12thTamil - Study Material - Reduced syllabus - 6 MARK-BOOKBACK Questions &Answers(2021) -Unit 1to8 -12th தமிழ் - 6 மதிப்பெண் புத்தக வினாக்கள்
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெற இருக்கின்ற திருப்புதல் தேர்வுக்கான தயாரிப்புக்கு ஆயத்தம் செய்யும் விதத்தில் நமது பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய எட்டு இயல்களில் இந்த ஆண்டு தேர்வுக்கு வருகின்ற பகுதியில் இருந்து மட்டும் புத்தக வினாக்கள் இங்கு தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.
அத்தனை கேள்விகளுக்கும் சுருக்கமாக விடைகளும் தரப்பட்டுள்ளன. நீங்கள் இந்த விடை பகுதியைப் படிப்பதன் மூலம் புத்தகத்தில் இருக்கின்ற 6 மதிப்பெண் கேள்விகள் அத்தனையுமே நீங்கள் கற்று விடலாம், நீங்கள் கற்ற இந்தக் கேள்விகளை எழுதிப் பார்த்து அதற்கான விடைகளைத் திருத்தம் செய்து கொள்ளுங்கள் இந்தக் கேள்விகளுக்கான விடை குறிப்புகளும் உங்களுக்குத் தரப்படுகின்றது. பாருங்கள் வினாக்களையும் விடைகளையும்...
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி
12 ஆம் வகுப்பு
2021 - 2022
பொதுத்தமிழ்
6 - மதிப்பெண் வினா விடைகள்
இயல் - 1
1.கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.( செய்யுள் )
கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளில்
ஒலிக்கோலங்கள்
சொற்புலம்
தொடரியல் போக்குகள்
ஆகியவை மிக முக்கியமானவையாகும்.
ஓலிக்கோலங்கள்:
இசையோடும் இசைக்கருவியோடும்தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்.
ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப் பின்னல்) என்பர்.
வன்மை உணர்ச்சியை வெளிப்படுத்த பாடல்களில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம்பெறும்.
இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்.
சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்ப வரும்
தன்மையும் பாடல்களில் இடம்பெறும்.
சொற்புலம்:
உணர்வும், பொருளும், கலையும், பண்பாடும், வரலாறும், அரசியலும் சொற்களில் பொதிந்து கிடக்கின்றன.
ஒரு பொருள் குறித்து வரும் பல சொற்களும், பல பொருள் குறித்து வரும் ஒரு சொல்லும் சொல் வளத்திற்குச் சான்று.
பல்வேறு துறைகள், சூழல்கள், புனைவுகளுக்கும் உரிய வகையில் உணர்வும் தெளிவும் கொண்டதாகச் செழிப்பானதொரு தளத்தைச் சொல் கொண்டிருக்கிறது.
தனிச்சொல்லாகவும், தொகை மொழியாகவும் சொற்கள் இயங்குகின்றன.
தொடரியல் போக்குகள்:
பாடலின் தளத்தை முழுமையடைய செய்வது தொடரியல் போக்காகும்.
சொல்பவனுடைய மொழித்திறனை, கேட்பவன் அல்லது வாசிப்பவன் முழுமையாகப் பெற வேண்டும்.
சொல்லப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள்
i) நேர் நடந்தும்
ii) ஏறியிறங்கியும்
III) திரும்பியும் சுழன்றும் - இயங்கும்
இவையே கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் ஆகும்.
2.பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க. ( துணைப்பாடம் )
மொழிப்பற்று:
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார்.
நெல்லையப்பரிடம் அவர் கூறும்போது, 'நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்ளவேண்டும்' என்று கூறுகின்றார்.
புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி அளிக்கப் பெற்று வளர வேண்டும்.
தாய் மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும்.
பிறநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக் கொள்ள முயலவேண்டும்.
புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.
சமூகப்பற்று
சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும்.
ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும்.
"ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள், அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை", என்கிறார்.
பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார்.
பெண்ணை வீட்டுக்குள்ளே அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார்.
சமூகம் வளர்ச்சி அடையத் தொழில் பெருக வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும் தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார்.
சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பு+மி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும்.
நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும்
அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.
3.தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவவற்றைத் தொகுத்து எழுதுக. ( செய்யுள் )
எனது அருமைச் செந்தமிழே!
மாலை நேரத்துச் சிவந்த நிறமுள்ள சூரியன், மலை முகட்டில் தனது தலையைச் சாய்க்கின்றான். அப்போது அவனுடைய செம்மஞ்சள் நிற ஒளிபட்டு வானம் பூக்காடு போலக் காட்சியளிக்கிறது. அதுபோல அன்றாடம் அயராது உழைக்கும் உழைப்பாளர்களின் கரங்கள் சிவந்துள்ளன.
அத்தகைய தொழிலாளர்களின் பருத்த தோள்கள் மீது வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் அரும்பியுள்ளன. இவற்றையெல்லாம் வியந்து பாடுவதற்கு, உன்னைவிடப் பொருத்தமான துணை வேறில்லை.
முத்தமிழே!
எமது உள்ளத்தில் மூண்டு எழும் கவிதை வெறிக்கு நீயே உணவாக இருக்கிறாய்! முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னர்கள் அமைத்த தமிழ்ச்சங்கத்தில் நீயே அரசாட்சி புரிந்தாய்.
பாரி முதலான கடையெழு வள்ளல்களை எமக்குத் தந்தாய். எமது உடல் சிலிர்ப்படையுமாறு மீண்டும் அத்தகைய பழமைச் சிறப்பைப் புதுப்பிப்பதற்காகத் தமிழ்க் குயிலாக நீ கூவ வேண்டும்.
தென்றல் தவழும் பொதிகை மலையில் தோன்றி வளர்ந்த தமிழே! தடைகள் இருந்தால் தாண்டி, கூண்டை உடைத்து வெளிப்படும் சிங்கம்போல நீ சீறிவர வேண்டும்.
இவ்வாறாகத் தமிழின் சீரிளமைத்திறத்தினை வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.
4."சொல்லோவியங்கள்" என்னும் கவிதை நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி, நன்றியுரை எழுதுக.
சொல்லோவியங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா
இடம்: அரசு மேனிலைபபள்ளி, நாள்: 19.06.2019, புதன்கிழமை
சிவகங்கை. நேரம்: பிற்பகல் 2 மணி
நிகழ்ச்சி நிரல்
இறைவணக்கம் : மாணவர்கள்
தமிழ்த்தாய் வாழ்த்து : மாணவர்கள்
வரவேற்புரை : திரு.மு.முரளி
(தமிழாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி,
சிவகங்கை)
வாழ்த்துரை : திரு.ச.சரவணக்குமார்
(தலைமையாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி,
சிவகங்கை)
நடனம் : மாணவர்கள்
சொல்லோவியங்கள் நூல் அறிமுக உரை : திரு.ப.நன்மாறன் அவர்கள்
(எழுத்தாளர்)
நூல் வெளியீடு : சொல்லோவியங்கள் கவிதை நூல்
வெளியிட்டு வாழ்த்துரை : திருமிகு.அ.கோபிநாத் அவர்கள்,
: (மாவட்டக் கல்வி அலுவலர், விழுப்புரம்)
முதல் பிரதியைப் பெற்றுக் கொள்பவர் : திருமிகு.தா.வேலவன் அவர்கள்,
(தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர்)
நூலாசிரியர் உரை : திரு.கவிஞர் ச.நல்லதம்பி அவர்கள்
(முதுகலைத் தமிழாசிரியர், அரசு
மேனிலைப்பள்ளி, சிவகங்கை)
தலைமை உரை : திருமிகு.ச.இளவழகன் அவர்கள்
(எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்,
தேசிய விருது பெற்றவர்)
விழிப்புணர்வுப் பாடல்கள் : மாணவிகள்
நன்றியுரை : திரு.இரா.கலைச்செல்வி
(உதவித் தலைமையாசிரியை, அரசு
மேனிலைப்பள்ளி, சிவகங்கை)
தேசியகீதம் : அனைவரும்
நன்றியுரை
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று"
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்!
இன்று நம் பள்ளியில் நடைபெறும் இவ்விழா மிக முக்கியமான விழாவாகும். ஒரு பேனா தலை குனியும் போது, ஒரு சமூகம் தலைநிமிரும் என்பார்கள். இன்று நம் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் எழுதி வெளியிட்டுள்ள சொல்லோவியங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமையேற்று இனிய தலைமையுரை தந்து எழுத்துகளின் வலிமையை இச்சமூகம் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்திய தேசிய விருது பெற்ற எழுத்தாளர் திருமிகு.ச.இளவழகன் அவர்களுக்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் மனமகிழ்வுடன் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிய நம் கல்வி மாவட்ட அலுவலர் திருமிகு.அ.கோபிநாத் அவர்கள் மாணவர்கள் நூற்களை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கருத்தைத் தன் வாழ்க்கை அனுபவத்தோடு எடுத்துக் கூறி, இந்நூலை எழுதிய நம் பள்ளி ஆசிரியரை வாழ்த்தினார் அன்னார்க்கும் நம் அனைவரின் சார்பாகவும் மனமகிழ்வான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர் நம் பள்ளியின் மீது அதிக அக்கறை கொண்டவரும் நமது பள்ளியின் புரவலருமான தொழிலதிபர் திருமிகு.தா.வேலவன் அவர்கள். நல்ல செயல்கள் நடந்தால் அதனை ஊக்குவிக்கும் நல்ல குணம் படைத்தவர் அவர்களுக்கும் நம் அனைவரின் சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சொல்லோவியங்கள் கவிதை நூலில் சொல்லப்பட்ட கருத்துகளை எளிமையாகவும் இனிமையாகவும் எடுத்துச் கூறி நல்ல முறையில் நூலை அறிமுகம் செய்தவர் எழுத்தாளர் ப.நன்மாறன் அவர்கள், சமூகத்திற்கு உதவும் வகையில் எழுதிவரும் அன்னாரின் அறிமுக உரை இப்புத்தகத்தை நாம் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தந்துள்ளது. இவ்விழாவில் கலந்து கொண்ட அவருக்கும் நம் அனைவரின் சார்பாகவும் மன நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு நூலை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பது அனைவரும் அறிந்ததே. சமூக மாற்றத்திற்கு வழி காட்டும் அருமையான கருத்துகளைத் தன் எண்ணத்தில் இருந்து எழுத்துகளாக்கிய நம் பள்ளி முதுகலைத் தமிழாசிரியரும், சொல்லோவியங்கள் கவிதை நூலின் ஆசிரியருமான திரு.ச.நல்லதம்பி அவர்களுக்கு நம் அனைவரின் சார்பாகவும் கரவொலியுடன் கூடிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மேல் அளவற்ற பாசம் கொண்ட நம் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்கள் நம் அனைவரையும் பல்வேறு வழிகளில் ஊக்கப்படுத்தி, திறமைகளை வளர்த்திட உதவி செய்து வருகின்றார்கள். இந்நிகழ்வில் நம் பள்ளி ஆசிரியரை வாழ்த்தியுள்ளார்கள். நம் பள்ளித் தலைமையாசிரியர்க்கு நம் அனைவரின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அனைவரையும் வரவேற்ற ஆசிரியர் திரு.ச.சரவணக்குமார் அவர்களுக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.
இவ்விழாவில் இறைவணக்கம், நடனம், விழிப்புணர்வுப் பாடல் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மாணவர்கள் அசோக் மற்றும் ரூபன் ஆகியோருக்கும் நன்றி.
இவ்விழாவினைக் கண்டு மகிழ்ந்த இருபால் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நன்றி கூறி என் நன்றியுரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி!வணக்கம்!
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
இயல் - 3
1.'குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது' எவ்வாறு? விளக்குக. ( உரைநடை )
குடும்பம்:
தலைவன் தலைவி இணைந்து குழந்தைகளுடனோ, குழந்தைகள் இல்லாமலோ இணைந்து வாழ்ந்து வரும் அமைப்பே குடும்பமாகும்.
மனித சமூக அமைப்பை ஒப்பிடும்போது குடும்பம் என்பது மிகவும் சிறிய அமைப்பாகும்.
இந்தச் சிறிய அமைப்பில் இருந்துதான் மனித சமூகம் என்ற பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
இவ்வமைப்பிற்கு அதன் இயங்குநிலைக் கருத்தாக்கத்தின் மூலமே 'குடும்பம்' என்ற பெயர் வந்தது.
மனிதன் ஒரு சமூக உயிரி:
மனிதன் ஓர் உயிரியல் விலங்கு மட்டுமல்ல அவன் ஒரு சமுதாய விலங்காவான்.
மனிதர்கள் தங்கள் வாழ்வில் பெரும்பகுதியைக் குடும்பத்தில்தான் செலவிடுகின்றனர்.
குடும்பமே மக்களின் உயிரியல், உளவியல், வாழ்வியல் சார்ந்த அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்கிறது.
குடும்பத்தில் வாழ்வோர் உயிரியல் பிணைப்புகளை மட்டும் கொண்டவர்களாக இல்லாமல் சமுதாயப் பிணைப்புகளையும் கொண்டவர்களாக இருப்பதே மனித சமூகக் கட்டமைப்பிற்கான அடித்தளமாக இருக்கிறது.
குடும்பம் சமூகத்திற்கான களம்:
குடும்பம் தனிமனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது.
மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச் செயல்கள், கல்வி பெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன.
சமூகத்தின் பண்பாட்டைக் குழந்தைப்பருவத்திலே குடும்பம் கற்றுக் கொடுக்கின்றது.
சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றபட வேண்டியப பழக்கவழகங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள் சமுதாய சமய வாழ்வில் ஆற்றவேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படுகின்றது.
பண்பாட்டு மயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரிக் குழுவாகக் செயல்படுகின்றனர்.
குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் அனைவருக்கும் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும கொண்ட ஒரு சிறந்த சமூதாயம் அமைய அடிப்படையாக விளங்குகின்றது.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்துதான் 'மனித சமூகம்' என்னும் பரந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பு ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டாமல் 'மனித சமூகம்' என்ற பரந்த அமைப்பு சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.
2.பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன் பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக. ( செய்யுள் )
இராமன் அனைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பண்பின் அடையாளமாக விளங்குகின்றான். தந்தை, தாய் மீதான அன்பு, உடன்பிறப்புகள் மீது அன்பு ஆகியவற்றை எல்லைகள் அனைத்தையும் கடந்து இராமன் விரிவுபடுத்துகிறான். வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வேலிகள் அவன் அன்பிற்குத் தடையாக இருக்கவில்லை.
மகன் என்ற உறவு நிலை:
சீதையை இராவணன் சிறை எடுத்துச் சென்றபொது அதனைத்தடுத்து இராவணனுடன் போரிட்டு, காயமடைந்து பின் உயிர் துறந்தான் சடாயு.
இதனைக் கேள்விப்பட்ட இராமன் மிகுந்த வருத்தமடைந்தான்.
தன் தந்தை தசரதனின் நண்பனான சடாயுவைத் தன் தந்தையாகக் கருதி, தந்தைக்கு மகன் செய்யும் இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்தான்.
தன்னையே நினைத்துத் தவம் செய்து கொண்டிருந்த எளிய முதியவளான சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.
அவள் இராமனைப் பார்த்ததால் தான் மேற்கொண்ட தவம் பலித்தது என்று கூறி இனிய உணவினை விருந்தாகப் படைத்தாள்.
அவள் அன்பில் மனம் மகிழ்ந்த இராமன் தன் தாயாக அவளை நினைத்து. மகன் தாய்க்குச் செலுத்தும் அன்பைச் செலுத்தினான்.
உடன்பிறப்பு என்ற உறவுநிலை:
தன்மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்த குகன். தன்னைப் பிரிய மனமில்லாமல் வருந்துவதை இராமன் அறிகின்றான்.
இராமன் குகனிடம் "முன்பு உடன் பிறந்தவர்கள் நான்குபேராக இருந்தோம். இப்போது உன்னையும் சேர்த்து ஐந்து பேராக உள்ளோம்" என்றான்.
இலங்கை சென்ற இராவனனுடன் கடும்போர்புரிந்து திரும்பிய சுக்ரீவனின் செயலைக் கண்டு வியந்த இராமன் சுக்ரீவனிடம் நீ வேறு நான் வேறல்ல என்று கூறுகின்றான்.
சீதையைக் கவர்ந்து வந்த இராவணனின் செயலைக் கண்டித்தான் வீடணன். இராவணன் அவனைக் கடிந்து கொண்டதால் இலங்கையை விட்டு வெளியேறிய வீடணன் இராமனிடம் அடைக்கலமானான்.
வீடணனுக்கு இலங்கையை ஆளும் உரிமையைக் கொடுத்ததுடன் அவனையும் தன் உடன்பிறப்பாக இராமன் ஏற்றுக் கொள்கின்றான்.
இவ்வாறாக இராமன் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய் மீது அன்பு கொண்ட சேயாய், உயிர்தரும் நண்பனாய், உரிமையை வழங்கும் உடன்பிறப்பாய் பிற உயிர்களுடன் உறவு கொண்டிருந்தான்.
3.'உரிமைத்தாகம்' கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்…… கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க. ( துணைப்பாடம்)
கதைச்சுருக்கம்:
பூமணி அவர்கள் இயற்றிய 'உரிமைத்தாகம்' என்னும் கதையில் வெள்ளைச்சாமி தன் அண்ணனுக்குத் தெரியாமல் தன் வேளாண் நிலத்தை, பங்காரு சாமியிடம் இருநூறு ரூபாய்க்கு அடகு வைக்கிறான். அதை அவனது அண்ணன் முத்தையனிடம் அவனது மனைவி மூக்கம்மா கூறுகிறாள். தம்பியிடம் மனவருத்தத்தில் பேசாமல் இருந்தாலும் பாசத்தினால் அவனது நிலத்தை மீட்க பங்காரு சாமியிடம் சென்று நிலத்தை மீட்க இருநூறு ரூபாயைக் கொடுக்கும் போது அவர் நானூறு ரூபாய் என்று பொய் சொல்கிறார். எனவே சகோதரர்கள் இருவரும் இணைந்து பங்காரு சாமியிடம் சண்டையிடுகின்றனர்…..
இரு சகோதரரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்……
கதை தொடர்கிறது…….
'என்னத்த சொல்ல உங்க தம்பி நிலத்த அடகு வச்சிருக்காராம்….. வீட்டில் ஒரே சண்டையா இருக்குது…. என்ற மூக்கம்மாவின் பேச்சிற்குக் கொஞ்சமும் காது கொடுக்காமல் முத்தையன் தன் வேலையிலே மும்முரமா இருந்தான். என்னது நான் சொல்லுறது காதுல விழுறதா! என்ற மனைவியின் பேச்சுக்கு இப்ப என்ன கொறஞ்சு போச்சு, நம்ம பேச்சக் கேட்காம போனவன்தானே, அவன் எப்பாடு பட்டா நமக்கென்ன, நமக்கு இருக்கிற க';டத்தில் இது வேறபா?
இந்த வெள்ளச்சாமி பையன் கொஞ்சமாவது பொறுப்போட நடக்கண்டாமா? அவன் என்ன பத்தியும் உன்ன பத்தியும் ஊருக்குள்ள என்னெல்லாமோ சொல்லிருக்கான்…. பட்டு அனுபவிச்சாத்தான் தெரியும்…. அவன் நிலத்த இழந்திட்டு நம்மகிட்ட திரும்ப வந்தாதான் நம்ம அருமை தெரியுமுன்னு சொன்ன, தன் கணவனைப் பார்த்து மூக்கம்மா பதில் எதுவும் பேசாமல் இருந்தாள்.
எதிர்வீட்டில் இருந்து வந்த சத்தத்தக் கேட்டு முத்தையன் துண்ட எடுத்துப் போட்டுகிட்டு வயலுக்குக் கிளம்பினான். பங்காருசாமி வெள்ளசாமிகிட்ட பேசியது அவன் காதுல கேட்டுட்டே இருந்தது. டே வெள்ளசாமி நீ கிரயம் எழுதிக்கொடுத்த நாள் முடிஞ்சாச்சி, என்ன பண்ணப் போற ஒண்ணு ரூவாவக் கொடு இல்ல நிலத்த எழுதிக் கொடு' என்ற வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன.
இரண்டு வாரம் கழிச்சு வெள்ளச்சாமியின் நிலத்த பங்காரு சாமி எழுதிவாங்கிட்டதையும், அதனால வெள்ளச்சாமியின் மனைவி கோபப்பட்டுட்டு அவ அப்பா வீட்டுக்குப் போய் விட்டதாகவும், வெள்ளச்சாமி இப்போது கூலிக்கு எங்கேயோ போவதாக மூக்கம்மா கூறிய வார்த்தைகளக் கேட்ட முத்தையாவின் உள்ளம் துடித்துடித்தது….. அப்படியே வீட்டின் மேற்கூரையை வெறித்துப் பார்த்தபடி முத்தையன் நின்று கொண்டிருந்தான்.
இயல் - 4
1. கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க. ( செய்யுள் )
கவிதை:
கவிதை என்பது சொல்லைச் சிறந்த முறையில் தேர்வு செய்து எதுகை மோனை அமைத்து இயற்ற வேண்டும்
எழுதப் போகும் பாவகைக்கு ஏற்ற அடியளவு தெரிந்து கவிதை எழுத வேண்டும்.
சொற்களைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய இடங்களில் வைத்து கவிதையினை உருவாக்குதல் வேண்டும்.
கவிதைக்குரிய உறுப்புகள்:
எழுத்துகளைக் கொண்டு சிறந்த அசைகளை உருவாக்குதல் வேண்டும்.
அசைகளைக் கொண்டு சீர்களை அமைத்தல் வேண்டும்.
சீர்களை முறையாக அமைத்தால் இரண்டு சீர்களுக்கு இடையே அந்தந்தப் பாக்களுக்குரிய தளைகள் தோன்றும்.
அந்தந்தப் பாவிற்குரிய முறைகளின்படித் தளைகளை அமைத்தால் கவிதையில் தவறுகள் தோன்றாது.
தளைகளை முறைப்படி கோர்த்தோம் என்றால் அடிகள் உருவாகும் அடிகளை ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தோம் என்றால் தொடைகள் உருவாகும்.
அதிக தொடைநயங்களோடு ஒரு கவிதை இருந்தால் அது சிறந்த கவிதை என்றழைக்கப்படும்.
சிறந்த கவிதை:
கவிதைகளுக்குரிய உறுப்புகளை வைத்து கவிதை எழுதினால் கவிதையின் உறுப்புகளாகிய சீர்களில் மாச்சீரையும், விளச்சீரையும் பயன்படுத்தினால் எழுதப்படும் பாடல்களில் தேமா, புளிமா காய்த்துவிடும்.
சீர்கள் தவறாக அமைக்கப்பட்டால் பாடல்கள் தவறாக மாறிவிடும்.
செடியில் பூத்த பூவில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் தேடி வருவது போலச் சிறப்புடன் எழுதிய பாடல்வரிகளைத் தேடிக் கற்றோர் வருவர்.
அப்பாடலைப் பாடிய புலவனுக்கும் புகழ் உண்டாகும்.
2.பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.(உரைநடை)
பண்டைக்காலத்தில் மன்றமென்றும் அம்பலமென்றும் அழைக்கப்படும் மரத்தடியில் உள்ள திண்ணையிலே கற்றல் கற்பித்தல் பணி இயற்கையோடு நடந்தது.
கல்விப்பயிற்சிக்காக வரும் மாணாக்கர்களிடம் ஏட்டின் மீது மஞ்சள் பூசிப் பூசித்து மாணாக்கர்களிடம் வாசிக்கச் சொல்வர் இதனை அகூராப்பியாசம் (எழுத்து அறிவித்தல்) என்பர்.
ஆசிரியர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்ல வேண்டும்.
ஆசிரியர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்லும் 'முறை வைப்பு' முறையில் கற்பித்தல் நடைபெற்றது.
'மையாடல் விழா' மூலம் மாணாக்கருக்கு எழுத்துகளை எழுதும் முறையை ஆசிரியர் கற்றுக் கொடுப்பார்.
ஆசிரியர் முதலில் தரையில் எழுத அதன்மேல் மாணாக்கர் எழுதுவர். இவ்வாறு எழுத்துகளைக் கற்பித்தனர். மாணாக்கரும் எழுத்துகளை வரிசையாகவும், நன்றாகவும் எழுதக் கற்றுக் கொண்டனர்.
பழைய காலத்தில் எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஓட்டாமல் வரிகோணாமல் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர்.
புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.
தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியன மூலமாகவும், ஆத்திசூடி கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்கள் மூலமாகவும் மனனம் செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தனர்.
கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூலம் கற்பித்தல் நடைபெற்றது.
எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் வரும் முறையும் இருந்தது.
சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையையும் கற்றுக் கொடுத்தனர்
மாணாக்கர்கள் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர்.
ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள்.
கற்றல் கற்பித்தலில் முக்கியமாக விளங்கிய வாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது.
அரசவையில் கூட வாதுபுரியும் அளவிற்குக் கற்றல் முறைகள் இருந்தன.
பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.
"வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இகக்கும்" - (நன்னூல் - 41)
ஞாபக சக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள்.
இவ்வாறு மாணவனின் எல்லா திறமைகளையும் வளர்க்கும் விதமாகக் கற்பித்தல் இருந்தது. மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
இயல் - 5
1."கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன" - இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க.(துணைப்பாடம்)
இந்தியாவின் முதுகெலும்பு கிராமமாகும். அழகியல் தன்மையோடு விளங்கும் கிராமங்கள் இன்று தங்கள் அழகியலை இழந்து கிராமத்திற்கே உரிய இலக்கணங்களை இழந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தமது வடிவழகையும் இழந்து வருகின்றன.
வாழ்வோடு இணைந்த கிராமம்:
அதிகாலையில் எழும்பி வீட்டு முற்றத்தைத் தூய்மை செய்து, கோலமிட்டுக் கடவுளைத் தொழுது குதுகலாமாகப் பொழுதினைத் தொடங்கும் வாழ்க்கை கிராம மக்களின் வாழ்வோடு இணைந்திருந்தது. ஏலேலோ பாடும் கிராமத் தென்றலில் தாலேலோ பாடி விவசாயம் செய்த காலம் மலையேற, கணினியில் கானல் நீராய் நம் கிராம மக்களின் வாழ்க்கையும் கரைந்தது. அந்தந்த கிராமத்தில் விளைந்ததை அங்கங்கே தின்று வாழ்ந்த காலத்தில் எந்த நோய்களும் தலை தூக்கியதில்லை.
அழகை இழக்கும் கிராமங்கள்:
இன்று பெருகி வரும் நகர்ப்புற நாகரிகத்தினால் கிராமங்கள் தங்கள் அழகை இழக்கின்றன. பாடித் திரிந்த பறவைகளின் ஒலிகள் இப்போது கேட்க முடியவில்லை. மனிதன் நகர்ப்புற நாகரிகத்தை நாடியதால் குளங்கள் குடியிருப்புகளாக மாறிவிட்டன. அகன்ற தெருக்களெல்லாம் தங்கள் இருப்பைச் சுருக்கிக் கொண்டன. கலாச்சார மாற்றங்களால் கூரை வேயப்பட்ட, ஓடுகளால் நிரம்பிய வீடுகள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தீப்பெட்டி போல மாற்றம் பெற்றுள்ளன. எல்லோரும் நீர் இறைக்கும் ஊர்க் கிணறு கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது.
முகவரி இழக்கும் கிராமங்கள்:
கிராமங்களுக்கே உரித்தான நாட்டுப்புற விளையாட்டுகளை எல்லாம் இன்றைய அலைபேசிகளும், முகநூல்களும், புலனங்களும் முடக்கி விட்டன. பச்சைப்பசேலன வளர்ந்து நிற்கும் நெற்பயிரை இன்று காணமுடியவில்லை. உழுது உணவைத் தந்த வயல்கள் எல்லாம் இன்று குடியிருப்புகளுக்காக அளக்கப்பட்டு எல்லைக் கற்களால் பிரிக்கப்பட்டு வீடுகளாக மாற ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன.
நாகரிக மோகத்தால் அழியும் கிராமம்:
கிராமத்திற்கே உரிய அன்பும், விருந்தோம்பல் பண்பும், வெள்ளந்தியான பழக்கமும் இன்று கொஞ்சம் கொஞ்சமாகத் தனது இயல்பை இழந்து வருகின்றது. கிராம மக்கள் நகர்ப்புற நாகரிகத்தின் மீது கொண்ட மோகத்தால் இயற்கையை இழந்து நகர்ப்புறம் தேடி வருவதும், ஊடகத்தாக்கமும், சமூக வலைத்தளங்களின் தாக்கமும் இயல்பான கிராம வாழ்க்கையை மாற்றி விடுகின்றன. ஒன்றுக்குள் ஒன்றாக உறவுகளாக இருக்கும் கிராம மக்கள் இன்று நாகரிக மோகத்தால் உறவுகளை மேம்படுத்தும் செயலில் இருந்தும் விலகி விடுகின்றனர்.
இவ்வாறாக அமைதியான சூழலில் அன்பாக வாழ்ந்து வந்த கிராம மக்கள் தங்கள் இயல்பை மாற்ற விரும்புவதால், தாங்கள் பழகிய, ஓட்டி உறவாடிய கிராமத்தை விட்டு நகர்ப்புறம் செல்வதால் கிராமங்கள் தங்கள் அழகியலை இழப்பதுடன் கிராமங்களுக்கே உரிய இயற்கைத் தன்மையையும் இழந்து தங்களது முகவரியைத் தொலைத்து நகர்புறச் சாயலுடன் புத்துருவாக்கம் அடைகின்றன.
2.சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்தகோட்டப் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப்படுகின்றன? (செய்யுள் )
மயிலாப்பூர்:
மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு, கோவில் திருவிழாக்கள். கோவில் ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று.
புகழைப் பறைசாற்றும் எழுச்சியே திருவிழாக்கள். அத்தகைய விழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை. மயிலை என்று அழைக்கப்படும் மயிலாப்பூர்.
இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை.
அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும்.
மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா விமரிசையாக நடைபெறுமென மிக அருமையாக மயிலாப்பூர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கந்தகோடடம்:
ஆன்மநேய ஒருமைப்பாட்டையும், சமய ஒருமைப்பாட்டையும், ஒளி வழிபாட்டையும் முன்வைத்துச் சீர்திருத்தச் சிந்தனையை உருவாக்கி, இவ்வுண்மை நெறியை வளர்த்தவர் வள்ளலார்.
வள்ளலாரின் சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது கந்தகோட்டம்.
இராமலிங்க அடிகள், சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டி தெய்வமணிமாலை என்னும் பாமாலையைப் பாடியுள்ளார்.
அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே! அம்மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே! ஒருநெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.
உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும். என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும்
ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியே. இத்தகைய சிறப்புகளை நீ எனக்கு அருள்வாயாக என இராமலிங்க அடிகள் கந்தகோட்டத்து இறைவனிடம் வேண்டுவது மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
இயல் - 6
1.மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக. ( துணைப்பாடம் )
பிறவிக் கலைஞர்:
'நடிகர் திலகம்' என்ற இக்கட்டுரையை எழுதிய சுள்ளிக்காடு பாலசந்திரன் சிவாஜி கணேசனைச் சந்திக்க ஒருமுறை அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். இதுவரை திரையில் மட்டுமே பார்த்த உருவத்தை நேரில் பார்க்க போகிறோம் என்ற ஆவலில் இருந்தார். சிவாஜி நடந்து வந்த காட்சியை அப்படியே விவரிக்கிறார். "கைகள் வீசி, பார்வை இமை அசையாது, மெல்ல மெல்ல சிங்க நடை நடந்து வரும் அந்த மகாநடிகனைப் பார்த்த பொழுது இராஜராஜசோழன் வருகையைப் போலவே இருந்துத" என்று குறிப்பிடுகிறார். இது நடிப்பன்று, இயல்பு, இயல்பான நடையே இத்தகைய கம்பீரத்தால் இருப்பதால் அவரைப் பிறவிக் கலைஞர் என்று சொல்வது பொருத்தமே என்று பாலசந்திரனின் மனம் நினைத்தது.
இளமையும் நடிப்பும்:
மாபெரும் நடிகனின் படத்திற்காகத் தெருதெருவாகக் கூவிய பாலசந்திரன் இன்று நேரடியாக அந்நடிகரைக் கண்டபோது அவரது இளமையும் நடிப்பும் அவர் கண்முன் நிழலாடின. சின்னையா கணேசன் பின்னாளில் 'இமயம்' 'நடிப்புப் பல்கலைக்கழகம்' என்று அழைக்கப்பட்டவர் தன் தந்தையைத் தனது ஒன்பதாவது வயதில்தான் முதல்முதலாகப் பார்த்திருக்கிறார். பள்ளிக்கூடம் செல்லாத அவர் ஐந்து வயதாகும் போதே குடும்பச் சூழ்நிலை காரணமாக நாடகக் குழுவில் இணைந்தார் என்பதை அறிந்து பாலசந்திரன் ஆச்சரியப்பட்டார்.
எளிய மனிதர்:
திரையில் தோன்றும் அப்பெரிய நடிகரின் முன் உட்கார்;ந்திருப்பதை நினைக்கையில் பாலசந்திரன் பரவசமடைந்தார். எவ்வித பெருமிதமும் இல்லாமல் மிக எளிய மனிதராய் தங்களின் வருகையைக் குறித்து அவர் கேட்டறிந்ததும், தன்னுடன் வந்தவர் கேட்டதற்கிணங்க திரையில் சிங்கமாக கர்ஜித்த வீரபாண்டியன் கட்டபொம்மன் வசனத்தை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவந்து அதே வீரத்துடன் தங்கள் முன் நடித்துக் காட்டிவிட்டு, கட்டபொம்மன் நாடகத்தில் நடிப்பதே திருப்தியாக இருந்தது என்று உள்ளத்தில் உள்ளதைப் பகிர்ந்து கொண்டதும் பாலசந்திரன் நினைத்துப் பார்க்க முடியாத உண்மைகளாக இருந்தன.
பாராட்டும் பண்பாளர்:
மாபெரும் நடிகர், பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். உலகின் மிகப்பெரிய மனிதர்களிடம் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு மிகப்பெரிய நடிப்பு ஆளுமை தன்னுடைய இராவணன் வசனத்தைக் கேட்டு எழும்பி நின்று கைத்தட்டி வாழ்த்தியதை நினைத்து பாலசந்திரன் மிகவும் ஆச்சரியப்பட்டார். தன்னை ஒரு நடிப்பின் சிகரம் எனப் பாராட்டியதை அவர் தன் வாழ்வின் பெரும் பேறாகக் கருதினார். ஒரு மாபெரும் கலைஞன் மிகச் சாதாரணமாகத் தன்னைப் பாராட்டியதைப் பாலசந்திரன் வாழ்வின் பொன்னான நேரமாகக் கருதினார்.
விருந்தோம்பல் பண்பு:
தங்களை வரவேற்றதுடன் தங்களுடன் இணைந்து இரவு உணவு அவர் உண்டு, தங்களை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்த அம்மாபெரும் நடிகரைக் கண்ட பாலசந்திரன் எவ்வளவு பெரிய ஒரு நடிப்பு ஆளுமை இவ்வளவு எளிமையாக, இனிமையாகத் தன்னுடன் பேசியதை நினைத்து மனம் மகிழ்ந்தார். அவரது இல்லத்தை விட்டுப் பிரியும் போது அவருக்காகக் குரல் எழுப்பிய சிறு வயது பாலசந்திரன் அவரது நினைவில் வந்து சென்றான்.
2.உங்கள் ஊர்ப் பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக.
முன்னுரை:
கண்ணுக்குக் காட்சியையும், சிந்தைக்குக் கருத்தினையும் தருவன நிகழ்கலைகள். இவை மக்களுக்கு மகிழ்ச்சி என்னும் கனியைக் கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன. பழந்தமிழ் மக்களின் கலை. அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள் துணை செய்கின்றன. அவ்வகையில் எங்கள் பகுதியில் தெருக்கூத்துக் கலைஞர் ஒருவர் இருப்பதாக அறிந்து, அவரைச் சந்தித்தேன். அச்சந்திப்பின் தொகுப்பே இக்கட்டுரையாக மலர்கிறது.
பொருளுரை:
நான் சந்தித்த தெருக்கூத்துக் கலைஞரின் பெயர் மயில்வாகனன். அவர் வாயிலாகத் தெருக்கூத்து, அது ஆடப்படும் முறை, அதனை மீட்டெடுக்கக் காரணமானவர் எனப் பல்வேறு தகவல்களை நான் அறிந்து கொண்டேன். அது குறித்த விவரிப்பைக் கீழே காண்போம்.
நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலையே தெருக்கூத்து. இப்பெயர் அது நிகழ்த்தப்பட்;ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. கூத்து இசையுடன் கூடிய உடல் அசைவியக்கத்துடன் தொடர்புடையது. திறந்தவெளியை ஆடுகளமாக்கி ஆடை அணி ஒப்பனைகளுடன் இது வெளிப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு கதையை இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குவர். திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இது இருக்கிறது.
தெருக்கூத்து, வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்தது. 'அருச்சுனன் தபசு' என்பது மழை வேண்டி நிகழ்த்தப்படுவதாக இருக்கிறது. தெருக்கூத்து, பொழுதுபோக்குக் கூறுகளைப் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்துள்ளது.
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் 'கூத்துப்பட்டறை' ந.முத்துசாமி என்ற கலைஞாயிறு. இதனைக் கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முடிவுரை:
மேற்கண்ட கருத்துகளை எங்கள் பகுதிவாழ் தெருக்கூத்துக் கலைஞர் திரு.மயில்வாகனன் அவர்கள் வாயிலாக நான் அறிந்து கொண்டேன். மக்களின் எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும், வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்க முடியாத பண்பாட்டுக் கூறுகளாக நிகழ்கலைகள் விளங்குவதை நான் உணர இச்சந்திப்பு காரணமாக அமைந்தது.
இயல் - 7
1. சங்க கால வரலாற்றை அறிந்துகொள்ள, புக;ர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது. விளக்குக. ( துணைப்பாடம் )
முன்னுரை:
கரூரை அடுத்த புக;ரில் ஆறுநாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகளும் உலகத்தமிழ்க் கருத்தரங்குகளில் தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகளைப் பற்றி எழுந்த விவாதங்களும் கல்வெட்டு ஆராய்ச்சிக்கு முக்கியமான காரணங்களாகும்.
கல்வெட்டு ஆராய்ச்சியின் நோக்கம்:
மலைச்சாரல்களிலும் சிறு குன்றுகளிலும் காணப்படும் தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகளைச் சரிவர வாசிக்கும் முறையைக் கண்டறிய வேண்டும். சங்ககாலத் தமிழ் மன்னர்களைப் பற்றிய எவ்விதமான புறச் சான்றுகளுமே தமிழகத்தில் கிடைக்கவில்லை என்ற குறை நீங்க வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகள் தமிழிலேயே எழுதப்பட்டவை என்று அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் போன்ற காரணங்களே கல்வெட்டு ஆராய்ச்சியின் நோக்கமாக இருந்தன.
தொல்பொருள் துறையினரின் அறிக்கை:
இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் ஆண்டுதோறும் வெளியிட்டு வந்த தென்னிந்தியக் கல்வெட்டுகளைப் பற்றிய அறிக்கைகளில் 1927-1928-ஆம் ஆண்டுகளின் தொகுதியில் புக;ர்க் கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இவ்வறிக்கையில் ஆறு நாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள ஒரு பிராம்மிக் கல்வெட்டில் ஆதன் என்ற சொல் காணப்படுவதால் அக்கல்வெட்டு சேரமன்னர்களைப் பற்றியதாக இருக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. தமிழ் பிராம்மிக் கல்வெட்டுகள் பெரும்பாலும் ஒரே வரியில் மூன்று அல்லது நான்கு சொற்கiக் கொண்டு மட்டுமே பொறிக்கப்பட்டவை. இந்நிலையில் நான்கு வரிகளாலான மிக நீளமான கல்வெட்டு அதிலும் சேரமன்னர்களைக் குறிக்கக்கூடிய ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் நாற்பது ஆண்டுகளாக வாசிக்கப்படாமல் இருந்து வந்தது.
புகார்க் கல்வெட்டால் அறியும் சேரமன்னர்கள்:
பெரும்பாலும் தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகள் மனித சஞ்சாரம் அற்ற முள் புதர்கள் நிறைந்த குன்றுகளில் தான் இருக்கின்றன. புக;ர்க் கல்வெட்டின் முதல் வரியில் புதுமை எதுவும் இல்லை. 'யாற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத்துறவியான செங்காயபன் வசிக்கும் உறையுள் இது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த வரியில் உள்ள 'கோ' என்ற முதல் சொல்லால் இது சங்ககாலத் தமிழ்மன்னரின் கல்வெட்டு என்பது உறுதியானது. அடுத்தடுத்து 'பெருங்கடுங்கோன்', 'இளங்கடுங்கோ' இளங்கோ என்ற பெயர்கள் இருந்தது. சங்க நூல்களில் மட்டுமே காணப்பட்ட தமிழ் மன்னர்களின் பெயர்கள் தமிழகத்தில் முதல் முறையாக ஒரு கல்வெட்டில் இருந்தது.
கல்வெட்டுச் செய்திகள்:
கல்வெட்டின் முழுவாசகம் பின்வருமாறு
"அம்மன்னன் யாற்றூர் செங்காயபன் உறை
கோ ஆதன் செல்லிடும் பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இ) ளங்
கடுங்கோ (இ) ளங்கோ ஆக அறுத்த கல்"
இது கருவூரிலிருந்து ஆட்சி செய்த சேரல் இரும்பொறை மன்னர்கள் பொறித்தது. பதிற்றுப் பத்திலும் ஏனைய சில சங்க நூல்களிலும் பாடப் பெற்ற பழந்தமிழ் மன்னர்களைப் பற்றியது இக்கல்வெட்டு கி.பி. (பொ.ஆ) இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
முடிவுரை:
'சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்' என்ற ஐராவதம் மகாதேவன் அவர்களின் கல்வெட்டு இதழின் வழி சங்ககால வரலாற்றைப் புக;ர்க் கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ளலாம்.
2.நிருவாக மேலாண்மை குறித்து வெ.இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. (உரைநடை )
முன்னுரை:
பணியாளர்களைக் கொண்டு செயல்களைச் செய்யும் ஒரு கலையே மேலாண்மை. மேலாண்மை ஒரு அறிவியல் சார்ந்த பகுதியாக இருக்கின்றது எனக் கருதுகின்றனர். சுருங்கக் கூறின் ஒரு நிருவாகத்தின் திட்டமிட்ட நோக்கங்களை அடைய உதவுகின்ற உலகத்தால் ஒத்துக் கொள்ளப்பட்ட முறையே மேலாண்மையாகும்.
நிருவாக மேலாண்மை:
உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை. ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும். தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால், யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.
"கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் தொல்சிறப்பின்
ஓண்ணிறப் பாதிரிப்பபூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்கித் தான்பயந் தாங்கு" – 139
நிருவாகத்தின் வரவு செலவு
நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்யவன் அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.
வாழ்வியல் விளக்கம்:
டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான். அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது. அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன் வருந்தவில்லை. தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான். அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும் வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள். அவன் ஊருக்கு ஓதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான். 'டைமன்' பற்றிய n'க்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம்.
முடிவுரை:
ஓளவையார் நல்வழியில்,
"ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு (25)
என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
இயல் - 8
1.எச்.ஏ.கிருட்டிணனார் 'கிறித்துவக் கம்பரே' என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக. ( செய்யுள் )
எச்.ஏ.கிருட்டிணனார் 'கிறித்துவக் கம்பரே'
தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ. கிருட்டிணனார்.
இவரது பெற்றோர் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும், சமயப்பற்றும் உடையவர்கள்.
இவரது தந்தை கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றுவார்.
இதுவே இவருக்குக் கம்பராமாயணம் போலத்தாமும் காப்பியம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொடுத்தது.
இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் இவர் ஆற்றிய சமயப் பணியும், தமிழ்ப்பணியும் மிகச் சிறப்பானதாகும்.
கிறித்துவத்தை ஏற்ற பிறகு, கம்பரைப்போலத் தானும் ஒரு காப்பியம் படைக்க வேண்டும் என்று ஆர்வப்பட்டு எழுதியதே இரட்சணிய யாத்திரிகம்.
இரட்சணிய யாத்திரிகம் நூலிற்கு இடையே 'தேவாரம்' என்ற இசைப்பாடல்களும் பல கிளைக் கதைகளும் உள்ளன. இது கம்பரின் இராமாயணத்தைப் போன்று சந்த நயங்களுடன் எழுதப்பட்டுள்ளது.
கம்பர் தன் காப்பியத்தில் சொல்ல வந்த கருத்தைத் தெளிவாகச் சொல்வது போல இவரும் தன்னுடைய இரட்சணிய யாத்திரிகம் நூலில் இறைமகன் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
கம்பரைப்போல இவரும் தாம் இயற்றியுள்ள இரட்சணிய யாத்திரிகப் பாடல்களில் உரிய தொடைநயங்களைப் பயன்படுத்தியுள்ளார்.
கம்பராமாயணத்தில் காண்டம் அமைந்திருப்பது போலவே, இதுவும் ஆதிபருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் என்று அமைந்துள்ளது.
கம்பரைப்போலப் பாடல்களில் உவமையைப் பயன்படுத்தியுள்ளார் எச்.ஏ. கிருட்டிணனார்.
கம்பரைப்போலவே கிருட்டிணனாரும் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப சந்த நயமுடைய பாடல்களை இயற்றியுள்ளார்.
'மக்கள் புலம்பல்' என்ற தலைப்பில் அமைந்துள்ள பாடலில் 'என்சொல்' என்ற சொல்லை ஒவ்வொரு அடியின் முதல்சீரில் அமைத்துள்ள கவிநயம் கிருட்டிணனாரின் தமிழ்த்திறமைக்குச் சான்றாகும்.
கம்பரின் பாடல்கள் மரபுக்கவிதையாக இருந்தாலும் அவற்றைச் சாதாரணமாகத் தமிழறிந்தோர் அனைவரும் புரிந்து கொள்ள முடியும். அதுபோலவே கிருட்டிணனாரின் இரட்சணிய யாத்திரிகமும் அமைந்துள்ளது.
கம்பனைக் கற்க கற்க இனிமை அதிகமாவது போல கிருட்டிணனாரின் இரட்சணிய யாத்திரிகமும் அமைந்துள்ளது.
வண்ணங்களை வைத்து கிருட்டிணனாரும் பாடல்கள் இயற்றியுள்ளார்.
திருக்குறள்
இயல் - 3
1.செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணை கொண்டு நிறுவுக.
ஈடில்லா உதவி:
ஒருவன் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையிலும் அவர் நமக்குச் சரியான நேரத்தில் ஏதேனும் உதவி செய்தால், அந்த உதவிக்குக் கைம்மாறாக இந்த நிலவுலகத்தையும், வானுலகத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது.
உலகினும் பெரிய உதவி:
ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும்.
பயன் எதிர்பாராத உதவி:
ஒருவர் எந்தப் பயனையும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்காமல் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.
உதவியின் பயன் பனையளவு:
ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அந்த உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவு உதவியையும் பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
அறத்தை அறிக:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஆனால் ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்போழுதே மறந்துவிட வேண்டும்.
தப்பிக்க கூடுதல் வழி:
ஒருவர் எந்த அறத்தை அழித்தாலும் அதிலிருந்து தப்பிப் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து தப்பிப்பிழைக்கும் வழியே கிடையாது.
2.சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
சினமானது மனிதனின் அருள் உள்ளத்தை அழிப்பதுடன் அவனை மெய்யுணர்வை அடையாது செய்துவிடும். ஒருவன் சினத்தைக் காத்தான் என்றால் அவன் வாழ்வு மேன்மையடையும்.
மெலியாரிடம் சினவாமை:
எவர் ஒருவர், தன் சினம் செல்லுபடியாகும் இடமான தன்னை விட வலிமை குறைந்தவர்களிடம் சினம் கொள்ளாமல் தன்னுடைய சினத்தைக் காத்துக் கொள்கின்றாரோ, அவரே உண்மையில் சினத்தைக் காப்பவர் ஆவார்.
சினத்தை மறப்பதே நன்று:
ஒருவனுக்குத் தீமையான விளைவுகள் அனைத்தும் சினத்தாலேயே ஏற்படும் என்பதால், ஒருவரிடமும் சினம் கொள்ளாமல் அதனை மறந்துவிட வேண்டும்.
சினம் தரும் பகை:
சினம் என்னும் பகை நம்மிடமிருக்கும் நம் முகத்திற்கு அழகு தருகின்ற சிரிப்பையும், உள்ளத்தின் அருளுக்கு அழகு தருகின்ற மகிழ்ச்சியையும் நம்மிடமிருந்து அழித்துவிடும்.
சினத்தைக் காக்க வேண்டும்:
ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் அவன், சினத்தைக் காக்க வேண்டும். ஏனெனில் சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும்.
சுற்றம் பேணிட சினத்தை மற:
சினமானது தன்னை மட்டுமல்ல தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அதுமட்டுமல்லாமல் தனக்குப் பாதுகாப்பாக இருக்கின்ற தெப்பமான சுற்றத்தாரையும் சுட்டழித்துவிடும். எனவே சுற்றம் பேண சினத்தைக் கை விடவேண்டும்.
இவ்வாறு சினத்தைக் காத்து வாழ்ந்தால் நம்மைவிடவும் மெலியாரிடம் பகை வராது, யாரிடமும் சினம் கொள்ளமாட்டோம், நம்முடைய முகமலர்ச்சியும், அக மகிழ்ச்சியும் இன்னும் அதிகமாகும், நம்மையே காத்துக் கொள்ளும் ஆயுதமாகும். நம் சுற்றத்தையும் பேணிட வழிவகுக்கும். இதனால் நம் வாழ்வு மேன்மைப்படுத்தப்படும் என்று முப்பால் கூறுகின்றது.
இயல் - 6 ( திருக்குறள் )
1. அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும் என்பதை வள்ளுவம் வழிநின்று விளக்குக.
அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைநிற்கும்
முன்னுரை:
மனித வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையாய் அமைவது அறிவு, இதனை நன்குணர்ந்த வள்ளுவர் அறிவுடைமை என்னும் அதிகாரத்தில் அறிவின் சிறப்பினை விரிவாக எடுத்துரைக்கிறார்.
அறிவின் சிறப்பு:
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி மட்டுமன்றி பகைவரால் அழிக்க முடியாத மனதினுள் அமைந்த பாதுகாப்பு அரணும் ஆகும்.
அறிவின் இலக்கணம்:
வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும் அறிவு பலவகையாகக் காணப்படுகிறது என்பதை,
மனத்தினை அது செல்லுகின்ற வழியிலெல்லாம் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.
எச்செய்தியை எவர் ஒருவர் கூறக் கேட்டாலும் அச்செய்தியின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிவது அறிவாகும்.
உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ, அந்நெறியில் தானும் உலகத்தோடு இணைந்து செல்வது அறிவாகும் என்னும் குறள்களின் மூலம் வள்ளுவர் விளக்குகிறார்.
அறிவின் மேன்மை:
நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கேற்ப வாழ்வது மட்டும் அறிவாகாது என்பதை மக்களுக்கு உணர்த்திட
"எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
ஆதிர வருவதோhர் நோய்"
பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் எதுவும் இல்லை என்னும் குறள் வழியாக விளக்குகிறார் வள்ளுவர்.
முடிவுரை:
இவ்வாறு வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையாய் அமைவது அறிவு என்பதை வள்ளுவரின் குறள்வழியாக அறிந்தோம்.
2.திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் - நிறுவுக.
முன்னுரை:
தமிழரின் வாழ்வியல் நெறிகளைக் கருவு+லமாகக் கொண்டு விளங்கும் தமிழ் இலக்கியம் திருக்குறள் ஆகும். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளில் ஒன்பது இயல்களின் மூலம் வாழ்வியல் கருத்துகளைக் கூறும் அறிவுப் பெட்டகம் திருக்குறள் நம் பாடப்பகுதி விளக்கும் வாழ்வியல் கருத்துகளை இக்கட்டுரையில் காண்போம்.
அறிவுடைமை:
அறிவு, அழிவு நேராமல் காக்கும் கருவியாகும். அன்றியும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.
மனத்தை அதுபோகும் வழியில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி நல்வழியில் செலுத்துவதே அறிவாகும்.
எச்செய்தியை எவர் ஒருவர் கூறக்கேட்டாலும் அச்செய்தியின் உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிவதே அறிவாகும்.
உலகம் செல்லும் உயர்ந்த நெறியில் நாமும் செல்வதே அறிவாகும். பின்வரக்கூடிய துன்பத்தை முன்னரே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையார்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் எதுவும் இல்லை.
சிற்றினம் சேராமை:
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும். ஆனால் அவர் இப்படிப்பட்டவர் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணை உலகத்தில் இல்லை. தீய இனத்தைவிடத் துன்பம் தரும் பகையும் இல்லை.
வினைத்திட்டம்:
வினைவலிமை என்று சொல்லப்படுவது ஒருவனின் மனவலிமையேயாகும் மற்றைய வலிமைகள் எல்லாம் வலிமைகள் ஆகா. ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனவலிமை உடையவராக இருந்தால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே செய்து முடிப்பார்.
கள் உண்ணாமை:
உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அவ்வாறே கள்ளுண்பவரும் நஞ்சு உண்பவரே ஆவர்.
கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது. நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
சூதாடலின் தீமை:
ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதினைப் போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
சூதாடுமிடத்தில் ஒருவருடைய காலம் கழியுமானால், அது அவருடைய பரம்பரைச் செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
முடிவுரை:
இவ்வாறு, தனிமனிதனின் வாழ்வுக்குத் தேவையான கருத்துகள் மட்டுமல்லாது அரசன் மற்றொரு அரசனிடம் தூது உரைத்தல், மன்னர்கள் எவ்வாறு அரசாட்சி செய்ய வேண்டும் என்பன போன்ற கருத்துக்களை தன்னகத்தே கொண்டு ஒப்புயர்வற்ற இலக்கியமாகத் திருக்குறள் விளங்குகிறது.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்
கார்மல் மேனிலைப்பள்ளி
நாகர்கோவில் - 4
கன்னியாகுமரி மாவட்டம்
9843448095
6 மதிப்பெண் - ANSWER KEY
விடைக்குறிப்பு Pdf download button Below 👇👇
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)
திருப்புதல் தேர்வு
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
பாநயம் பாரட்டல்
6 மதிப்பெண் - ANSWER KEY