Loading ....

12th Standard- +2Tamil - Tamil -Study Material - QUARTERLY EXAM QUESTION PAPER - SEPTEMBER 2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY - தமிழ் - காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள்

12th Standard- +2Tamil - Tamil -Study Material - QUARTERLY EXAM QUESTION PAPER - SEPTEMBER 2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY - தமிழ் - காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள்

12th Standard- +2Tamil - Tamil -Study Material - QUARTERLY EXAM QUESTION PAPER  - SEPTEMBER  2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY  - தமிழ் - காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள்


காலாண்டுத் தேர்வு - செப்டம்பர்  2022

 மாதிரி வினாத்தாள்- 1


நேரம்: 3:மணி                   வகுப்பு-1 2 மதிப்பெண்:90                                   

         

   பொதுத்தமிழ்



பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக         14 x 1 = 14                                                                                                             

1. வாதம் செய்தல் பற்றிக்  கூறும் நூல்

 அ) மதுரைக்காஞ்சி              ஆ) சிந்தாமணி           

இ) தமிழ்விடு தூது      ஈ) நன்னூல்

2. சுரதா  நடத்திய கவிதை இதழ்

 அ) இலக்கியம்                      ஆ) காவியம்                 

இ) ஊர்வலம்                 ஈ) விண்மீன்

3. பொருத்தித் தேர்க 

அ) மாச்சீர்                                      -  1. கருவிளம் , கூவிளம் 

ஆ) காய்ச்சீர்                                 -   2. நாள், மலர் 

இ) விளச்சீர்                                   -   3. தேமாங்காய்,  புளிமாங்காய்

ஈ)  ஓரசைச்சீர்                              -   4. தேமா ,  புளிமா

அ) 1 2 4 3                               ஆ) 4 3 1  2                          இ) 2 3 1 4                       ஈ) 3 4 2 1 

4. “உவா  உறவந்து கூடும் 

       உடுபதி இரவி ஒத்தார்” யார் ?யார் ?   

அ) சடாயு, இராமன்                         ஆ) இராமன், குகன் 

இ) இராமன்,  சுக்ரீவன்                    ஈ)  இராமன், சபரி

5. இவற்றை வாயிலுக்குச்  சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக  என்று ஜலாலுதீன் ரூமி குறிப்பிடுவது யாது?  

அ) வக்கிரம்                                       ஆ) அவமானம்  

இ) வஞ்சனை                                    ஈ) இவை அனைத்தும்

6. தவறானதைக்  கண்டுபிடி 

அ) பல் + துளி = பல்துளி                       ஆ) சொல் + துணை = சொற்றுணை 

இ) பல்+  நூல் = பன்னூல்                       ஈ) நாள்+ மீன்             = நாண்மீன்

7. பூமணி எழுதிய சிறுகதை தொகுப்பு

 அ) பிறகு                 ஆ) வெக்கை              இ) கொம்மை            ஈ) வயிறுகள் 

8. ‘ARCHIVE’ -என்பதன் கலைச்சொல்

அ) புனைவு            ஆ) அழகியல்              இ) காப்பகம்             ஈ) நூல்நிரல்

9. படிமம் என்பதன் பொருள் 

அ) சொல்               ஆ) செயல்                    இ) காட்சி                   ஈ) ஒலி

10. ‘நெல்லை தென்றல்’ என்னும் நூல் 

அ) கவிதை நூல்                                     ஆ) உரைநடை நூல் 

இ) கடித இலக்கிய நூல்                         ஈ) வரலாற்று நூல்

11. சரியானதைத் தேர்க

அ) கூவம் நதி                                                 -  கொற்றலை ஆறு

ஆ)  பிரான்சிஸ் டே                                      -   நாட்குறிப்பு

இ) பல்லாவரம்                                             -   கல்கோடரி  

ஈ) கூடுவாஞ்சேரி                                         -   குடைவரை

12.சரியான நிறுத்தற்குறி உடைய தொடரினைத் தேர்க. 

அ) ‘தன் அறியலன் கொல்;  என் அறியலன் கொல்?’

ஆ) “தன் அறியலன் கொல்  என் அறியலன் கொல்!”

இ) தன் அறியலன் கொல்!  என் அறியலன் கொல்!

ஈ)  தன் அறியலன் கொல்?  என் அறியலன் கொல்?

13. சுவடி யோடு பொருந்தாத ஒன்றைத்  தேர்வு செய்க

 அ) வசம்பு      ஆ) மணத்தக்காளியிலைச்சாறு            இ) கடுக்காய்    ஈ) மாவிலைக்கரி

14. ‘நீர்படு பசுங்கலம்’ - இதில் ‘பசுங்கலம்’ என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு 

 அ) வினைத்தொகை    ஆ) எண்ணும்மை     இ) பண்புத்தொகை      ஈ) உம்மைத்தொகை

பகுதி - 2

 பிரிவு – 1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.தருக.

எவையேனும் மூன்றனுக்கு விடைதருக             3 x 2 = 6                                                                                               

15. இடையீடு -  எவற்றைக் குறியீடாகக்  குறிப்பிடுகிறது? 

16. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட,  தமிழின் துணை வேண்டும் என்கிறார் 

17. கலிவிழா , ஒலிவிழா விளக்கம் தருக

18. நகரம் பட்டை  தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்கம் தருக.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக     2 x 2 = 4                                                                                                       

19. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக

20. அக்காலத்துக்  கல்விமுறையில்  மனனப்  பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை ? 

21. புக்கில், தன்மனை – சிறுகுறிப்பு எழுதுக.

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடைதருக               7 x 2  = 14                                                                                    

22. உவமைத்தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) உள்ளங்கை நெல்லிக்கனி போல 

ஆ) அச்சாணி இல்லாத தேர்போல 

23.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக

      கலை, களை, கழை 

 24. வல்லின மெய்கள் இட்டும் நீக்கியும் எழுதுக

       மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள   

       வேண்டும். தமது இன்பதுன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள 

       வேண்டும்.

25.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக

      அ) விம்முகின்ற ஆ) அமர்ந்தனன் 

26.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக

அ) உய்வுண்டாம்           ஆ) தனியாழி

27. தொடரில் உள்ளபிழைகளை நீக்கி எழுதுக

அ) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

ஆ) எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.

28. பேச்சு வழக்கை எழுத்து வழக்காககாக மாற்றுக

அ) வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு 

      போனாரு.

ஆ) ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.

29. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச்  சேர்த்து முறையான தொடர்களாக 

      ஆக்குக

அ) குமரன் வீடு பார்த்தேன். 

ஆ) போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.  

30. ஒரு விகற்பம்,பல விகற்பம் என்றால் என்ன?

 பகுதி – 3

பிரிவு-1

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக     2 x 4 = 8                                                                                     

31. “வருபவர் எவராயினும் 

        நன்றி செலுத்து” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

32. ‘நெல்லின் நேரே வெண் கல் உப்பு’ -  இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை 

       விளக்குக

33. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக. 

34. ‘வாயிலோயே’  எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பாடாண்திணைக்கு  

      உரியது என்பதை நிறுவுக. 

பிரிவு-2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக     2 x 4 = 8           35. தாய்வழிக் குடும்பம் குறித்துச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் செய்திகள் யாவை ?

36. எழுத்தாணிகள் -  குறிப்பு வரைக.

37.பேரிடர் மேலாண்மை ஆணையம் -  விளக்கம் தருக. 

38. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து 

      இருப்பனவற்றைக்  குறிப்பிடுக    

பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக   3 x 4 = 12                                                                              

39.  “சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் 

          ஏமப் புணையைச் சுடும்” -  குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

                                                 அல்லது

        நிரல்நிறை அணியைச் சான்று தந்து விளக்குக.

40. கீழ்க்காணும் பழமொழிகளில்  ஏதேனும்  ஒன்றினை வாழ்க்கை நிகழ்வோடு 

      பொருத்தி எழுதுக.

               அ) "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"  (அல்லது) 

              ஆ) “ஊழி பெயரினும் தாம் பெயரார்”

41.பாநயம் பாராட்டுக: மையக்கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை எழுதுக.

                           பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி

                                      பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்கி 

                            ஊற்றெடுத்த அன்புரையால் உலுங்க வைத்திவ் 

                                      உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?        

                            கற்றுணர்ந்தே அதன் இனிமை காண்பாய் என்று

                                      கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் 

                            தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட 

                                          தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம்

                                                                                                - நாமக்கல்கவிஞர்

குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேனிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  📞9843448095

42. தமிழாக்கம் தருக

      அ) A new language is a new life.

     ஆ) The limits of my language are the limits of my world. 

     இ)  Learning is a treasure that will follow its owner everywhere. 

      ஈ)  If you want people to understand you, speak their language.

43. கீழ்க்காணும் அழைப்பிதழைப் பத்தியாக மாற்றுக

பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் 

நாள்:  அக்டோபர் 2                                                     நேரம் : காலை   10:00          

இடம் :  கலைவாணர் அரங்கம், சென்னை 

நிகழ்ச்சி நிரல்                                               

தமிழ்த்தாய் வாழ்த்து 

வரவேற்புரை: திருமதி. அரசி, செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர். 

முன்னிலை   : திரு. அமுதன், இயற்கை வேளாண் உழவர். 

தலைமையுரை :திரு. இமயவரம்பன், பேரிடர் மேலாண்மை இயக்குநர். 

கருத்தரங்க தலைப்புகள் 

          இயற்கை தீர்த்தங்களும் பருவகால மாற்றங்களும் :  முனைவர்  செங்குட்டுவன் 

          பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும்: திரு. முகிலன் 

          நீர் வழி பாதைகளைப் பாதுகாத்தல்: திருமதி. பாத்திமா 

          பேரிடர் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்:  திரு. வின்சென்ட் 

நன்றியுரை: பர்வீன், பசுமைப் படை மாணவர் தலைவர் 

நாட்டுப்பண்

பகுதி –  4

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் 

விடை தருக.                                                                                                                                                          3 x 6 = 18

44.அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன் பிற உயிர்களுடன் கொண்டிருந்த 

          உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.                (அல்லது)

ஆ)  செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணை கொண்டு

       நிறுவுக 

45.அ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி 

           விளக்குக.                                                                                          (அல்லது)                                                              

ஆ) பண்டைக்கால கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்கள் இடையே நிகழ்ந்த கற்றல் 

        கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.

46.“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” -  இதுகுறித்து உங்கள் 

      கருத்தை விவரிக்க.                                                                       (அல்லது)

ஆ)  பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

பகுதி- 5

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6                                                                                                                

47.அ) “ வையகம் பனிப்ப “   - எனத் தொடங்கும் நெடுநல்வாடை பாடலை எழுதுக. 

     ஆ)  ‘பொருள்’   என முடியும் திருக்குறளை எழுதுக.

குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேனிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  📞9843448095




 காலாண்டுத் தேர்வு - செப்டம்பர்  2022

 மாதிரி வினாத்தாள்- 1


நேரம்: 3:மணி                   வகுப்பு-1 2 மதிப்பெண்:90                      

                                                                                         

   பொதுத்தமிழ்


விடைகள்


பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                                              14 x 1 = 14

1. அ) மதுரைக்காஞ்சி    

2. ஆ) காவியம்

3. ஆ) 4 3 1  2   

4. இ) இராமன்,  சுக்ரீவன்

5. ஈ) இவை அனைத்தும்

6. அ) பல் + துளி = பல்துளி

7. ஈ) வயிறுகள்

8. இ) காப்பகம்

9. இ) காட்சி

10. அ) கவிதை நூல்

11. இ) பல்லாவரம் - கல்கோடரி

12. ஈ)  தன் அறியலன் கொல்?  என் அறியலன் கொல்?

13. இ) கடுக்காய்

14. இ) பண்புத்தொகை   

பகுதி - 2

 பிரிவு – 1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.தருக.

எவையேனும் மூன்றனுக்கு விடைதருக                                                                     3 x 2 = 6

15.     இடையீடு என்னும் கவிதை கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது. (இயல் - 4 -இடையீடு,வினா பக் : 101)


16. தமிழின் துணை வேண்டும்:

          செந்நிறத்து வானம்போலத் தங்கள் கைகள் சிவந்திட உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வை வெள்ளம் அவர்களின் திரண்ட தோள்மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும். இந்த அழகினை வியந்து பாடச் செந்தமிழின் துணை வேண்டுமெனக் கவிஞர் சிற்பி கூறுகின்றார். (இயல் - 1 - இளந்தமிழே,வினா பக் : 19)


17. கலிவிழா   - திருமயிலையில் நடைபெறும் எழுச்சி மிக்க விழா

      ஒலி விழா   - திருமயிலையில் நடைபெறும் ஆரவார விழா

                (இயல் - 5 - தேவாரம் ,வினா பக் : 125)


18. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது :

               மழைக்காலப் பகற்பொழுதில் சூரியன் திடீரென தன் முகத்தைக் காட்ட மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கின்றது. இன்னும் உறிஞ்சப்படாமல் இருக்கும் ஒரு சில மழைத் துளிகளின் மீது விழுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கின்றது.   (இயல் - 2 - பிறகொருநாள் கோடை ,வினா பக் : 42 )


பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                                                                2 x 2 = 4

19. நடை அழகியல்:

            கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும். தொல்காப்பியமும் இதனையே கூறுகின்றது. 'நடைபெற்றியலும்', 'நடை நவின்றொழுகும்' என்னும் சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டுள்ளது. ஒவ்வொரு பாவும் இவ்வாறே அமைய வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.  

              (இயல் - 1 - தமிழ்மொழியின் நடை அழகியல் ,வினா பக் : 18 )


20. மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள்:

              நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள், கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்றவை அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்களாகும்.

              (இயல் - 4 - பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள், வினா பக் : 101 )


21. புக்கில்:

             புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கும். 

     தன்மனை:

             திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் 'தன்மனை' என அழைக்கப்பட்டது.

                (இயல் - 3 -தமிழர் குடும்ப முறை, வினா பக் : 68 )


பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                                                   7 x 2  = 14

22. உவமைத்தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படையாக, தெளிவாக(பக் : 20 )

         தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாய் விளங்கியது

ஆ) அச்சாணி இல்லாத தேர்போல - சரியான வழிகாட்டி இல்லாத (பக் : 20 )

           நாட்டை வழிநடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர்போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர்.

23.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக

      கலை, களை, கழை(பக் : 44 )

கலை, களை, கழை 

கலை  - நுட்பம், ஆடை, கல்வி, கலைமான்

களை  - நீக்கு, அழகு

கழை  - மூங்கில் 

கழை காட்டில் தீ பிடித்ததால் களைச்செடிகளுடன் சேர்ந்து கலைமான்களும் தீக்கிரையாகின.

24. வல்லின மெய்கள் இட்டும் நீக்கியும் எழுதுக (பக் : 71 )

       மாணவர்கள் பெற்றோர்களைத் தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள   

        வேண்டும். தமது இன்பதுன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்து_ கொள்ள 

        வேண்டும்.

25.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக

அ) விம்முகின்ற (பக் : 3 )

  விம்முகின்ற  - விம்மு + கின்று + அ

                    விம்மு  - பகுதி 

                     கின்று - நிகழ்கால இடைநிலை

                             அ - பெயரெச்ச விகுதி

ஆ) அமர்ந்தான் (பக் : 114 )

               அமர்ந்தான்  -  அமர் + த் ( ந் ) + த் + அன்               

                           அமர்   -   பகுதி 

                                  த்   -   சந்தி , ‘த்’, ‘ந்’ -ஆனது விகாரம் 

                                  த்   -   இறந்தகால இடைநிலை

                             அன்  -   ஆண்பால் வினைமுற்று விகுதி     

26.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக

அ) செல்லிடத்து             

              செல்லிடத்து  - செல் + இடத்து   ( பக் : 78)

 விதி 1) : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் >  செல் + ல் + இடத்து

விதி 2) : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே > செல்லிடத்து


ஆ) தனியாழி

               தனியாழி    -  தனி + ஆழி    ( பக் : 9)

விதி  1 : இ ஈ ஐ வழி யவ்வும் < தனி + ய் + ஆழி

விதி 2 : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே < தனியாழி

27. தொடரில் உள்ளபிழைகளை நீக்கி எழுதுக

அ) வானம் பார்த்த பூமியில் பறு வகைகள் பயிரிடப்படுகின்றன. ( பக் : 102)

ஆ) எங்கள் ஊரில் நூலகக் கட்டம் கட்ட அசு நிதி ஒதுக்கியது.  ( பக் :102)

28. பேச்சு வழக்கை எழுத்து வழக்காககாக மாற்றுக

அ) வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கே 

       அழைத்துச் சென்றார்.( பக் :127)

ஆ) இரவில் சிற்றப்பாவைக் காவலுக்குப் போகச் சொல்.( பக் :127127)

29. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச்  சேர்த்து முறையான தொடர்களாக 

      ஆக்குக

அ) குமரனை வீட்டில் பார்த்தேன். ( பக் : 72)

ஆ) போட்டியில் வெற்றி பெற்ற கலைச்செல்விக்குப் பாராட்டுகள் குவிந்தன.

          ( பக் : 72)

30. ஒரு விகற்பம்,பல விகற்பம்:

            வெண்பாவின் எல்லா அடிகளும் ஒரே எதுகையை ப்பெற்று வருவது ஒரு விகற்பம் எனப்படும்.  வெண்பாவின் ஒவ்வொரு அடியும் வேறுவேறு எதுகையைப் பெற்று வருவது பல விகற்பம் எனப்படும்.  (இயல் - 4 -பா இயற்றப் பழகலாம் , வினா பக் : 100 )


 பகுதி – 3

பிரிவு-1

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                                             2 x 4 = 8

31. “வருபவர் எவராயினும் 

        நன்றி செலுத்து” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்:

       இப்பாடல் வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இருந்து சில பாடல்களை என்.சத்தியமூர்த்தி என்பவர். ‘தாகங்கொண்டமீனொன்று’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கவிதைத்தொகுப்பில் உள்ளது. அத்தொகுப்பில் உள்ள ‘விருந்தினர் இல்லம்’ என்னும் பகுதியில் இவ்வரி இடம் பெற்றுள்ளது. 

பொருள்: 

          இவ்வுலகில் வாழ்கின்ற நாம், தினமும் சந்திக்கின்ற எதிர்பாராத இன்பம், துன்பம், அவமானம். வக்கிரம், வஞ்சனை எதுவானாலும் அதற்காக நன்றி செலுத்த வேண்டும். 

விளக்கம்:

         மனித வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் எல்லோரும் ஒரே மனநிலையில் வருவதில்லை. ஒரே மாதிரியான செய்திகளையும் கொண்டு வருவதில்லை. அதுபோன்றே நம் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்களான ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு, வக்கிரம், அவமானம், வஞ்சனை, துக்கம் என்பவை பல வாழ்வியல் வடிவங்களில் வரும். அவை நமக்குப் புதிய உவகையையும், புதிய வழிகாட்டுதல்களையும் தருவதால் ‘வருபவர் எவராயினும் நன்றி செலுத்த வேண்டும்’ என்று கவிஞர் கூறுகிறார். 

                (இயல் - 3 - விருந்தினர் இல்லம்  , வினா பக் : 68 )


32.பண்டமாற்று வணிகம்:

          பண்டைய காலங்களில் பண்டமாற்று வணிகமே சிறப்புற்றிருந்தது. பழந்தமிழர்களின்  தொழில் நிலத்தின் இயல்பைச் சார்ந்து அமைந்திருந்தது. பழந்தமிழர் தங்களிடத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தித் தொழில் செய்தனர். அவ்வாறு தொழில் செய்து விளைவித்த பொருட்களைப் பிற நில மக்களிடம் பண்டமாற்று முறையில் வணிகம் செய்தனர்.

          தங்களது நிலத்தில் விளையாத  பொருள்களைப் பெற தங்கள் நிலத்தில் விளைந்த பொருள்களைக் கொடுத்துப்  பண்டமாற்று முறையில் பெற்றுக் கொள்வர்.

 பண்டைய தமிழகம்:

           பழங்காலத்தில் தமிழ்நாட்டில் சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியது. உப்பு விளைவித்த பிறகு உமணர்கள் அந்த உப்பைக் கொண்டு பிற நிலங்களில் விளைந்த பொருள்களைப் பண்டமாற்று முறையில் பெற்றுக் கொண்டனர்.

           பண்டமாற்று வணிகத்தில் விளைவிக்கப்படும் பொருட்களுக்குப் பணம் கொடுப்பதில்லை. மாறாக, தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களே பெற்றுக் கொள்ளப்பட்டன. இதனையே உமணர் மகள், “உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ!” என்று கூறுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இதன் வழியாகப் பண்டைய தமிழகத்தில் நடந்த வணிகம் பண்டமாற்று வணிகம் என்பதை அறியலாம்.  (இயல் - 5 - அகநானூறு, வினா பக் : 125 )


33. சினத்தால் வரும் கேடு

                     ஒருவனுக்குத் தீமையான விளைவுகள் அனைத்தும் சினத்தாலேயே ஏற்படும் என்பதால், ஒருவரிடமும் சினம் கொள்ளாமல் அதனை மறந்துவிட வேண்டுமென குறள் கூறுகின்றது. சினம் என்னும் பகை நம்மிடமிருக்குமானால் , நம் முகத்திற்கு அழகு தருகின்ற சிரிப்பையும், உள்ளத்தின் அருளுக்கு அழகு தருகின்ற மகிழ்ச்சியையும் நம்மிடமிருந்து அழிந்துவிடும். 

                  ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் அவன் சினத்தைக் காக்க வேண்டும். ஏனெனில், சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும்.

சினமானது தன்னை மட்டுமல்ல தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அதுமட்டுமல்லாமல் தனக்குப் பாதுகாப்பாக இருக்கின்ற தெப்பமான சுற்றத்தாரையும் சுட்டழித்துவிடும். எனவே சுற்றம் பேண சினத்தை விடவேண்டும் எனக்குறள் கூறுகின்றது. (இயல் - 3 - வாழ்வியல் - திருக்குறள், வினா பக் : 78 )


34. ‘வாயிலோயே’  எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பாடாண்திணைக்கு உரியது:

            பாடு + ஆண் + திணை =  பாடாண்திணை,பாடப்படும் ஆண்மகனின் ஒழுக்கம்.

   ஒருவனின் புகழ், வலிமை, வள்ளன்மை, வீரம், வெற்றி முதலியவற்றைப் புகழ்ந்து பாடுவது.

            தன்னை நாடிவரும் புலவர்கள் முதல்  அனைவருக்கும் அவரவர் தேவையை அறிந்து வாரி வழங்கும் வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமான் தன்னை நாடி வருவோருக்கு இல்லை என்று சொல்லாதவன் என்பதைப் “பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!” என்ற வரிகள் மூலம் அறியலாம். இதன்மூலம் அதியமானின் கொடைத்தன்மைப் புலனாகிறது. 

           விரைந்து ஓடும் குதிரையைத் தன் படையில் கொண்டவன் அதியமான் என்பதை “கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி” என்ற வரிகள் மூலம் அறியலாம். இதன்மூலம் அதியமானின் படைச்சிறப்புப் புலனாகின்றது. இவ்வாறு அதியமானின் கொடைத் தன்மையும், படை தன்மையும் (வீரம்) புலனாவதால் இப்பாடல் பாடான் திணையைச் சார்ந்ததாகும். (இயல் - 4 - புறநானூறு, வினா பக் : 101 )


பிரிவு-2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                                             2 x 4 = 8

35. தாய்வழிக் குடும்பம்:

            சங்க காலத்தில் கண சமூகத்திற்கும் தாயே தலைமையேற்று இருந்தாள். பதிற்றுப்பத்து கூறும் சேர நாட்டு ‘மருமக்கள் தாயமுறை’ இதற்குச் சிறந்த சான்றாகும். மேலும், 

                   “செம்முது பெண்டின் காதலாஞ்சிறா  அன்”(புறம் : 276)

                   “ முளரிமருங்கின் முதியோள் சிறுவன்”( புறம் : 278) 

என்னும்  பாடல் வரிகள் மூலம் ‘இவளது மகன்’ என்றே குழந்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளனர். இதன்மூலம் சங்க காலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தை அறிந்து கொள்ள முடியும். 

            சங்ககாலத்தில் திருமணத்திற்குப் பின் தன் இல்லத்தில் தொடர்ந்து வாழும் ‘தாயமுறை’ வழக்கத்தில் இருந்துள்ளது. திருமணத்திற்குப் பின்பு மனைவியின் இல்லத்திற்குச் சென்று கணவன் வாழ்வது நடைமுறையாக இருந்தது. பெண் குழந்தையின் பேறு முதன்மையாக விரும்பப்பட்டது. தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்து வளங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன. தாய்வழி குடும்பங்களில் பெண்களே குல தொடர்ச்சிக்கு உரியவராக இருந்தனர்.         

               (இயல் - 3 - தமிழர் குடும்ப முறை , புத்தக உள் வினா- விடை  பக் : 49 )


36. எழுத்தாணிகள்:

             ஓலையில் எழுதுவதற்குரிய   எழுத்தாணியை ஊசி என்றும் கூறுவர்.  எழுத்தாணி, மடக்கெழுத்தாணி , வாரெழுத்தாணி , குண்டு எழுத்தாணி என பலவகை இருந்துள்ளது.  

ஒரு பக்கம் வாருவதற்குக்  கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் உடைய எழுத்தாணிகள் இருந்துள்ளன.  ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கு எழுத்தாணியும் இருந்துள்ளன.  ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துகளாக 20 முதல்  30  வரி வரையிலும் எழுதுவதற்குரிய  மெல்லிய எழுத்தாணியும் இருந்துள்ளது.

  (இயல் - 4  - பண்டைய காலத்துப் பள்ளிக் கூடங்கள், புத்தக உள் வினா- விடை  பக் : 83 )


37.பேரிடர் மேலாண்மை ஆணையம்: 

             நடுவண் அரசு 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.  புயல், வெள்ளம், நிலநடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு,  தீ விபத்து, சூறாவளி, பனி புயல், வேதி விபத்துக்கள் முதலான பேரிடர்கள் நிகழும்போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற இந்த ஆணையம் உதவுகிறது.  இதற்காக மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் பல்வேறு குழுக்கள் அமைத்துப் பேரிடர் காலங்களில் செயலாற்ற பேரிடர் மேலாண்மை ஆணையம் வழிவகை செய்துள்ளது. (இயல் - 2 -பெருமழைக்காலம் - வினா பக் : 43 ) 


38. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து 

      இருப்பவை : 

               ‘இந்திய சராசானிக் கட்டடக் கலை’ பாணியில் கட்டப்பட்ட மத்திய தொடர்வண்டி நிலையம், தென்னக தொடர்வண்டி தலைமையகம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், பொது அஞ்சல் அலுவலகம், உயர் நீதிமன்றம், சென்னைப் பல்கலைக்கழகம், ரிப்பன் கட்டடம்ர விக்டோரியா அரங்கு, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று வழங்கப்படும் ‘மெட்ராஸ் ரெக்கார்டு ஆபீஸ்’, எழும்பூர் மற்றும் கோட்டை அருங்காட்சியங்கள், கன்னிமாரா நூலகம், திரைப்படத் தொழில் சார்ந்த இடங்களும் திரையரங்குகளும் சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில்  இன்றும் நிலைத்து இருப்பவை ஆகும். (இயல் - 5 -மதராசப்பட்டினம் - வினா பக் : 125)


பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக                                                  3 x 4 = 12

39.சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் 

     ஏமப் புணையைச் சுடும்” 

இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வருகிறது. 

அணியிலக்கணம்: 

         கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி அதற்கு ஏற்ப இணையானதொரு  பொருளை உருவகம் செய்யாது விட்டு விடுவது ஏகதேச உருவக அணியாகும்.  

சான்று  விளக்கம்: 

   சினம் தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாது அவனைச் சேர்ந்த சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். தன்னைச் சேர்ந்த வரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம் நம்மை மட்டுமல்லாமல் நமக்குப் பாதுகாப்பாக இருக்க கூடிய இனம் என்னும் வெப்பத்தை அழித்துவிடும். 

அணிப் பொருத்தம்:  

இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள  வள்ளுவர் சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே, இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.(இயல் - 3 வாழ்வியல் - திருக்குறள் - வினா பக் : 78)

அல்லது


நிரல் நிறை அணி 

அணி இலக்கணம்: 

           ஒரு செய்யுளில் முதலில் ஒரு சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள்கொள்ளும் முறை நிரல் நிறை ஆகும். அதாவது சிலசொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து அதனோடு

தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறை மாறாமல் சொல்வது நிரல் நிறை அணி ஆகும்.

சான்று :  

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

  பண்பும் பயனும் அது” 

விளக்கம்:  

     இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும்.

அணிப்பொருத்தம்:  

      இக்குறட்பாவில் அன்பு, அரண் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே, இந்தத் திருக்குறள் நிரல் நிறை அணி ஆகும்.(இயல் - 3 வாழ்வியல் - திருக்குறள் - வினா பக் : 78)


40. அ) "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" 

பழமொழி விளக்கம்:

          உடன்வாழ்கின்றவர்களுடனும், சொந்தங்களுடனும் நாம் எப்போதும் குறைகளை மட்டுமே கண்டுபிடித்து அதனை மட்டுமே சுட்டிக்காட்டி நாம் நல்லவர்களாக இருப்பது போன்று நடந்து கொண்டோம் என்றால், நமக்கு என்று ஒரு சொந்தமும் இருக்காது. 

வாழ்வியல் நிகழ்வு:

          என் அம்மாவின் அண்ணன் கோபால் மிகவும் சுறுசுறுப்பானவர். குடும்பங்களில் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு எல்லா காரியங்களையும் முன்னின்று நடத்துவார். அவரிடம் இருக்கும் ஓரே தீயகுணம் அவர் செய்வது மட்டுமே சரி என்றும் அடுத்தவர்கள் செய்வது எல்லாம் தவறானது என்றும் எண்ணுவதாகும். 

          தன் சுற்றத்தார் எதைச் செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதும் குறை காண்பதுமே அவரது வழக்கம். சுற்றத்தாரிடம் இனிய சொற்களைப் பேசாமல் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருக்கும் இவரது இக்குணத்தால் சுற்றத்தார் அனைவரும் இவருடன் அதிகமாகப் பேசுவது கிடையாது. ஏனென்றால் பேசினால் கூட அதில் குறை கண்டுபிடிக்கும் மனநிலையுடன் அவர் காணப்பட்டார். ஆனால் சுற்றத்தாரின் அத்தனை விசேசங்களுக்கும் வந்து நின்று எல்லா காரியங்களையும் நடத்திக் கொடுப்பார். 

         அவருடைய மகனின் திருமண விழாவிற்குச் சொந்தங்களுக்கு அழைப்புக் கொடுத்திருந்தார். திருமணத்திற்கு முன்தினம் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தன் சொந்தங்கள் எல்லோரும் வந்து நின்று சிறப்பாக நடத்தித் தருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் சுற்றத்தாரில் ஒருவர் கூட அந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. என்ன காரணம் என விசாரித்த போது அவர் வீட்டிற்குச் சென்று நாம் எதாவது செய்தால் குறையும், குற்றமும் கண்டுபிடித்துத் திட்டிக் கொண்டே இருப்பார் என்று நினைத்து ஒருவரும் செல்லவில்லை. குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லாமல் தனியாக எல்லா வேலைகளையும் செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார் கோபால்.

நீதி : சொந்தங்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களைத்  திருத்துவது நல்லது. அதற்காக எப்போதும் குறை கூறிக் கொண்டிருந்தால் ஒரு சொந்தமும் நம்முடன் இருக்காது.(இயல் - 4- மொழியை ஆள்வோம்  - வினா பக் : 103)

அல்லது 

ஆ) “ஊழி பெயரினும் தாம் பெயரார்” 

பழமொழி விளக்கம் :

            சான்றாண்மை என்னும் குணம் உடையவர்கள் உலகமே அழியும் ஊழி காலம் வந்தாலும் தம் நிலையிலிருந்து வேறுபடாமல் இருப்பர்

வாழ்வியல் நிகழ்வு: 

                   என் மாமா வேதமாணிக்கம் மிகவும் அன்பானவர் உண்மையானவர் நேர்மையானவர் எங்கள் ஊரில் அவருக்கு என்று சிறப்பான பெயர்களும் உண்டு. எச்சூழ்நிலையிலும் தன் சான்றாண்மை என்னும் குணத்தில் இருந்து அவர் வேறுபட்டது இல்லை. அவருடைய சொல்லுக்கு எங்கள் கிராமமே கட்டுப்படும் அந்த அளவிற்கு நல்ல குணம் உடையவர். எங்கள் கிராமத்துக்கு உட்பட்ட பஞ்சாயத்து தேர்தல் வந்தது எங்கள் பக்கத்து கிராமத்தைச் சார்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகச்  செய்தி வந்தது எங்கள் கிராமத்தைச் சார்ந்த படித்த பண்புள்ள இளைஞன் ஒருவரும் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தான். 

                ஆண்டு முழுவதும் மழை இல்லாததால் விவசாயம் நடைபெறவில்லை, என் மாமாவின் மகள் திருமணம் இன்னும்  ஒரு மாத காலத்தில் நடக்க இருந்தது இதனை அறிந்த பக்கத்து கிராமத்தைச் சார்ந்த போட்டியாளர்  என் மாமாவிற்குத்  தூது அனுப்பி, அவர் மகளின் திருமணத்திற்கு உரிய செலவு அத்தனையும் தானே ஏற்பதோடு இன்னும் அதிகமாகப்  பணம் தருவதாக வாக்குறுதி கொடுத்தும்  தேர்தலில் தனக்குச்  சாதகமாக ஊர் மக்களை வாக்களிக்குமாறு கூறவேண்டும் என்றும் கூறி ஆள்  அனுப்பி இருந்தார்.  அவ்வாறு நடைபெறவில்லை எனில் அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். 

               என் மாமா  என்ன நடந்தாலும் பரவாயில்லை உண்மையான நபருக்கே  வாக்களிக்க வேண்டும் என்றும், என் உயிர் போவது பற்றி கவலை இல்லை என்றும், என் மகளின் திருமணம் மிக சிறப்பாக நடக்கும் என்றும் கூறினார் “ஊழி பெயரினும் தாம்பெயராமல் தன்  சான்றாண்மையை  அவர் வெளிப்படுத்தினார்.

நீதி :  சான்றாண்மை என்னும் குணம் படைத்தவர்கள்  சுயநலத்திற்காகத்  தான் கொண்ட கொள்கையில் இருந்து ஒரு நாளும் நிலைதடுமாற மாட்டார்கள்.

                        (இயல் - 4- மொழியை ஆள்வோம்  - வினா பக் : 103)


41.பாநயம் பாராட்டுக:

‘தமிழே இனிமை'

முன்னுரை:

      இப்பாடலைப் பாடியவர் நாமக்கல் கவிஞர் ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் வழிநடைப் பாடலை எழுதிய கவிஞர் எழுதியுள்ள இப்பாடலில் காணப்படும் நயங்களைக் காண்போம்.

மையக்கருத்து :

       தான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழியே சிறந்த மொழி என்றுரைக்கின்ற மகாகவி பாரதி நம்முடைய ஆசான்.

சொல்நயம் :

       இப்பாடலில் அடைச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்,கவிஞர்,

                  சான்று: 

                           i) அன்புரையால்

                          ii) உலுங்க வைத்திவ்வுலகம்

                         iii) தெற்றென 

                         iv) ஆசான்

பொருள்நயம்:

          தமிழின் பெருமையை உணர்ந்தவர் பாரதி. நாமோ தமிழைப் புறக்கணிக்கின்றோம். தமிழின் தனித்தன்மையை உணர்ந்த பாரதி தமிழ்மொழிபோலத் தரணியிலே சிறந்த

மொழி இல்லை என்கிறார். தமிழில் சிறந்த கவிஞர்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார். பாரதியின் சிறப்பையும், தமிழின் பெருமையையும் திறம்படக் கவிஞர் எடுத்துக் கூறுகின்றார்.

தொடைநயம்:

         பாடலில் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பது தொடையாகும்.

மோனை நயம்:

        பாடலின் சீர்களிலோ, அடிகளிலோ முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனையாகும். இப்பாடலில் சீர்மோனை பயின்று வந்துள்ளது .

சான்று : 

     பெற்றெடுத்த - பின்னால் - பிறமொழிக்கு-  பிழையை

     ஊற்றெடுத்தே-லுங்க -  லகத்தில் - ண்டோ 

     ற்றுணந்தே - காண்பாய் - ம்பனொடு - காட்டி

     தெற்றெனநம் - திறந்து -  தெய்வக்கவி - திண்ணம்.

எதுகை நயம்:

          பாடலின் சீர்தோறும் அல்லது அடிதோறும். முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து என்றிவருவது எதுகை எனப்படும்.

       இப்பாடலில் சீர்எதுகை மற்றும் அடிஎதுகை பயின்று வந்துள்ளது.

சீர்எதுகை:

         தெற்றெனநம் -  திந்து

அடிஎதுகை:

         பெற்றெடுத்த

         கற்றுணர்ந்த 

         தெற்றென

சந்தநயம்:

         இப்பாடலை ஏற்ற இசைக்கருவியுடன் . இசைத்துப் பாடினால் பாடுவோருக்கும் கேட்பவருக்கும். மிகுந்த கவி இன்பத்தைத் தரும் சந்த நயங்களுடன் கவிஞர் இப்பாடலை இயற்றியுள்ளார். இப்பாடல் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்த வகையைச் சர்ந்தது. இப்பாடல் அகவலோசையில் அமைந்துள்ளது.

அணிநயம்:

            1) இப்பாடலில் தமிழ்மொழியைத் தாயாக உருவகம் 

                செய்துள்ளதால் உருவக அணி இடம்பெற்றுள்ளது. 

           2) தமிழ் மொழி மற்றும்  பாரதியார் பற்றி மிகவும் உயர்வாக 

               எடுத்துக் கூறுவதால் இப்பாடலில் உயர்வு நவிற்சி அணி 

               இடம் பெற்றுள்ளது.

சுவைநயம்:

         தமிழ்மொழியின் பெருமையையும், பாரதியாரின் பெருமையையும் பற்றி இப்பாடல் உரைப்பதால் இப்பாடலில் பெருமிதச் சுவை அமைந்துள்ளது.

முடிவுரை:

      “காலம் கவிஞனைக் கொன்றது; ஆனால் அவன் கவிதை காலத்தை வென்றது” என்ற கூற்றிற்கு ஏற்ப நாமக்கல் கவிஞர் இக்கவிதையில் கவிதைக்குரிய நயங்களை எல்லாம் அமைத்து கவிநயங்களால் தமிழன்னைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

              (இயல் - 3 - மொழியை ஆள்வோம்  - வினா பக் : 70)

( மாணாக்கரே ! 

கேள்வியைக் கவனித்து எத்தனை  நயங்கள் கேட்கப்பட்டிருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும்   எழுதினால் போதுமானதாகும்.)


42. தமிழாக்கம் தருக

                   அ) புதிய மொழி புதிய வாழ்க்கை.

               ஆ) என் மொழியின் எல்லை என் உலகத்தில் எல்லை.

               இ) கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பு

               ஈ) பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேசு.

            (இயல் - 1 - மொழியை ஆள்வோம்  - வினா பக் : 20 )


43. அழைப்பிதழைப் பத்தியாக்குதல் : 

            சென்னை, கலைவாணர் அரங்கத்தில் அக்டோபர் 2 ஆம் நாள் அன்று பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

           நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும்.செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் திருமதி அரசி வரவேற்புரை நல்க, இயற்கை வேளாண் உழவர் திரு. அமுதன் அவர்கள் முன்னிலை வகிப்பார். பேரிடர் மேலாண்மை இயக்குநர் திரு. இமயவரம்பன் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று உரையாற்றுவார்.

          தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெறும். அதில் ‘இயற்கைச் சீற்றங்களும்  பருவ மாற்றங்களும்’  என்னும் தலைப்பில்  முனைவர் செங்குட்டுவன் அவர்களும் , ‘பேரிடர்களை எதிர்கொள்ளுதலும் தீர்வுகளும்’ என்னும் தலைப்பில் திரு. முகிலன் அவர்களும், ‘நீர்வழிப் பாதைகளைப் பாதுகாத்தல்’ என்னும் தலைப்பில் திருமதி பாத்திமா அவர்களும், ‘பேரிடர்க் காலங்களில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்’ என்னும் தலைப்பில் திரு. வின்செண்ட் அவர்களும் கருத்துரை வழங்குவர்.

           பசுமைப்படை மாணவர் தலைவர் பர்வீன் நன்றி நவின்ற பின் நாட்டுப் பண்ணுடன் கூட்டம் நிறைவடையும். (இயல் - 2 - மொழியை ஆள்வோம்  - வினா பக் : 45 )


பகுதி –  4

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் 

விடை தருக.                                                                                                                3 x 6 = 18

                                                                                               

44.அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன் பிற உயிர்களுடன் 

          கொண்டிருந்த   உறவு நிலை:


                   இராமன் அனைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பண்பின் அடையாளமாக விளங்குகின்றான். தந்தை, தாய் மீதான அன்பு, உடன்பிறப்புகள் மீது அன்பு ஆகியவற்றை எல்லைகள் அனைத்தையும் கடந்து இராமன் விரிவுபடுத்துகிறான். வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வேலிகள் அவன் அன்பிற்குத் தடையாக இருக்கவில்லை. 

மகன் என்ற உறவு நிலை: 

  • சீதையை இராவணன் சிறை எடுத்துச் சென்றபொது அதனைத்தடுத்து இராவணனுடன் போரிட்டு, காயமடைந்து பின் உயிர் துறந்தான் சடாயு.

            இதனைக் கேள்விப்பட்ட இராமன் மிகுந்த வருத்தமடைந்தான்.

  • தன் தந்தை தசரதனின் நண்பனான சடாயுவைத் தன் தந்தையாகக் கருதி, தந்தைக்கு மகன் செய்யும் இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்தான்.

  • தன்னையே நினைத்துத் தவம் செய்து கொண்டிருந்த எளிய முதியவளான சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.

  • அவள் இராமனைப் பார்த்ததால் தான் மேற்கொண்ட தவம் பலித்தது என்று கூறி இனிய உணவினை விருந்தாகப் படைத்தாள். 

  • அவள் அன்பில் மனம் மகிழ்ந்த இராமன் தன் தாயாக அவளை நினைத்து. மகன் தாய்க்குச் செலுத்தும் அன்பைச் செலுத்தினான். 

 உடன்பிறப்பு என்ற உறவுநிலை:

  • தன்மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்த குகன். தன்னைப் பிரிய மனமில்லாமல் வருந்துவதை இராமன் அறிகின்றான்.

  • இராமன் குகனிடம் "முன்பு உடன் பிறந்தவர்கள் நான்குபேராக இருந்தோம். இப்போது உன்னையும் சேர்த்து ஐந்து பேராக உள்ளோம்" என்றான். 

  • இலங்கை சென்ற இராவனனுடன் கடும்போர்புரிந்து திரும்பிய சுக்ரீவனின் செயலைக் கண்டு வியந்த இராமன் சுக்ரீவனிடம் நீ வேறு நான் வேறல்ல என்று கூறுகின்றான்.

  • சீதையைக் கவர்ந்து வந்த இராவணனின் செயலைக் கண்டித்தான் வீடணன். இராவணன் அவனைக் கடிந்து கொண்டதால் இலங்கையை விட்டு வெளியேறிய வீடணன் இராமனிடம் அடைக்கலமானான். 

  • வீடணனுக்கு இலங்கையை ஆளும் உரிமையைக் கொடுத்ததுடன் அவனையும் தன் உடன்பிறப்பாக இராமன் ஏற்றுக் கொள்கின்றான். 

இவ்வாறாக இராமன் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய் மீது அன்பு கொண்ட சேயாய், உயிர்தரும் நண்பனாய், உரிமையை வழங்கும் உடன்பிறப்பாய் பிற உயிர்களுடன் உறவு கொண்டிருந்தான்.

                                   (இயல் - 3 - கம்பராமாயணம், வினா பக் : 69 )

 அல்லது


ஆ)  செய்ந்நன்றியறிதலே அறம்:

ஈடில்லா உதவி:

  • ஒருவன் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையிலும் அவர் நமக்குச் சரியான நேரத்தில் ஏதேனும் உதவி செய்தால், அந்த உதவிக்குக் கைம்மாறாக இந்த நிலவுலகத்தையும், வானுலகத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது. 

உலகினும் பெரிய உதவி:

  • ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும். 

பயன் எதிர்பாராத உதவி:

  • ஒருவர் எந்தப் பயனையும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்காமல் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும். 

உதவியின் பயன் பனையளவு:

  • ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அந்த உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவு உதவியையும் பனையளவாகக் கொண்டு போற்றுவர். 

அறத்தை அறிக:

  • ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஆனால் ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்போழுதே மறந்துவிட வேண்டும்.

தப்பிக்க கூடுதல் வழி:

  • ஒருவர் எந்த அறத்தை அழித்தாலும் அதிலிருந்து தப்பிப் பிழைக்க வாய்ப்பு உண்டு. ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து தப்பிப்பிழைக்கும் வழியே கிடையாது. 

         இயல் - 3 - வாழ்வியல் - திருக்குறள்,வினா பக் : 78 )


45.அ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள்

                 கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளில்

                                        1. ஒலிக்கோலங்கள்

                                        2. சொற்புலம் 

                                        3. தொடரியல் போக்குகள்

   ஆகியவை மிக முக்கியமானவையாகும். 

ஒலிக்கோலம்:

            இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்

ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப்பின்னல்) என்பர்

  • வன்மை உணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.

             சான்று: கடந்தடு தானை…… (புறம்:110)

  • இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்

             சான்று: படாஅம் ஈத்த…. (புறம்:145)

  • சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்பவரும் தன்மையும் உண்டு.

             சான்று: புணரின் புணராது…..(நற்:16)

  • சொல்விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் இடம்பெறுவது உண்டு.

             சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை….(புறம்:290)

இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க பண்புகளாகும்.

சொற்புலம்:

  • உணர்வும், பொருளும், கலையும், பண்பாடும், வரலாறும், அரசியலும் சொற்களில் பொதிந்து கிடக்கின்றன. 

  • ஒரு பொருள் குறித்து வரும் பல சொற்களும், பல பொருள் குறித்து வரும் ஒரு சொல்லும் சொல் வளத்திற்குச் சான்று. 

  • பல்வேறு துறைகள், சூழல்கள், புனைவுகளுக்கும் உரிய வகையில் உணர்வும் தெளிவும் கொண்டதாகச் செழிப்பானதொரு தளத்தைச் சொல் கொண்டிருக்கிறது. 

  • தனிச்சொல்லாகவும், தொகை மொழியாகவும் சொற்கள் இயங்குகின்றன. 

தொடரியல் போக்குகள்:

  • பாடலின் தளத்தை முழுமையடைய செய்வது தொடரியல் போக்காகும்.

  • சொல்பவனுடைய மொழித்திறனை, கேட்பவன் அல்லது வாசிப்பவன் முழுமையாகப் பெற வேண்டும்.

  • சொல்லப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள்

                         i)  நேர் நடந்தும்

                          ii)  ஏறியிறங்கியும்

                          III) திரும்பியும் சுழன்றும் - இயங்கும்

    இவையே கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் ஆகும்.

                        ( இயல் - 1 - தமிழ்மொழியின் நடைஅழகியல் ,வினா பக் : 19 )


(அல்லது)                                                              

ஆ) பண்டைக்கால கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்கள் இடையே நிகழ்ந்த  

          கற்றல் கற்பித்தல் முறைகள்:

 முன்னுரை:

      கல்வியும் அதன் நோக்கமும் கல்விக்கூட அமைப்பும் கற்பிக்கும் முறைகளும் காலம்தோறும் மாற்றம் அடைகின்றன. பண்டைய காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்கள் இடையே நிகழ்ந்த கற்றல் கற்பித்தல் முறைகளை இங்குக் காண்போம்.

வித்தியாரம்பம்: 

  • பண்டைய காலத்தில் ‘மன்றம்’ என்றும் ‘அம்பலம்’ என்றும் அழைக்கப்படும் மரத்தடியில் உள்ள திண்ணையிலேயே கற்றல், கற்பித்தல் பணி இயற்கையோடு நடந்தது. 

  • முதன்முதலில் ஐந்தாம் வயதில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள். 

  • பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் காலம் ஒரு விசேட நாளாக கொண்டாடப்படும்.

  •  கல்வி பயிற்சிக்காக வரும் மாணவர்களிடம் ஏட்டின் மீது மஞ்சள் பூசி பூசித்து மாணவர்களிடம் வாசிக்கச் சொல்வார். இதனை அக்ஷராப்பியாசம் (எழுத்து அறிவித்தல்) என்பர்.

முறை வைப்பது:

  • ஏட்டின் மீது மஞ்சள் பூசி பூசித்து, பையனிடம் கொடுத்து வாசிக்கச் செய்வார்கள். 

  • உபாத்தியார் நெடுங்கணக்கைச் சொல்லிக்கொடுக்க மாணாக்கன் அதனை பின்பற்றி சொல்ல வேண்டும். 

  • இவ்வாறு உபாத்தியார் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்லும் “முறை வைப்பு” முறையில் கற்பித்தல் நடைபெற்றது.

மையாடல் விழா: 

  • சுவடிகளில் உள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு, மாவிலைக்கரி, முதலியவற்றைத் தடவுவார்கள். 

  • இங்ஙனம் மை தடவிய புத்தகத்தை வாசிக்க தொடங்குவதால் “மையாடல் விழா” என்று அழைக்கப்பட்டது. மையாடல் விழா மூலம் மாணவர்களுக்கு எழுத்துக்களை எழுதும் முறையை ஆசிரியர் கற்றுக் கொடுப்பார்.

எழுதுதல்:

  • ஆசிரியர் முதலில் தரையில் எழுத அதன் மேல் மாணாக்கர் எழுதுவர். 

  • இவ்வாறு எழுத்துக்களைக் கற்பித்தனர். 

  • மாணாக்கரும் எழுத்துக்களை வரிசையாகவும் நன்றாகவும் எழுத கற்றுக் கொண்டனர். 

  • பழைய காலத்தில் எழுத்துக்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல், வரி கோணாமல் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். 

  • புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரிஎழுத்தின் உறுப்புகள் ஆகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.

 மனனப்பயிற்சி: 

  • அடிப்படையான நூல்கள் எல்லாம் மாணவர்களுக்கு மனமாக இருக்கும். 

  • தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள், முதலியன மூலமாகவும் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூல்கள் மூலமாகவும் மனனம் செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். 

  • கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்ப்பாடுகள் மூலம் கற்பித்தல் நடைபெற்றது. 

  • எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடை கூறியும் வரும் முறையும் இருந்தது. 

  • சுவடியில் எழுத்துக்களை எழுதும் முறையையும் கற்றுக் கொடுத்தனர். 

  • மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர். 

அன்பினால் அடக்குதல்: 

  • முற்காலத்தில் ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள். 

  • கொடிய தண்டனைகள் இல்லை. 

  • அவர்கள் பால் இருந்த மரியாதை பயத்தை உண்டாக்கியது. 

வாதம் புரிதல்: 

  • கல்வியில் வாதம் புரிதல் நம் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இருந்தது. 

  • அரசவையில் கூட வாதுபுரியும் அளவிற்குக் கற்றல் முறைகள் இருந்தன. 

  • பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை 

          “வினாதல் வினாயவை  விடுதல் எனறிவை 

          கடனாக் கொளினே மடநனி இகக்கும்” என்ற நன்னூல் நூற்பாவால் அறியலாம்.

 ஞாபகசக்தி அதிகரித்தல்: 

  • ஞாபகசக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர், இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப, மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள்.

சாந்துணையும் கற்றல்: 

  • பள்ளிக்கூடத்திலிருந்து கற்கும் காலம் கடந்த பின்னர்,  பழைய காலத்தவர்கள் பின்பும் எங்கெங்கு கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருந்தார்களோ அங்கே சென்று அவரிடம் தாம் முன்பு கல்லாதவற்றைக் கற்று வந்தார்கள்.

முடிவுரை: 

        அந்நாளைய கற்பித்தல் முறைகளைப் பழையன என்று புறந்தள்ளி விடாமல் தேவையானவற்றைத்  தேர்ந்து பயன்படுத்தினால் அவை இன்றைய கல்விக்கு ஏற்ற உரமாக அமையும். ஏனெனில், மாணவனின் எல்லா திறமைகளையும் வளர்க்கும் விதமாகப் பண்டைய காலத்தில் கற்பித்தல் இருந்தது. மாணவர்களும் தங்களின் அறிவை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.

    ( இயல் - 4 - பண்டைய காலத்துப் பள்ளிக் கூடங்கள் ,வினா பக் : 101 )


46.“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன”

முன்னுரை :  

          இந்தியாவின் முதுகெலும்பு கிராமமாகும். அழகியல் தன்மையோடு விளங்கும் கிராமங்கள் இன்று தங்கள் அழகியலை இழந்து கிராமத்திற்கே உரிய இலக்கணங்களை இழந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தமது வடிவழகையும் இழந்து வருகின்றன. 

வாழ்வோடு இணைந்த கிராமம்:

        அதிகாலையில் எழும்பி வீட்டு முற்றத்தைத் தூய்மை செய்து, கோலமிட்டுக் கடவுளைத் தொழுது குதுகலாமாகப் பொழுதினைத் தொடங்கும் வாழ்க்கை கிராம மக்களின் வாழ்வோடு இணைந்திருந்தது. ஏலேலோ பாடும் கிராமத் தென்றலில் தாலேலோ பாடி விவசாயம் செய்த காலம் மலையேற, கணினியில் கானல் நீராய் நம் கிராம மக்களின் வாழ்க்கையும் கரைந்தது. அந்தந்த கிராமத்தில் விளைந்ததை அங்கங்கே தின்று வாழ்ந்த காலத்தில் எந்த நோய்களும் தலை தூக்கியதில்லை. 

அழகை இழக்கும் கிராமங்கள்:

         இன்று பெருகி வரும் நகர்ப்புற நாகரிகத்தினால் கிராமங்கள் தங்கள் அழகை இழக்கின்றன. பாடித் திரிந்த பறவைகளின் ஒலிகள் இப்போது கேட்க முடியவில்லை. மனிதன் நகர்ப்புற நாகரிகத்தை நாடியதால் குளங்கள் குடியிருப்புகளாக மாறிவிட்டன. அகன்ற தெருக்களெல்லாம் தங்கள் இருப்பைச் சுருக்கிக் கொண்டன. கலாச்சார மாற்றங்களால் கூரை வேயப்பட்ட, ஓடுகளால் நிரம்பிய வீடுகள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தீப்பெட்டி போல மாற்றம் பெற்றுள்ளன. எல்லோரும் நீர் இறைக்கும் ஊர்க் கிணறு கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. 

முகவரி இழக்கும் கிராமங்கள்:

         கிராமங்களுக்கே உரித்தான நாட்டுப்புற விளையாட்டுகளை எல்லாம் இன்றைய அலைபேசிகளும், முகநூல்களும், புலனங்களும் முடக்கி விட்டன. பச்சைப்பசேலன வளர்ந்து நிற்கும் நெற்பயிரை இன்று காணமுடியவில்லை. உழுது உணவைத் தந்த வயல்கள் எல்லாம் இன்று குடியிருப்புகளுக்காக அளக்கப்பட்டு எல்லைக் கற்களால் பிரிக்கப்பட்டு வீடுகளாக மாற ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன.

நாகரிக மோகத்தால் அழியும் கிராமம்:

         கிராமத்திற்கே உரிய அன்பும், விருந்தோம்பல் பண்பும், வெள்ளந்தியான பழக்கமும் இன்று கொஞ்சம் கொஞ்சமாகத் தனது இயல்பை இழந்து வருகின்றது. கிராம மக்கள் நகர்ப்புற நாகரிகத்தின் மீது கொண்ட மோகத்தால் இயற்கையை இழந்து நகர்ப்புறம் தேடி வருவதும், ஊடகத்தாக்கமும், சமூக வலைத்தளங்களின் தாக்கமும் இயல்பான கிராம வாழ்க்கையை மாற்றி விடுகின்றன. ஒன்றுக்குள் ஒன்றாக உறவுகளாக இருக்கும் கிராம மக்கள் இன்று நாகரிக மோகத்தால் உறவுகளை மேம்படுத்தும் செயலில் இருந்தும் விலகி விடுகின்றனர்.

முடிவுரை :  

           இவ்வாறாக அமைதியான சூழலில் அன்பாக வாழ்ந்து வந்த கிராம மக்கள் தங்கள் இயல்பை மாற்ற விரும்புவதால், தாங்கள் பழகிய, ஓட்டி உறவாடிய கிராமத்தை விட்டு நகர்ப்புறம் செல்வதால் கிராமங்கள் தங்கள் அழகியலை இழப்பதுடன் கிராமங்களுக்கே உரிய இயற்கைத் தன்மையையும் இழந்து தங்களது முகவரியைத் தொலைத்து நகர்புறச் சாயலுடன் புத்துருவாக்கம் அடைகின்றன. 

       ( இயல் - 5 - தலைக்குளம் - புரிந்து எழுதும் வினா - வினா பக் : 125 )


 (அல்லது)

ஆ) பாரதியின் கடிதம் வாயிலாக அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று: 



மொழிப்பற்று:

  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். 

  • நெல்லையப்பரிடம் அவர் கூறும்போது, 'நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்ளவேண்டும்' என்று கூறுகின்றார். 

  • புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும். 

  • தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி அளிக்கப் பெற்று வளர வேண்டும். 

  • தாய் மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். 

  • பிறநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக் கொள்ள முயலவேண்டும். 

  • புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.

சமூகப்பற்று:

  • சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். 

  • ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும்.

  • "ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள், அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை", என்கிறார். 

  • பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். 

  • பெண்ணை வீட்டுக்குள்ளே அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார். 

  • சமூகம் வளர்ச்சி அடையத் தொழில் பெருக வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும் தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார்.

  • சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பு+மி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். 

  • நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும்

  • அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.



                          ( இயல் - 1 - தம்பி நெல்லையப்பருக்கு,  வினா பக் : 19 )


பகுதி- 5

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக                                                       4 + 2 = 6

47.அ) “ வையகம் பனிப்ப “   - எனத் தொடங்கும் நெடுநல்வாடை பாடல்

                    

               வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் 

               பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

               ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர் 

               ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் 

               புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் 

               நீடுஇதழ்க் கண்ணிநீர் அலைக்  கலவா

               மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன் 

               கைக்கொள் கொள்ளியர்  கவுள்புடையூஉ  நடுங்க

  ( இயல் - 2 -  நெடுல்நல்வாடை , பக் : 30 ) 


ஆ) ‘பொருள்’   என முடியும் திருக்குறள்:

 

             அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 

             வேண்டும் பிறன்கைப் பொருள்.

 ( இயல் - 3 - வாழ்வியல் - திருக்குறள் - வெஃகாமை , பக் : 74 )


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேனிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  📞9843448095



12th Standard- Tamil -
QUARTERLY EXAM - 2022-23 




12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE





மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)

முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


மாதிரி வினாத்தாள்-3 : Click Here


மாதிரி வினாத்தாள்-4 : Click Here


மாதிரி வினாத்தாள்-5 : Click Here


12 ஆம் வகுப்பு

பாநயம் பாரட்டல்

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here


12 ஆம் வகுப்பு
அணியிலக்கணம்

1. பொருள் வேற்றுமை அணி ,நிரல்நிறை அணி,
ஏகதேச உருவக அணி - Click Here


12 ஆம் வகுப்பு

மொழிப்பயிற்சி 

2 mark QUESTIONS  

இயல் 1,2,3                                                      : Click Here












Post a Comment

Previous Post Next Post