும் அழைக்கப்படுகிறது.
வரலாறு:
தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று திருச்சி. கி.மு இரண்டாயிரமாண்டு காலத்திற்கு முந்தையது. முற்காலச் சோழர்களின் தலைநகராக கி.மு.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.3-ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர் தற்போதைய திருச்சியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாகும். கரிகால் சோழன் கட்டிய கல்லணை உறையூரில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.
பல்லவர்கள் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் இருந்து 6-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். அதன்பின் பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள். ஆட்சிக்குப் பின்பு விஜய நகரப் பேரரசின் கீழ் வந்தது. மதுரை நாயக்கர்களின் வழியில் வந்த இராணி மங்கம்மாள் திருச்சி மலைக் கோட்டைப் பகுதியில் கட்டிய அரண்மனை அரசு அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது.
நகரமைப்பு:
நகரத்தின் வடபகுதியில் தொழிற்பேட்டைகளும், வசிப்பிடங்களும் நெருக்கமாக அமைந்துள்ளன. நகரத்தின் தென்பகுதியில் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்துள்ளன. நகரைச் சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்துள்ளன. கோட்டைக்குள் அடங்கியுள்ள பழைய நகரம் திட்டமிடப்படாததாகவும் நெரிசல் மிக்கதாகவும் விளங்குகிறது. புதிய நகர்ப்புறப் பகுதிகள் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பல வீடுகள் தொன்மையான இந்து சமய கோவில் வடிவமைப்புகளுக்கான சிற்ப சாத்திரங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.
திருச்சிராப்பள்ளி 65 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 பகுதிகள் வீதம் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து:
தரைவழிப் போக்குவரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் 45, 45ஆ, 67, 210, 227 ஆகியவை திருச்சி வழியாகச் செல்கின்றன. இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன.
திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தென்னக இரயில்வேயின் ஆறுகோட்டங்களில் ஒன்றாகும். 1868-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சேவை நடைபெறுகிறது. சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரிய வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமாகும்.
கல்வி:
திருச்சியிலும் அதன்புறநகர் பகுதியிலுமாக 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. உள்ளன. சட்டப்பல்கலைக்கழகமும், பாரதிதாசன் பல்கலைக்கழகமும் வேளாண்மைக்கல்லூரியும் , மருத்துவக்கல்லூரியும் உள்ளது.
சுற்றுலாத் தலங்கள்:
திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், இராணி மங்கம்மாள் கொலு மண்டபம், முக்கொம்பு, கல்லணை, முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.
முடிவுரை:
மிகவும் புகழ்பெற்ற மலைக்கோட்டையைக் கொண்ட பண்பாட்டு நகரமாக விளங்கும் திருச்சி தமிழ்ப்பண்பாட்டினை உலகிற்கு எடுத்துச் சொல்லும்.
( இயல் - 5 - மதராசப் பட்டினம் -வினா பக் : 125 )
( பொருத்தமாக வேறு நகரங்களைப் பற்றி எழுதினால் மதிப்பெண் வழங்கவும் . )
( அல்லது )
நிருவாக மேலாண்மை குறித்து வெ, இறையன்பு கூறும் கருத்துகள் : ( PTA-3, 5, 6 ; SEPTEMBER -21 )
மனித இனமும் மேலாண்மையும்
மனித இனம் தோன்றியபோதே மேலாண்மையும் தொடங்கிவிட்டது. இயற்கையோடு இயையவும் இடர்களைத் தாண்டவும், சூழ்நிலையை எதிர்கொள்ளவும் மேலாண்மை அவசியம் தேவை. மனிதனுடைய மேலாண்மைப் பண்பு, எச்செயலையும் திட்டமிட்டுச் செய்வதில்தான் உள்ளது. ஏற்ற காலத்தை அறிந்து செயல்பட்டால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும். எது எந்த நேரத்தில் முக்கியம் என்று, சரியான முடிவெடுப்பதில்தான், வாழ்வின் வெற்றி அடங்கியிருக்கிறது.
நிருவாக மேலாண்மை
உயர் பதவியில் இருப்பவர் நிபுணத்துவம் பெற்றவராக இருப்பது சாத்தியமில்லை. ஆனால், இச்செயலைச் செய்து முடிக்கும் திறமைசாலி யார் என்று அறிந்து முடிவு எடுப்பதே, சிறந்த நிருவாக மேலாண்மை ஆகும். நாலடியார் கூறுவதுபோலக் கல்லாதவராக இருந்தாலும், கற்ற சான்றோருடன் சேர்ந்து பழகினால், நற்பண்புகள் நாளும் வளரும்; நிருவாக மேலாண்மை சிறப்படையும்.
நிதி மேலாண்மை
நிருவாகத்தில் வரவே, செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டிச் செலவு செய்பவர் அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்படுவர். ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ டைமன்’ நாடகத்தில், வரவைவிடச் செலவு அதிகம் செய்தால் , முடிவில் மனித இனத்தையே வெறுத்து ஒதுக்க வேண்டிய இழிநிலை அடைய நேரிடும் என்பது விளக்கப்பட்டது. ஔவையாரும் , “ ஆனமுதலில் அதிகம் செலவானால் , மானம் அழிந்து மதிகெட்டு அழிந்துபோவான்" என்று கூறியுள்ளார்.
மேலாள மேலாண்மை
மேலாண்மை என்பது, புத்தக அறிவுடன் முடிவதில்லை. உலகின் சூழல், நொடிக்குநொடி மாறிக் கொண்டே இருக்கிறது. பழமையான அனுபவம் கொண்டு, புதிய நெருக்கடியைச் சமாளிக்க முடியாது. செயலை முடிக்கச் செக்கு, மாடுகளாகிவிடும் அனுபவசாலிகளைவிடச் சீறிச் செயல்படும் ஜல்லிக்கட்டுக் களைகளே தேவைப்படும். ஒவ்வொரு நாளும் புதியது என எண்ணிச் செயல்படும் தன்மையே மேலான வேலாண்மையாகும்.
( இயல் - 7 இலக்கியத்தில் மேலாண்மை -வினா பக் : 184 )
46. சாலை விபத்தில்லா தமிழ்நாடு : ( PTA - 3 ; MARCH - 2020 )
சாலை வசதிகளும் விபத்துகளும்:
53 இலட்சம் கி.மீ சாலைகள், 21 கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன. ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய ஐந்து இலட்சம் விபத்துகள் நடக்கின்றன.
தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக இருக்கிறது.
சாலை வித்துகள் ஏற்படக் காரணங்கள்:
விபத்துகளுக்கு பெரும்பாலும் மனிதத்தவறுகளே காரணங்களாக அமைகின்றன.
முறையான ஓட்டுநர் பயிற்சியின்றி வாகனங்களை இயக்குவது.
இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வது.
இரண்டு பேருக்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது
கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது
சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்குவது.
போட்டி பந்தயம் எனச்சொல்லி, உச்ச வேகத்தில் ஓட்டுவது.
காதணிக்கேட்பிகள் பொருத்திக் கொண்டு ஊர்திகளை ஓட்டுவது.
தட்பவெப்பநிலை, இயந்திரக்கோளாறு, மிகுதியான ஆள்களையோ
சரக்குகளையோ ஏற்றிச்செல்லது.
தொடர்வண்டி இருப்புப் பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான சாலை விபத்துகள் நடைபெறுகின்றன.
சாலை விபத்துகளைத் தவிர்க்க, நாம் செய்ய வேண்டுவன:
சாலை விதிகள் மற்றும் விபத்துக்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
சாலைகளில் இடம்பெற்றிருக்கும் உத்தரவுக் குறியீடுகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் குறியீடுகளை அறிந்து அதற்கேற்ப வாகனங்களை இயக்க வேண்டும்.
சாலைச்சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.
தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும்.
மிகுவேகமாக ஊர்தியை இயக்கக் கூடாது.
சாலையில் விளையாடுவது, கவனிக்காமல் சாலையைக் கடப்பது. சாலையை
அடைத்துக் கொண்டு செல்லது, ஓடும் பேருந்தில் ஏறுவது இறங்குவது,
பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தவிர்க்க
வேண்டும்.
மோட்டார் வாகனச் சட்டத்தை அறிந்து, அதனை முறையாக கடைப்பிடித்தல்
வேண்டும்.
சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு:
18 வயது நிறைவடையாதோர் வாகனங்களை இயக்கக் கூடாது.
அபாயகரமான முறையில் ஊர்தியை இயக்கக் கூடாது.
மது குடித்து விட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது.
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்தியை இயக்கக் கூடாது.
ஊர்திகளுக்குக் காப்பீடு பெறுவது இன்றியமையாதது.
மேற்கண்ட அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ணி, நாம் செயல்படும்போது, 'சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு' உருவாகும்.
சாலை விதிகளை மதிப்போம்! நம் இன்னுயிரைக் காப்போம்!
( இயல் - 4 - பாதுகாப்பாய் ஒரு பயணம் -வினா பக் : 101 )
( அல்லது )
கோடை மழை' கதை வாயிலாக விளக்கப்படும் மனித நேயப் பண்புகள்: ( PTA .-1.2 ; MARCH - 2023 )
முன்னுரை:
தனது மகனும் மருமகளும் பேரக் குழந்தையைத் தவிக்க விட்டுச் சென்றபிறகு ஆறுமுகம் பொறுப்பு மிகுந்தவராக வயதான காலத்திலும் அந்தக் குழந்தைக்காக வாழவேண்டும் என்ற வைராக்கியம் மிகுந்தவராகக் காணப்பட்டார். குழந்தை என்ன பாவம் செய்தது என்ற சிந்தனை அவரிடம் இருந்தது.
மருத்துவமனையில் வெளிப்பட்ட மனித நேயம்:
அரைமணி நேரத்திற்கும் அதிகமாகக் குழந்தை அழுது கொண்டிருந்தாலும், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் குழந்தையைத் தோளில் போட்டபடி நின்ற போதும் ஆறுமுகம் கொஞ்சமும் மனம் தளரவில்லை. குழந்தையை விரைவாக மருத்துவர் பார்த்துவிட வேண்டுமென்றே விரும்பினார்.
வயதான முதியவர் இறந்ததற்காக அழும் குரல் கேட்டதும், அவருக்கு அவரது மகனின் நினைவு வந்தது. வருத்தம் மேலிட்டாலும் இந்த வாரிசுக்காகத் தான் வாழ வேண்டும் என்று பொறுமையுடன் வரிசையில் நின்று மருத்துவரைச் சந்திக்கிறார்.
மருந்து கடை ஊழியருடன் பேசிய பேச்சு
மருத்துவர் குழந்தையைப் பரிசோதித்துவிட்டு சாதாரண காய்ச்சல் என்று கூறி மருந்து எழுதிக் கொடுத்த சீட்டை மருந்துக்கடைக்காரர் பாபுவிடம் கொடுத்து, எப்படியாவது இக்குழந்தை வாழவேண்டும், என் ஆசையும் அதுதான், அக்குழந்தைக்காக நானும் உயிருடன் இருக்க ஆசைதான் என்ன செய்ய முடியும்? என் உடல்திலை ஒத்துழைக்கவில்லை' என்று அவர் கூறுமிடத்தில் தான் இறந்தாலும் குழந்தை மனநிறைவோடு நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று நினைக்கும் மனித நேயத்தையும் அவரது பொறுப்புணர்வையும் அறியலாம்.
குழந்தையைத் தத்துக் கொடுத்தல்:
பாபு ஏற்கனவே கூறியபடி குழந்தையைத் தத்தெடுக்க வந்தவர்களின் முகத்தைப் பார்த்ததும் ஆறுமுகத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏனென்றால் அவர்களின் முகங்களில் காணப்பட்டது ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு அத்தனையும் ஆறுமுகத்திற்கு ஆறுதலாக இருந்தது. தன் பேரக்குழந்தை பாதுகாப்பான இடத்திற்குத்தான் செல்கின்றது என்ற மகிழ்ச்சியும் இருந்தது.
உயிர் தந்த மனித நேயம்:
தத்தெடுக்க வந்த தம்பதியர்களின் மனிதநேயமே உயர் பண்பாகும். அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். குழந்தையைப் பிரிந்து நாம்தான் எப்படி இருக்கப் போகிறோமோ என்று ஏங்கிய ஆறுமுகத்திற்கு ஆறுதலாக இருந்தது தத்தெடுக்கும் ஆண் பேசிய பேச்சு உயிர் நேயத்தின் உயிர் மூச்சாக இருந்தது. "நீங்களும் எங்களுடன் வந்துடுங்கய்யா" என்ற வார்த்தையில் அடங்கிப் போனது கோடை மழை.
மனிதம் கொண்டாட வேண்டிய மனித நேயம்:
இவ்வுலகில் பிறக்கின்ற எல்லோரும் உறவுகளுடன் இறக்க வேண்டும். ஏதிலிக் குழந்தையைத் தத்தெடுத்த தம்பதியினர் குழந்தை பிரிந்தால் ஆறுமுகம் தனிமையாவார் என்பதை உணர்ந்து அவரையும் சேர்த்தே தத்தெடுத்து 'அநாதை' என்ற சொல்லை அகராதியில் இருந்து அழிக்கும் உயிர்நேயப் பண்பை 'கோடை மழை' கதை மூலம் உணர முடிகின்றது.
முடிவுரை
மனிதநேயம் இன்னும் மண்ணில் வாழ்கின்றது என்பதற்கு சாந்தா தத் எழுதிய 'கோடை மழை' மிகப்பெரிய சான்றாகும். பிற உயிர்களுடன் கொள்ளும் மனித நேயப் பண்பை நாமும் வளர்த்துக் கொள்வோம்.
( இயல் - 8 - கோடை மழை -வினா பக் : 213 )
பகுதி - V
47. அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = அ)காய்நெல்....... - எனத் தொடங்கும் பாடல்
காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
( இயல் - 7 - புறநானூறு பக் : 173 )
ஆ) ‘ என முடியும் திருக்குறள்: ( MAY -2022 )
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.
( இயல் - 3 - வாழ்வியல் - திருக்குறள் - செய்ந்நன்றியறிதல் , பக் : 74 )
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேனிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 📞9843448095
12 ஆம் வகுப்பு |தமிழ் | அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் 2023 | டிசம்பர் 2023 | சென்னை | QUESTION PAPER | DOWNLOAD FREE - CLICK HERE
12 ஆம் வகுப்பு |தமிழ் | அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் 2023 | டிசம்பர் 2023 |சென்னை | ANSWER KEY - FULL | DOWNLOAD FREE - CLICK HERE12 ஆம் வகுப்பு |தமிழ் | அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் 2023 | டிசம்பர் 2023 |கன்னியாகுமரி | ANSWER KEY - FULL | DOWNLOAD FREE - CLICK HERE
11th Standard| English| QUARTERLY EXAM QUESTION PAPER |SEPTEMBER 2023| ORIGINAL QUESTION PAPER | FREE DOWNLOAD | CLICK HERE
தமிழ் |11 ஆம் வகுப்பு|பாடக் குறிப்பேடு|இயல் 5| உரைநடை|செய்யுள்| ஆனந்தரங்கர் நாட்குறிப்பு| சீறாப்புராணம்|NOTES OF LESSON |CLICK HERE
தமிழ் |11 ஆம் வகுப்பு |பாடக் குறிப்பேடு |இயல் 4| துணைப்பாடம்|இனிக்கும் இலக்கணம் DOWNLOAD HERE
இயல் 4| பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்| |Power Point Presentation |PPT| DOWNLOAD HERE
முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 2 -👇👇👇👇👇DOWNLOAD HERE
12 ஆம் வகுப்பு | தமிழ் | இயல் 2 | செயல் திட்டம் | மாணவர் செயல்பாடு | வெள்ளப் பெருக்கின் தாக்கங்கள்| திரட்டு வைப்பேடு | STUDENTS ACTIVITITY | PROJECT | ALBUM | DOWNLOAD HERE
12th TAMIL | இயல் 2| பெருமழைக்காலம் | பிறகொருநாள் கோடை | நெடுநல் வாடை | பாடக்குறிப்பேடு | NOTES OF LESSON | DOWNLOAD HERE
இயல் 1,2,3 | இலக்கணம் |மொழிப்பயிற்சி | 2 மதிப்பெண் வினா விடைகள் | DOWNLOAD HERE
முதல் இடைத்தேர்வு 2023 - மாதிரி வினாத்தாள் 1 -👇👇👇👇👇DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 1 | DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 2 | DOWNLOAD HERE
12th தமிழ் | மாதத் தேர்வு | இயல் 1 | அலகுத் தேர்வு - 2023| மாதிரி வினாத்தாள் - 3 | DOWNLOAD HERE
12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL